Last Updated : 22 Jan, 2015 03:05 PM

 

Published : 22 Jan 2015 03:05 PM
Last Updated : 22 Jan 2015 03:05 PM

விரும்பியே கட்டுப்பட்டோம்

வானில் கருத்த மேகங்களைப் பார்க்க நேர்ந்தால் நபிகளார் மிகுந்த பதற்றமடைவார்கள். அந்த பதற்றத்தில் தன்னிலை மறப்பார்கள். எந்த அளவுக்கு என்றால் அத்தகைய ஒரு தருணத்தில் தன் மேலங்கியை அணிய மறந்தவர்களாய் வானத்தையே மீண்டும் மீண்டும் பார்க்கலானார்கள்.

இறைவனின் அருளையும் தண்டனை யையும் பிரபஞ்ச விதிகளின் ஓட்டங்களையும் பற்றி ஆழ்ந்து உணர்ந்த புனித ஆன்மாவாக அண்ணலார் விளங்கியதாலும் மனித குலத்தின் மீதான அளவற்ற கரிசனம் கொண்டதாலும் இந்தப் பதற்ற நிலை அவர்களிடம் காணப்பட்டது.

மனிதனைத் தவிர அண்ட சராசரங்களில் உள்ள பூமி, கல், மண், நீர் நிலைகள், விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள், மரம், செடிகொடிகள், கோள்கள், நிலவு, கதிரவன் என அனைத்து படைப்புகளும் தன்னைப் படைத்தவனைப் பற்றிய நினைவிலும் துதிபாடலிலும் தொடர்ச்சியாக இணைந்திருக்கின்றன.

இறைவன் அவறுக்ற்கு விதித்த கட்டளைகளையும் இயல்பையும் அவை ஒரு போதும் மீறுவதில்லை.இதன் விளைவாக அவை பிரபஞ்சத்தின் தாள லயத்துடன் துளிகூடப் பிசகாமல் ஒத்திசைந்து இயங்குகின்றன.

“விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று வானத்துக்கும் பூமிக்கும் இறைவன் கூறினான். “விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின. { குர்ஆன் 41:11 }

இறைவனுடன் உள்ள இந்த அறுபடாத கண்ணியின் விளைவாக அவை பிரபஞ்சத்தினுள் பொதிந்திருக்கும் பல்வேறு விசைகளின் விதிகளையும் இயக்கங்களையும் நன்கு அறிந்திருக்கின்றன. இதன் விளைவாக அவற்றினால் பேரழிவை முற்கூட்டியே உணர முடிகின்றது.

மனிதர்கள் பாவங்களை அக்கிரமங்களை அநீதிகளைப் புரிவதன் வாயிலாகவும் தங்களுடைய ஆதி இயல்பை விட்டுப் பிறழ்வதோடு பிரபஞ்சத்தின் ஓட்டத்திலிருந்தும் விலகி விடுகின்றனர்.

இறுதியாக பிரபஞ்ச நாதனுடனான பிணைப்பையும் சிதைத்துக்கொள்கின்றனர். இதன் விளைவாகச் சிறியதும் பெரியதுமான பேரழிவுகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x