Published : 18 Dec 2014 12:45 PM
Last Updated : 18 Dec 2014 12:45 PM
திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அஷ்டதிக் பாலகர்கள் போல ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லிங்கங்களாய் அமைந்துள்ளதைப் பற்றிச் சென்ற வாரம் பார்த்தோம். எட்டு லிங்கங்களை வழிபடுவதால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
இஷ்டம் பூர்த்தி செய்யும் இந்திர லிங்கம்
வேதபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து நேர் கிழக்காக இந்திரனால் பூஜை செய்யப்பட்ட இறைத்திருமேனி சிவலிங்க வடிவில் இருக்கும் இடமே வள்ளிக் கொல்லைமேடு எனப்படுகிறது. இந்திர சேனாபதீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் விளங்குகிறார். சுவாமி முன் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடவேண்டும்.
இடர் களையும் அக்னி லிங்கம்
தென்கிழக்கு திசையில் நூம்பல் என்ற தலத்தில் ஆனந்த வல்லி உடனுறை அகஸ்தீஸ்வர மூர்த்தியாக எதிரிகளின் தொல்லை நீக்கி வழக்குகள் இடர் களைபவராக அருள் தருகிறார். இவர் முன் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தர்மம் காக்கும் எமலிங்கம்
பூந்தமல்லி - ஆவடி சாலையில வலப்புறமாகச் செந்நீர்குப்பம் என்ற தலத்தில் மரகதாம்பிகை உடனுறை கைலாய நாதராக அருள் தருகிறார். இரும்பு, தொழில் உயரவும், ஏழரை சனி, அர்தாட்டமச் சனி, கண்டச் சனி விலகவும் இவர்முன் யமாஷ்ட கம் படித்து தீபம் ஏற்றுக.
நிர்கதியானோரை நிமிர்த்தும் நிருதிலிங்கம்
இன்றைக்குச் சுமார் 2320 ஆண்டுகளுக்க முன்னதாக ஸ்தாபனம் செய்யப்பட்டதாக ஓலைச்சுவடி செய்திகள் உடைய இத்தலத்தில் பாலாம்பிகை உடனுறை பாலீஸ்வரராக அருள்கிறார். பட்டாபிராம் பூந்தமல்லி சாலையில் மகாநாடு பஸ் நிறுத்தம் அருகே பாரிவாக்கத்தில் உள்ளது. கொடுத்த கடன் திரும்ப உறவினர் சேர்க்கை, அனுகூலம் உண்டாக வழி ஏற்படும். (பூந்தமல்லி - பட்டாபிராம் சாலைக்குள் 3கி.மீ தூரம் சென்று இடப்புறம் செல்க.)
நற்தருணங்கள் தரும் வருணலிங்கம்
பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் காடுவெட்டி பஸ் நிறுத்தத்திலிருந்து இடப்புறம் ஒரு கிலோமீட்டர் சென்றால் மேட்டுப்பாளையம் என்ற தலத்தில ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரராக அருள் பாலிக்கிறார். வீடுகட்டத் தடை, சொந்தமனையில் பிரச்னை இருப்பின் நெய்தீபம் ஏற்றி மேற்று திசை லிங்கமான இவரை நெய்தீபம் ஏற்றி செங்கல் வைத்து வழிபட்டுவரலாம்.
வாழ்வு தரும் வாயுலிங்கம்
வேற்காட்டிஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில் விருத்தாம்பிகை தேவி உடனுறையும் வாயுலிங்கேஸ்வரர் என்ற திருநாமததுடன் அருள் தருகிறார். இறைவன் மீது அருகில் உள்ள இலவம் பஞ்சு மரங்களிலிருந்து வெடித்துச் சிதறும் பஞ்சுக் காய்கள் மூலம் வரும் பருத்தி பஞ்சுகள் படுவதால் பருத்திப்பட்டு என்று தலப்பெயர் வழக்கத்தில் உள்ளது. பூந்தமல்லி ஆவடி சாலையில் ஐயங்குளம் பஸ் நிறுத்தத்திலிருந்து இடப்புற சாலையில் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. துர்சக்திகள் அகலவும், குழந்தைகள் நோய் நீங்க சுகம் பெறவும், இழந்தவை மீண்டும் வரவும் நெய்தீபம் ஏற்றி துதிக்கவும்.
குபேரன் அருள் கூட்டும் குபேரலிங்கம்
வடதிசைச் சிவலிங்கத் திருமேனியராக ஆவடி-திருவேற்காடு சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுந்தர சோழபுரம் என்ற தலத்தில் வேம்பு நாயகி உடனுறை குபேரபுரீஸ்வரராக அருள் தருகிறார். பொருட்சேர்க்கை, சம்பத்துக்கள் தொழில் உயர்வு ஏற்பட நெய்தீபம் ஏற்றி வழிபடலாம்.
ஈன்ற தாய்போல் காக்கும் ஈசானலிங்கம்
திருவேற்காடு சன்னதி தெருவிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அம்பத்தூர் பிரதான சாலையில் இரு கானகங்களுக்கு இடையில் பொன்னியம்மன் வளாகத்தின் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனியே ஈசானலிங்கம். பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள் தருகிறார். வாகன லாபமின்மை, கண்திருஷ்டி, நற்செயல்களில் வெற்றி காண இயலாமை, வாழ்வில் ஏற்படும் தடைகள் அகன்று நலம் பெற சுவாமி முன்பு நெய்தீபம் ஏற்றி இந்தத் துதியைப் பாட வேண்டும்.
திருவேற்காடு திருத்தலத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலைச் சுற்றி இருக்கும் எண் கயிலாயங்கள் என்று பக்தர்களால் போற்றப்படும் எண்திசை லிங்கத் திருமேனிகளைத் தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் சிவபக்தர்கள் பொதுமக்கள், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், பௌர்ணமி, அமாவாசை விசேஷ தினங்களில் பாதயாத்திரை யாகவும் வந்து தரிசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆலயங்களில் அன்னதான சேவையும் நடைபெறுகிறது.
கார்த்திகை சோமவாரம் என்று ஆகம விதியில் கூறப்படும் கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு அபிஷேக காலத்தில் பிரார்த்தனை செய்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும் என்பது ஐதீகம். வேற்காடு வேதநாயகனைச் சுற்றி இருக்கும் அஷ்டலிங்கங் களை தரிசித்து நலமடைவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT