Last Updated : 20 Nov, 2014 12:10 PM

 

Published : 20 Nov 2014 12:10 PM
Last Updated : 20 Nov 2014 12:10 PM

கடலில் மிதந்து வந்த கடன்

அவசரத் தேவையை முன்வைத்து ஒருவர் மற்றொருவரிடம் ஓராயிரம் தினார் கடன் கேட்டார். "சாட்சியுடன் வாருங்கள். கடன் தருகிறேன்!" என்றார் கடன் தருபவர்.

“இறைவனின் சாட்சியே போதுமானது!" என்றார் கடன் கேட்டவர்.

"உமது கடனுக்கு இறைவனையே பொறுப்பு தாரியாக்குகிறேன்!"- என்றார் கடன் கேட்டவர்.

சரி என்று திருப்தியடைந்தவர் கடனைக் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் தந்தார்.

கடன் பெற்றவர் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டதோடு, பிழைப்புத் தேடி கடல் கடந்து சென்றுவிட்டார்.

கடன் திருப்பித் தரும் நாள் நெருங்கியது.

கடன்பட்டவர் அதைத் திருப்பிச் செலுத்த ஊர் திரும்பும் பயணத்துக்காகத் தோணியைத் தேடி அலையலானார். ஆனால், தோணி கிடைக்கவில்லை. செய்வதறியாமல் திகைத்தவர் ஒரு மூங்கில் குழாயை எடுத்தார். அதைச் சுத்தம் செய்து ஓராயிரம் தினார்களை அதற்குள் அடைத்தார். கூடவே கடன் கொடுத்தவருக்கு தனது இயலாத நிலைமையை விளக்கி ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தார்.

"இறைவா! நான் உனது அடியார் ஒருவரிடம் ஓராயிரம் தினார் கடன் வாங்கியதை நீ அறிவாய். அவர் சாட்சி கேட்டபோது உன்னையே சாட்சியாக்கியதும், பொறுப்புதாரி கேட்டதற்கு உன்னையே பொறுப்புதாரி ஆக்கியதும் உனக்குத் தெரியும். இதற்குச் சம்மதித்து அவர் எனக்குக் கடனும் அளித்தார். கடனை அடைக்க தவணை நெருங்கிவிட்ட நிலையில் அவரிடம் செல்வதற்கான எந்த வழியுமில்லாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். இக்கட்டான இந்தச் சூழலில் வேறு வழி தெரியாமல்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் கடனாகப் பெற்ற இந்த அடைக்கலப் பொருளை அவரிடம் சேர்த்துவிடுவாயாக!" - என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டார். மூங்கில் குழாயைக் கடலில் எறிந்தார்.

அதே நேரத்தில், கடன் கொடுத்தவர் தவணை முடிய இருக்கும் அந்தக் கடைசி நாளில் கடன் வாங்கியவரை எதிர்பார்த்துக் கடலோரம் நின்றிருந்தார். மிதந்தவாறு வந்த மூங்கில் குழாய் அவரது கண்ணில் பட்டது. அதை எடுத்துத் திறந்து பார்த்தவர் கடிதத்தையும், பணத்தையும் கண்டு வியப்படைந்தார். தனது பொருள் தன்னிடம் பத்திரமாக சேர்ந்தமைக்கு இறைவனைப் புகழ்ந்தார்.

நபி பெருமானார், கடனைத் திருப்பித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி தமது தோழர்களுக்குச் சொன்ன சம்பவம் இது.

"திருப்பித் தர வேண்டும் என்னும் எண்ணத்துடன் அடுத்தவரின் பொருளை ஒருவன் கடன் வாங்கும்போது, இறைவன் அவன் சார்பில் அந்தக் கடனைத் திருப்பித் தரும் ஏற்பாடுகளை அருள்கிறான். ஆனால், கடனைத் திருப்பித் தரும் எண்ணமேயில்லாமல் ஒருவன் கடன் வாங்கும்போது, இறைவன் அவனை அழித்தே விடுகிறான்!" என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x