Published : 18 Dec 2014 01:00 PM
Last Updated : 18 Dec 2014 01:00 PM

சோகம் என்னும் நெருப்பு

மகா பெரியவர் ஜெயந்தி - டிசம்பர் 18

சீதா, ராமருக்குப் பக்கபலம் ஆஞ்சனேயர். பலமில்லாதவருக்கு பலம் ராமசந்திரமூர்த்திதான். “நிர்பல் கே பல் ராம்”. ஆபத்து வந்து சாய்கிற சமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான். “ஆபதாம் அபஹர்த்தாரம்” என்கிறோம். “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ” அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்துகொண்டு சதாவும் நம்மை ரட்சிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான்.

நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்குச் சித்தமாகக் கோதண்டத்தின் நாண் கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான். “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”. இப்படிப்பட்ட புருஷ ச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜனேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால்தான் அவதார காரியத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்.

மநுஷ வேஷம் பிரமாதமாய் போட்டவர் அவர். சீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்சாகமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜனேய சுவாமிதான்.

சீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து சீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. பிரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால் அவளுக்கோ இதோடு ராட்சத ராஜ்யத்தில் மகா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மகா கஷ்டமும் சேர்ந்திருந்தது.

'அபலா' என்றே ஸ்திரீக்குப் பெயர். சாட்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி சீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு பிராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உற்சாகத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது ஆஞ்ஜனேயர்தான்.

அவர் செய்த அரும் செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. ஆனால் இதற்கெல்லாம் சிகரமாக எதைச் சொல்லலாமென்றால் இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைக் கொடுத்து, செளபாக்யத்தைக் கொடுத்து அனுக்ரஹிக்கும் தாயார் மனம் குலைந்து மட்கிக் கிடந்தபோது ஆஞ்ஜனேய சுவாமி காய்ந்த பயிருக்கு மழையாகப் போய் அவளுக்கு உயிரும் உற்சாகமும் தந்தாரே அதுதான். “ஜானகீ சோக நாசநம்” என்று இதைத்தான் சிறப்பித்துச் சொல்கிறோம்.

அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்

அஞ்ஜனை என்ற ஒரு வாநர ஸ்த்ரீக்குப் புத்ரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயி ருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை 'நந்தனன்' என்பது. தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநா நந்தனன். இது பெரிசில்லை.

அந்த அம்மாவுக்கு மாத்திர மில்லாமல் லோக ஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாக்களுக்கும் ஐடியலாக இருக்கும் சீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருக்கணும்.

சீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக்கொண்டிருந்தது. ராவணன் அனுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தகனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு அதனால்தான் ஊரை எரித்தார். சீதையின் சோகாக்னிதான் அது.

ய : சோக வந்ஹிம் ஜநாகாத்மஜாயா :

ஆதாய தேநைவ ததாஹ லங்காம்

“ஜநாகாத்மஜா” என்றால் ஜானகி. “சோக வந்ஹி” என்றால் துயரமாகிற அக்னி. அவள் இருந்தது அசோக வனம். அவளுக்குள் இருந்தது சோக வந்ஹி. “தேநைவ”, அதனாலேயே, இந்த சோகாக்னியாலேயே, “லங்காம் ததாஹ”. லங்கையை எரித்தார்.

'ஆஞ்ஜநேயருக்கு வாலில் நெருப்பை வைத்தும் கொஞ்சங்கூட அது அவரைச் சுடவில்லை. சீதையின் அனுக்ரஹத்தால் அப்படியிருந்தது' என்று மாத்திரம் நமக்குத் தெரியும். ஆனால் ஊரையெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி அதற்கு வந்ததே அவளுடைய சோகத்தை ராவணன் நெருப்பு என்ற ரூபத்தில் வைத்ததால்தான்.

ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்கணும் என்ற எண்ணம் அவனுக்கு ஏன் வந்தது? அவனுக்கு அந்த எண்ணம் வருகிற சமயத்தில் சீதை அதற்கு மேலும் சோகாக்னியில் வாடினால் பிரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் வந்தது. அது எப்படியாவது வெளியே வந்து செலவாகும்படிச் செய்ய வேண்டும்.

அதை யாராவது தாங்கிக் கொண்டு வெளியிலே விட்டுவிட வேண்டும். யாரால் தாங்க முடியும்? ஆஞ்ஜநேய சுவாமியைத் தவிர யாராலும் முடியாது. இதனால்தான் அவரைத் தண்டிக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றினபோது ஈச்வர சங்கல்பத்தால், 'வாலில் நெருப்பு வைத்தாலென்ன?' என்று தோன்றிற்று. இப்படி ஆஞ்ஜநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக்கொண்டே லங்கையை அதனால் தகனம் செய்தார். அது சாதுக்களை, சஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும்படிச் செய்தார்.

அந்த அக்னி அவளுடைய சோகமாயிருந்ததால்தான் அவளுடைய பதிக்குப் பரம் பிரியராக, பக்கபலமாக இருந்தவரைச் சுடாமல் அவருக்கு மாத்திரம் ஜில்லென்று இருந்தது.

ராமருக்கு ஆஞ்ஜனேயர் செய்த மகா உபகாரம் சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது. சீதைக்கு அவர் செய்த மகா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக்கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த சமயத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும் பலமே போனாற்போல இருந்தபோது பலம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டையும் அவர் எதைக்கொண்டு, எதன் பலத்தில் பண்ணினார்? ராமநாம பலத்தினால்தான் பண்ணினார். அவர் சமுத்திரத்தைத் தாண்டிப் போனதால்தான் சீதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.

எப்படித் தாண்டினார்? “ராம ராம” என்று சொல்லிக்கொண்டு அந்த நாமத்தின் சக்தியில்தான் தாண்டினார்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x