Last Updated : 04 Dec, 2014 11:55 AM

 

Published : 04 Dec 2014 11:55 AM
Last Updated : 04 Dec 2014 11:55 AM

கல்யாண வரம் தரும் மச்சக்கார முருகன்!

வேடர் குலத் தலைவன் நம்பிராஜனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள சிவனாக வந்து விநாயகர் உதவியுடன் முருகன் திருமணம் முடித்தது நமக்கெல்லாம் தெரிந்த கதை. வள்ளியைத் தீண்ட மச்சத்துடன் வந்த முருகன் சென்னையில் கோயில் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? சென்னை வானகரத்தில்தான் உள்ளது.

மச்சக்காரன் சுவாமிநாத பாலமுருகன் என்பது சுவாமியின் திருநாமம். போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது பக்கம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டை. அதனருகில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது இத்தலம்.

இந்தக் கோயிலைக் கட்டியவர் டாக்டர் வரதராஜன். பிரபல மருத்துவரான இவர் வடபழனி முருகன் கோயிலை நிறுவிய மூன்று சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். அன்னதானம், இலவச மருத்துவ சேவை எனச் சமூகப் பணிகளையும், ஆன்மிகப் பணியையும் ஒருசேர செய்துவருகிறார். இவரது குருவாக உள்ள வடபழனிச் சித்தர்களின் ஆணைப்படி இங்கே முருகனுக்கு ஆலயமெழுப்பினார்.

அப்படிக் கட்டப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் விக்ரகத்தில் அபிஷேக வேளையில் முருகனின் கன்னத்தில் சிவப்பு நிற மச்சம் இருந்ததைக் கண்டு பரவசமாகி இருக்கிறார்கள். அன்று முதல் இவர் ‘மச்சக்கார முருகன்’ என்ற பெயரோடு விளங்குகிறார். இடுப்பில் கை வைத்தபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் முருகனின் கன்னத்தில் மச்சம் இருக்கிறது. இந்த வேலனை இரண்டு நெய்தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்ள, மூன்றே மாதங்களுக்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறுகிறது. இவர்களோடு இத்தலத்தில் அருளும் ஷீரடி பாபாவும் பைரவி சமேத ஸ்வர்ணாகர்ஷண பைரவரும் வேண்டியதெல்லாம் தரும் வரப்பிரசாதிகள். அஷ்டமிதோறும் இங்கு நடக்கும் யாகத்தில் கலந்துகொள்ள கடன் தொல்லை நீங்கும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்குப் புதிதாக ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகம் 9.12.2014 காலை கணபதி பூஜையுடன் ஆரம்பமாகிறது. மறு நாள் 10.12.2014 காலை 10 மணியளவில் யாக நிறைவுடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x