Published : 24 Aug 2017 12:44 PM
Last Updated : 24 Aug 2017 12:44 PM
இ
ந்தியாவில் ஆன்மிக அற்புதங்களுக்குக் குறைவில்லை. பல சமய இறைத் தூதர்கள் இங்கு வந்து போதனைகளை தந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ‘இந்தியக் கிறித்துவத்தின் தொட்டில்’ என்று அழைக்கப்படுகிற புனித தாமஸ்.
சென்னை கிண்டிக்கு அருகில் உள்ளது புனித தோமையர் மலை. புனித தோமா இந்த மலைக்கு வந்த பிறகுதான் இது புனித தோமையர் மலை. அதற்கு முன்புவரை அது பரங்கிமலை.
இந்த மலைக்கு ஆன்மிக ரீதியாக இந்த ஒரு பெருமை என்றால், வரலாற்று ரீதியாக இன்னொரு பெருமையும் உண்டு. அது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் வரைபடமாக ஆவணப்படுத்தியபோது, அதற்கான அளவை (சர்வே) இங்கிருந்துதான் தொடங்கப்பட்டது. சென்னைக்கு இது 378-வது பிறந்தநாள் என்றால், அந்த வரைபட அளவையைத் தொடங்கிய ‘சர்வே ஜெனரல் ஆஃப் இந்தியா’வுக்கு இது 250-வது ஆண்டு.
சென்னைக்கு வந்த சீடர்
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் முக்கியமானவர் தோமா. இயேசு உயிர்த்தெழுந்து வந்ததை நம்பாத காரணத்தால், தோமா, ‘சந்தேக தோமா’ (டவுட்டிங் தாமஸ்) என்று விமர்சிக்கப்பட்டார். தான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு, மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்த இயேசு, தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் நீங்கலாக, இதர 11 சீடர்களை, இறையின் நற்செய்தியை உலகெங்கும் பரப்பப் பணித்தார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பிரசங்கம் செய்யப் புறப்பட்ட அவர்கள் ‘அப்போஸ்தலர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
புனித தோமாவை, இயேசு இந்தியாவுக்குச் செல்லக் கட்டளையிட்டார் என்று கூறப்படுகிறது. அவரது கட்டளையை ஏற்று, கி.பி.52-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் தோமா. சிறிது காலம் கேரளப் பகுதிகளில் இயேசுவைப் பற்றியும், அவரது அற்புதங்களைப் பற்றியும் பிரசங்கித்து வந்ததாகவும் பிறகு கி.பி.65-ம் ஆண்டு மயிலாப்பூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது..
தன்னுடைய ஜெபத்துக்காவும், பிரசங்கத்துக்காகவும் பரங்கிமலையைத் தேர்வு செய்த தோமா, ஒரு முறை ஜெபித்துகொண்டிருந்தபோது, பூசாரி ஒருவரால், முதுகில் ஈட்டியால் குத்தப்பட்டுக் கொலையுண்டார் என்று கிறிஸ்துவர்கள் பலர் நம்புகிறார்கள். அதன் பிறகு, அந்த மலை ஆன்மிக ரீதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததானது.
மலையின் சிறப்பு அம்சங்கள்
இன்று இம்மலை பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் உள்ள இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர்.
இங்குள்ள ‘எதிர்பார்த்த அன்னையின் ஆலயம்’ உள்ளே, புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.
இங்கு ஏழை எளியவர்களுக்காக மூன்று வேளையும் அன்புணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரம் புனித தோமா திருவிழாவும், டிசம்பர் 18-ம் தேதி இயேசுவை எதிர்நோக்கிய அன்னைத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
நாவலான மலை
இப்படிப் பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்த மலையை அடிப்படையாக வைத்து மறைந்த எழுத்தாளர் க.நா.சுப்ரமணியம் ‘தாமஸ் வந்தார்’ என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதியுள்ளார். இதில் புனித தோமையரின் வருகை குறித்தும், அவருக்கும் திருவள்ளுவருக்கும் இடையில் சந்திப்பு நடந்ததாகவும் கற்பனை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
தவிர, இந்த மலையில், இந்தியாவை வரைபடமாக ஆவணப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட வில்லியம் லேம்ப்டன் என்ற அதிகாரியின் சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படி வரலாறு, ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட இந்த மலை, புனித தோமையரின் நற்செய்தியைத் தாங்கி, சென்னைக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT