Published : 04 Dec 2014 11:58 AM
Last Updated : 04 Dec 2014 11:58 AM
ஒரு பிரபலமான ஜென் குரு குன்றின் மீது வாழ்ந்து வந்தார். அவரைத் தேடி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்து செல்வார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ‘வாழ்க்கையை எப்படி வாழ்வது? ‘ என்ற கேள்விக்கு விடையை அறிந்துவர ஜென்குருவைத் தேடி குன்றில் வந்து கொண்டிருந்தான். மலையேற்றம் என்பது அவனுக்குப் புதிய அனுபவம். மூச்சிரைத்துச் சோர்ந்து போனான். எப்படியும் ஜென் குருவைச் சந்தித்துவிடுவது என்ற ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறிவிட்டான்.
இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில் ஒரு அழகிய சிறிய மடாலயம் கண்ணில் பட்டது. அவன் மனத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. கோயில் படியில் அமர்ந்தான். குளிர்ந்த காற்று அவனைக் குளிப்பாட்டியது. சில்வண்டு களின் சத்தத்தின் பின்னணியில் குயிலோசை அவனைத் தாலாட்டியது. இயற்கை இன்பத்தில் கரைந்துபோய், தன் கேள்வியையே மறந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டான்.
அப்போது ஓர் இளம் ஜென் குரு கண்ணில் பட்டார்.
“வணக்கம் ஐயா. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு விடையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள குருவைப் பார்க்க வந்தேன் “ என்றான்.
“ ஓ அப்படியா. குரு தியானத்தில் இருக்கிறார். முன் அறையில் அமர்ந்து காத்திருங்கள். சிறிது நேரத்தில் வந்து விடுவார்.” என்றவர், ஒரு கோப்பை நிறைய சூடான தேநீரை ஊற்றிக் கொடுத்தார்.
மடாலயத்தின் எளிமையும் ஆழ்ந்த மௌனமும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதில் சூடான தேநீரைக் குடிக்க இளைஞன் மறந்தே போனான். அது ஆறிப்போய் விட்டது.
சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார். அவன் எழுந்து நின்று வணங்கினான்.குருவின் கண்களில் கனிவும் நடையில் மென்மையும் குடிகொண்டிருந்தன.
“ வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்” என்றான். அவன் குரல் கெஞ்சுவது போல இருந்தது. குரு லேசாகப் புன்னகை செய்தார். “ உன் கோப்பையில் உள்ள தேநீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் ஊற்றிவிடு” என்றார்.
அவன் அப்படியே செய்தான். குரு அந்தக் கோப்பையில் சூடான தேநீரை ஊற்றி நிரப்பினார். அவன் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் அவர் கோயிலுக்குள் சென்றுவிட்டார்.
அவன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். சோர்வுடன் படியிறங்கினான். வழியில் அவன் முன்பு சந்தித்த அதே இளம் துறவியைக் கண்டான்.
அவர், இளைஞனின் கேள்விக்குப் பதில் கிடைத்ததா என்று கேட்டார்.
இல்லையென்று இளைஞன் வருத்தத்துடன் நடந்ததைச் சொன்னான்.
குருதான் சரியான பதிலைச் சொல்லிவிட்டாரே என்றான் சீடன்.
“ஜென் என்றால், அந்தந்த வினாடியில் வாழ்வது என்று பொருள். மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப்போன எண்ணங்களோடு வாழாமல், இந்தப் பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை. இதைத்தான் குரு உனக்குச் செய்து காட்டியிருக்கிறார்.”
அந்த இளைஞன் ஜென் மனநிலைக்குள் கரையத் தொடங்கினான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT