Published : 04 Dec 2014 11:50 AM
Last Updated : 04 Dec 2014 11:50 AM
நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களில் நெருப்புக்கான தலமாக இருப்பது திருவண்ணாமலை. இடைக்காட்டுச் சித்தர் உட்பட பல சித்தர்கள், இன்றும் இங்கு உறைவதாகப் பக்தர்கள் நம்புவதால் கிரிவலம் மேற்கொள்ளும்போது கையில் ஊதுபத்தியை மணக்க வைத்து, காலில் செருப்பணியாமல் செல்கின்றனர். இங்கே உலவும் சித்தர்களின் மீது படும் காற்றானது தங்களது உடலில் பட்டால் பல ஜென்மங்களாகத் தொடரும் பாவச்சுமை தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே கிரிவலம் இங்கு மிகப் பிரபலம். மலையை வலம் வந்தால், ரிஷிகளையும் வலம் வந்த பலன் கிடைக்கும்.
திருவண்ணாமலையை வலம்வந்த மகான்கள்
அருணகிரிநாதர், விருபாக் ஷ தேவர், குகைநமச்சிவாயர், குருநமசிவாயர், தெய்வசிகா மணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் ஆகியோர் பக்தர்களை இறைபக்தியில் ஆழ்ந்து பிறவி நோக்கத்தை அறியச் செய்தனர். இங்கு அவர்கள் ஜீவ சமாதி அடைந்து இனி வரும் தலைமுறையினரையும் அரூபமாய் பக்தி மார்க்கத்தில் வழி நடத்துகிறார்கள்.இங்குள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கிரிவலம் வரும்போது முதன்மை மலைக்கு இணையாகக் கொஞ்சம் சிறிய மலை ஒன்றும் காணக் கிடைக்கிறது. இதனை சிவ பார்வதி ஆகிய தம்பதி ரூபம் என மக்கள் கொண்டாடுகிறார்கள். இளங்காலைப் பொழுதில் ஒளிரும் முகடுகளாகக் காட்சி அளிக்கும் மலையின் அற்புதக் காட்சி பக்தியில் தோய்ந்த மனத்துக்குப் பெரும் சாந்தி.
அண்ணாமலையார்
படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா. பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி, முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.
தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல். பிரம்மாவுக்கு ஆச்சரியம், பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.
பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக தான் கூறப்போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன், இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும் பிரம் மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம்பூவை நான் தரிக்கமாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார்.
அக்னி ரூபமே அண்ணாமலை
அக்னி ரூபம் எடுத்த சிவனே இங்கு அண்ணாமலையாக வீற்றிருக்கிறார். அவரது ஆத்மபத்தினியாக உண்ணாமுலையார் என பெயர் பெற்ற பார்வதி. அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் சிவன் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலம் திருவண்ணாமலை. நாள் சிவராத்திரி. இந்த நாளே கார்த்திகை தீபத் திருநாள். ஈசன் பக்தர்கள் வாழ்விற்கு ஒளியை வாரி வழங்கும் நாள் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT