Published : 13 Jul 2017 10:35 AM
Last Updated : 13 Jul 2017 10:35 AM
பக்திக்கும் கருணைக்கும் உகந்த மாதம் ஆடி. முண்டகக்கண்ணி, முப்பாத்தம்மன், பாளையத்தம்மன், மாங்காட்டு மாரி, மலையனூர் அங்காளி எனத் தெருவுக்கு தெரு இருக்கும் அம்மன் கோயில்கள் முதல் சக்தி பீடங்கள்வரை விழாக்கோலம் பூண்டிருக்கும் மாதம் ஆடி. அம்மன் கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள், விதவிதமான நேர்த்திக்கடன்கள், தீ மிதிப்பது போன்ற விதவிதமான சடங்குகள்தான் நம் நினைவுக்கு வரும். அதிலும் கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் காய்ச்சி ஏழைபாழைகளின் வயிற்றைக் குளிரவைக்கும் வைபவத்துக்கு ஈடு இணையே இல்லை.
தட்சிணாயனம் தொடங்கும் ஆடி
தை மாதம் முதல் ஆனி மாதம்வரை பூமத்திய ரேகைக்கு வடக்கில் சூரியனின் கதிர் வீசும். ஆடி முதல் மார்கழிவரை பூமத்திய ரேகைக்கு தெற்கில் சூரியனின் கதிர் வீசும். இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்று அழைப்பர். அன்னை பராசக்தி சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில்தான். இதை நினைவு கூரும் விதமாகவே நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் `ஆடித்தபசு' வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு பல விழாக்கள் நடக்கும். அதையொட்டி வளையல் விநியோகம் செழிக்கும். வரலக்ஷ்மி பூஜை, ஆடி பதினெட்டு, ஆடிப்பூரம் - ஆண்டாள் பிறந்த நாள் என இந்த மாதத்தில் இன்னும் நிறைய விசேஷங்கள் வரிசை கட்டும்.
கூழ் ஊற்றுவதன் பின்னணி
ஜமதக்னி முனிவர் தவத்தின் மூலமாக பெரிய வரங்களைப் பெற்றுவிடுவாரோ என அஞ்சிய கார்த்தவீரியார்சுனனின் மகன்கள் அவரைக் கொன்று விடுகின்றனர். முனிவரின் மனைவி ரேணுகாதேவி தன்னுடைய இன்னுயிரையும் மாய்த்துக்கொள்வதற்கு தீயை வளர்த்து அதில் இறங்குகிறார். இந்திரன் மழையைப் பொழிந்து தீயை அணைக்கிறார். தீப்புண்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன.
வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளைப் பறித்து ஆடையாக அணிந்துகொள்கிறார் ரேணுகாதேவி. பசியால் மயக்கம் வரும் நிலை ஏற்படுகிறது. கிராமத்திலிருக்கும் மக்களிடம் உணவு கேட்கிறார். அவருக்கு பச்சரிசி, கேழ்வரகு, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுக்கின்றனர் மக்கள். இந்தப் பொருட்களைக் கொண்டு ரேணுகாதேவி கூழ் காய்ச்சிக் குடிக்கிறார்.
ரேணுகா தேவியின் முன்பாக சிவபெருமான் தோன்றி உலக மக்கள் அம்மை நோயிலிருந்து விடுபட, நீ அணிந்த வேப்பிலையே சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகட்டும் என்று வரம் அளித்தார். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் திருவிழாவின் இறுதி நாள் சிறப்பாக இன்றைக்கும் கூழ் ஊற்றுவது இந்தப் புராணக் கதையை ஒட்டித்தான் என்று கூறப்படுகிறது.
ஆடி மாதத்தில் மக்களின் பசியையும் உடல் சூட்டையும் தணிக்கும் கூழ் எப்படித் தயாரிக்கப்பட வேண்டும் தெரியுமா? கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் மாலை ஓர் அகண்ட பெரிய பாத்திரத்தில் ஆறு குவளை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும்.
நன்றாகக் கொதித்ததும் அரிசி நொய்யைக் கழுவிப் போட வேண்டும். அரிசி நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும். அதற்கடுத்த நாள் காலை, காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். தண்ணீருக்குப் பதிலாக நீர்மோர் சேர்த்தாலும் நன்று. வெங்காயத்தை அதிகம் சேர்க்கச் சேர்க்க கூழின் சுவை அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT