Published : 25 Dec 2014 04:59 PM
Last Updated : 25 Dec 2014 04:59 PM
ஒருநாள் இரவு. ஜனாதிபதி உமர் தமது உதவியாளர் அஸ்லத்துடன் மதீனாவுக்கு வெளியே நகர்வலம் சென்று கொண்டிருந்தார். தொலைவில் ஓரிடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.
“யாரோ வழிப்போக்கராக இருப்பார்கள் போலும், அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள்!” என்றார் ஜனாதிபதி. இருவரும் அந்த இடத்தை அடைந்தார்கள்.
அங்கே ஒரு பெண்மணி அடுப்புக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றியும் குழந்தைகள். அடுப்பில் ஏதோ கொதித்துக்கொண்டிருந்தது. வெகுநேரமாகியும் அந்தப் பெண் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்குவதாயில்லை!
அந்தப் பெண்ணிடம் சென்ற ஜனாதிபதி ‘சலாம்’ சொல்லி அவளைக் குறித்து விசாரித்தார். “அய்யா, நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். ஜனாதிபதியிடம் நிதி உதவி பெற்று வரலாம் என்று நாங்கள் தலைநகர் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த கும்மிருட்டும், கடுங்குளிரும் எங்கள் பயணத்தைத் தடுத்துவிட்டன!” என்றாள் சோகத்துடன்
“அது சரி.. குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறார்களே!”
“இவர்கள் பசியோடு இருக்கிறார்களய்யா!”
“அந்தப் பாத்திரத்தில் வெந்துகொண்டிருப்பதை குழந்தைகளுக்குத் தரலாமே?”
“தரலாம்தான்! ஆனால், வெறும் தண்ணீரைத் தந்தால் குழந்தைகளின் பசியாறுமா?” என்று பரிதாபமாகக் கேட்டவள், தொடர்ந்து சொன்னாள்.
“ஆமாம் அடுப்பில் வெறும் தண்ணீர்தான் கொதித்துக்கொண்டிருக்கிறது! நான் சமையல் செய்கிறேன் என்று குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நேரத்தில் பசியின் களைப்பில் தூங்கிவிடுவார்கள். எல்லாம் என் விதி! இறைவன் எனக்கும் அந்த உமருக்கும் இடையில் தீர்ப்பு வழங்கும் நாள் வரத்தான் போகிறது. அன்று ஏழைகளை அலட்சியம் செய்த அவர் குறித்து இறைவனின் சந்நிதியில் முறையிடதான் போகிறேன்!”
தனது வறுமையின் கொடுமையை வார்த்தைகளாக்கிக் கொட்டித் தீர்த்தாள் அந்த ஏழைத் தாய்! அதிர்ந்துபோன ஜனாதிபதி உமர் தயங்கித் தயங்கிக் கேட்டார்: “அம்மா! உமருக்கு உங்கள் நிலைமை எப்படி தெரியும்?”
தன் முன் நிற்பவர் யார் என்பதைத் தெரியாமலேயே அந்தப் பெண் விருட்டென்று சொன்னாள். “குடிமக்களின் வாழ்க்கை நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியாத ஒருவர் ஏன் ஜனாதிபதி பொறுப்பை வகிக்க வேண்டும்?”
இந்தக் கேள்வி ஜனாதிபதியை அதிர்ச்சியடைய வைத்தது. நெஞ்சில் மறுமையைக் குறித்த பேரச்சத்தை உருவாக்கியது. அருகிலிருந்த உதவியாளரிடம், “அஸ்லம்! வாருங்கள் போவோம்!” என்று மெல்லிய குரலில் சொன்னார்.
அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவர் பைத்துல்மால் எனப்படும் பொதுநிதியிலிருந்து ஒரு மூட்டை மாவையும், சிறிதளவு கொழுப்பையும் எடுத்துக் கொண்டார். அந்த மூட்டையை முதுகில் சுமந்தவாறு நடக்கலானார்.
இதைக் கண்ட உதவியாளர் அஸ்லம் பதற்றத்துடன், “ஜனாதிபதி அவர்களே! அந்த மூட்டையை இப்படிக் கொடுங்கள்! நான் சுமந்து வருகின்றேன்!” என்றார்.
“வேண்டாம்!” என்று கனத்த இதயத்துடன் சொன்ன ஜனாதிபதி உமர் கண்ணீர் திரையிடச் சொன்னார். “நாளை மறுமையில், என் பாவச் சுமைகளை உம்மால் சுமக்க முடியுமா அஸ்லம்?”
அந்தச் சுமையைச் சுமந்துகொண்டு பெண்மணி இருந்த இடத்துக்கு சென்றவர், மூட்டையை அந்த ஏழைத் தாயின் அருகில் வைத்தார். அடுப்பை மூட்டி ரொட்டி சமைக்க உதவி செய்தார். பிறகு சமைக்கப்பட்ட ரொட்டிகளைத் தன் கைப்பட அவர்களுக்குப் பறிமாறினார். ஏழைப் பெண்ணும், அவளது குழந்தைகளும் பசியாறும்வரை பொறுமையுடன் பார்த்திருந்தார்.
புறப்படும்போது அந்தப் பெண்மணி இப்படி சொன்னாள். “அய்யா! இறைவன் உங்கள் மீது நல்லருள் பொழிவானாக! தற்போது எங்களை ஆளும் ஜனாதிபதியைவிட நீங்கள்தான் அந்தப் பொறுப்புக்கு முற்றிலும் தகுதியானவர்!”
சற்று தொலைவு சென்றபின் அவர்கள் தூங்கும்வரை மறைந்திருந்து கண்காணித்த ஜனாதிபதி உமர் தமது உதவியாளரிடம் இப்படிச் சொன்னார். “ஆஹா..! அவர்கள் எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறார்கள் பாருங்கள் அஸ்லம்! இதற்கு நீங்களே சாட்சி! நானும் இந்தக் காட்சியை கண்ணாரக் காண்கின்றேன்!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT