Last Updated : 17 Apr, 2014 11:03 AM

 

Published : 17 Apr 2014 11:03 AM
Last Updated : 17 Apr 2014 11:03 AM

புத்தர் வாழ்வில்: கருணை உள்ளம் என்ற பொக்கிஷம்

புத்தர் பொதுவாகத் தன் கருத்துகளைக் கதைகள் மூலம் விளக்குவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு கதை காசியின் அரசனைப் பற்றியது.

அந்த அரசன் நல்ல பலசாலி. ஒரு முறை கோசலை நாட்டின் மீது அவர் படையெடுத்தார். கோசலை நாட்டின் அரசனும் அரசியும் ஓடிப் போய் ஒரு குயவர் வீட்டில் ஒளிந்துகொண்டார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் திகவு.

ஆனால், சில ஆண்டுகளிலேயே கோசலை அரசன் ஒளிந்திருக்கும் ரகசியம் வெளியே தெரிந்துவிட்டது. கோசலை நாட்டு அரசனையும் அரசியையும் காசி அரசன் கைது செய்தார். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டபோது கோசலை அரசன், தனக்கு எதிரே இருந்த கூட்டத்தில் தன் மகனும் நிற்பதைக் கண்டார். தூக்கு மரத்தில் ஏறுவதற்கு முன் அவர் தன் மகனிடம், "வெறுப்பை அன்பினால் வெல்லலாம்" என்றார்.

திகவு வளர்ந்து நல்ல பாடகனாக மாறினான். அவனுடைய புகழ் எட்டுத் திசையும் பரவியது. காசி மன்னர் அவனைத் தன்னுடைய அரசவையில் சேர்த்துக்கொண்டார். மெல்ல மெல்ல திகவு அரசனின் நன்மதிப்பைப் பெற்றான். உயர்ந்த பதவியும் கிடைத்தது. ஒரு நாள் திகவு அரசனுடன் வேட்டைக்குச் சென்றான். காட்டில் யாருமே இல்லாத ஓர் இடத்தில் அரசன் களைத்துப் போய் உறங்கிவிட்டார். திகவு தன் வாளை உருவினான். "நீ என்னுடைய தாய்-தந்தையைக் காரணமில்லாமல் கொலை செய்தாய். இதோ உன்னையும் எமனிடம் அனுப்பிவிட முடியும்" என்று உரத்த குரலில் சொன்னான்.

அப்போது திகவுக்குத் தன்னுடைய தந்தை கடைசியாகக் கூறிய வார்த்தை, திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அவன் அரசனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

அவனுடைய இந்தச் செய்கை அரசரின் மனதை மாற்றியது. அவருக்கு உண்மை புரிந்தது. திகவுக்கு தன் அரச பதவியைக் கொடுத்துவிட்டுப் பதவியைத் துறந்தார். தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்.

புத்தர் இந்தக் கதையைக் கூறி, எப்போதும் திகவு போல கருணை உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போதிப்பார்.

நான் வாங்கிக்கொள்ளவில்லை

ஒரு முறை புத்தரைப் பிடிக்காத ஓர் இளைஞன் புத்தரைத் திட்ட ஆரம்பித்தான். புத்தர் எதுவும் பேசாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் பேசி முடித்ததும் புத்தர் அமைதியாகக் கேட்டார், "மகனே நீ யாருக்காவது ஒரு பொருளை தானம் செய்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், நீ தானம் செய்ததை, எதிரே இருப்பவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன ஆகும்? அப்போது அந்தப் பொருள் யாரிடம் இருக்கும்?"

"தானம் கொடுக்க நினைத்தவரிடம்தான் இருக்கும்" என்று அந்த இளைஞன் கூறினான்.

"அப்படியானால் நானும் உன் வசவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. குரலின் எதிரொலி குரலைப் போலத்தான் இருக்கும். ஒரு பொருளின் நிழல் அதை ஒத்ததாகவே இருக்கும். அதேபோல கெடுதல் செய்தால், கெடுதல்தான் கிடைக்கும்" என்றார் புத்தர்.

கௌதம புத்தர் எப்போதும் இடைப்பட்ட வழியையே பின்பற்ற வலியுறுத்துவார். இனிய இசையைத் தரும் வீணையுடன் இதை அவர் ஒப்பிடுவார். வீணையின் தந்திகளை இறுக்கிக் கட்டினால், அவை அறுந்துவிடும். மிகவும் தொய்வாக விட்டாலோ, அதன் ஸ்வரம் கெட்டுவிடும். தந்தியைக் கச்சிதமான இறுக்கத்தில் கட்ட வேண்டும், அப்போதுதான் வீணை நன்றாக இசைக்கும் என்பார் புத்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x