Published : 08 Jan 2015 03:04 PM
Last Updated : 08 Jan 2015 03:04 PM
இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் நேரடிச் சீடர் என்னும் பெருமைக்குரியவர் தமிழிசைக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் ப.முத்துக்குமாரசாமி. இவர், ஓவியங்களின் மூலம் தெய்வங்களை நமக்கு தரிசனப்படுத்தும் ஓவியர் பத்மவாசனின் தந்தை.
கடந்த டிசம்பர் 27 அன்று அண்ணாமலை மன்றத்தில் தனது மாணவர்களுடன் மேடையேறினார், எண்பது வயதைக் கடந்திருந்தாலும் தனது சாரீரத்தில் இளமையோடு இருக்கும் இந்த முதியவர்.
முத்துக்குமாரசாமி தனது குருவான தேசிகர், மதுரை மீனாட்சியம்மன் மீது பாடிய நவரத்னக் கீர்த்தனைகளை முத்தாய்ப்பாகப் பாட, உடன் இணைந்து அவரின் மாணவர்களும் பாடினர்.
அதோடு தண்டபாணி தேசிகர் பாடிப் பிரபலப்படுத்திய `தாமரை பூத்த தடாகமடி’ பாடலையும் `கல்யாண வசந்த மண்டபத்தில் எந்தன் கால் தூக்கி கண்ணன் அம்மிக் கல்லில் வைத்தானடி’, `பச்சைமால் மலைபோல் மேனி கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ…’ போன்ற பாடல்களையும் ரசிகர்களின் ரசனைக்கு உகந்த முறையில் பாடினார்.
கீ போர்டில் வெளிப்பட்ட சரஸ்வதி!
கர்னாடக இசை மேடைகளில் தவிர்க்கமுடியாத பக்கவாத்தியமாக வயலின் இன்றைக்கு மாறிவிட்டதைப்போல் எதிர்காலத்தில் கீபோர்ட் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திரை இசைப் பாடல்களை வாசிப்பதுபோல் கர்னாடக இசைக் கீர்த்தனைகளை கீபோர்டில் வாசிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் கடந்த 2-ம் தேதியன்று பாரதிய வித்யா பவனில் நடந்த மாலை நேரக் கச்சேரியில் அதை எளிதாக சாத்தியப்படுத்தினார் வி.வரலஷ்மி.
நாட்டையில் `மகாகணபதிம்’, பிருந்தாவனியில் `சுவாமி நாதெனா’, பெஹாக்கில் `ஆடும் சிதம்பரமோ…’ என அடுத்தடுத்து அவரின் கீபோர்டிலிருந்து பாடல்கள் பிரவாகமாய்ப் பொழிந்தன. கீபோர்டில் வாசிப்பதற்கேற்ற காம்பினேஷனைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்த காம்பினேஷன் உறுத்தலாக இல்லை. ஜி.என்.பி. இசை உலகுக்கு அளித்த `சரஸ்வதி நமோஸ்துதே’ வரலஷ்மியின் விரலசைப்பில் `கார்க்’ கீபோர்டிலும் ஜீவனோடு சரஸ்வதி ராகத்தை வெளிப்படுத்தமுடியும் என்பதை நிரூபித்தது. `வானனை’ என்னும் தேவாரப் பாடலை விஸ்தாரமாக வாசித்தது புதிய அனுபவத்தைத் தந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT