Published : 22 Jan 2015 01:33 PM
Last Updated : 22 Jan 2015 01:33 PM

புத்தரின் சொர்க்கம்

ஒருவன் தன்னை உணரும் சக்தியை அடைந்து விட்டால், அதுதான் அவன் அடைந்ததிலேயே பெரும் ஆற்றலாகும். உலகிலேயே பெரும் அற்புதமும் அதுதான். அவன் விரும்பும்போது இருக்கலாம். அவன் விரும்பாத போது சூன்யத்துக்குள் சென்று மறைந்துவிடலாம். தன்னை உணர்ந்த ஒருவனால் சூன்யத்துக்குள் மறையவும் முடியும். இருப்புக்குத் திரும்பவும் முடியும். எல்லாம் அவன் விருப்பமே.

புத்தரின் வாழ்க்கை பற்றி ஒரு கதை உண்டு. அவர் சொர்க்கத்தை அடைந்தபோது, வாயிற்காப்போன் அதன் கதவைத் திறந்து புத்தருக்கு வழிவிட்டான். புத்தரோ முதுகைத் திருப்பிக் கொண்டார். “அனைத்து மனிதர்களும் விடுதலையடைந்தால் மட்டுமே நான் சொர்க்கத்துக்குள் புகுவேன். எப்போது கடைசி மனிதன் விடுதலையடைந்து சொர்க்கத்துக்கு வருகிறானோ, அவனைப் பின்தொடர்ந்து நான் சொர்க்கத்துக்கு வருவேன்” என்று கூறி வாயிலிலேயே அமர்ந்துவிட்டார்.

இது மிக அழகான கதை. இந்த உலகில் தன்னை உணர்ந்து கொண்ட இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். இந்த இரண்டு வகை மனிதர்கள் எல்லா சமயங்களிலும் இருக்கின்றனர்.

ஒருவகையினர் சுயத்தை உணர்ந்த பிறகு சூன்யமாகி விடுகின்றனர். இன்னொரு வகை மனிதர்களோ மற்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த உலகவாழ்வில் இருக்கின்றனர்; முதல் வகை மனிதன் கைவல்யா என்று அழைக்கப் படுகிறான். ஜைனர்களின் நம்பிக்கைப்படி அவன் உச்சபட்ச தனிமையை அறிந்தவனாக உள்ளான். அப்படி நிறைய கைவல்யர்கள், ஞானத்தை அடைந்து சூன்யத்தில் மறைந்துவிடுவார்கள். அவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுகின்றனர். அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழைந்தும்விட்டனர். அவர்கள் வாயிலில் காத்திருப்பதில்லை.

சமணர்களைப் பொறுத்தவரை ஞானமடைந்த ஆன்மாக்களாக 24 தீர்த்தங்கரர்களைக் கருதுகின்றனர். இந்த 24 பேரும் புத்தரைப் போலவே வாயிலில் காத்திருப்பவர்கள். அவர்கள் சொர்க்கத்தின் வழியை மற்றவர்களுக்குக் காண்பிக்க உதவுவார்கள்.

பவுத்தத்தில் ஞானநிலையை அடைந்து சூன்யத்துக்குச் செல்பவர்களை அர்ஹத் என்றும், மற்றவர்களுக்கு ஞானநிலையை அடைய உதவுபவர்களை போதிசத்வர்கள் என்றும் அழைக்கின்றனர்.

நீங்கள் விரும்பும் ஞானநிலையை அடைந்துவிட்ட பிறகும் மற்றவர்களுக்கு உதவும் ஆசை இருப்பின்- மற்றவர்களுக்கு உதவ நினைப்பதும் ஆசைதான்- நீங்கள் காத்திருக்க வேண்டும். அந்த ஆசையையும் துறந்துவிட்டால் சூன்யத்தை அடைந்துவிடலாம்.

மற்றவர்கள் மீது பெரும் அன்பை வளர்த்துக் கொண்ட போதிசத்வர்களை உருவாக்கவே ஒரு உண்மையான குரு தனது சீடர்களுக்கு உதவுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x