Published : 06 Jul 2017 10:33 AM
Last Updated : 06 Jul 2017 10:33 AM

தெய்வத்தின் குரல்: காவிய சந்தம் பிறந்த கதை

வேதத்திலே சப்தங்களை ஏற்றி இறக்குகிற ஸ்வரங்கள் உள்ள மாதிரி, காவியம் முதலிய மற்ற சுலோகங்களில் அக்ஷரங்களை ஏற்றுவது என்று கிடையாது. ஸ்வரங்களோடேயே சொல்லி வந்த வைதீக அநுஷ்டுப் மீட்டரில் ஸ்வரமில்லாமல் முதன் முதலில் வந்த வாக்கு வால்மீகியுடையதுதான். அவர் வேண்டுமென்று யோசித்து இப்படி பண்ணவில்லை.

தம்பதியாக இருந்த இரண்டு பக்ஷிகளில் ஒன்றை ஒரு வேடன் அடித்துக் கொன்றதை அவர் பார்க்கும்படி நேரிட்டது. அப்போது பக்ஷிகளிடம் அவருக்கு ஏற்பட்ட கருணையே வேடனிடம் மஹா கோபமாக மாறிற்று. அவனைப் பார்த்து, ‘ஏ வேடனே! சந்தோஷமாகக் கூடிக் களித்துக்கொண்டிருந்த பக்ஷிகளில் ஒன்றை வதைத்த உனக்கு எந்தக் காலத்திலுமே நல்ல கதி இல்லாமல் போகட்டும்’ என்று சபித்துவிட்டார்.

அவர் யோசிக்காமலே, கருணை உணர்ச்சி பீறிக்கொண்டு வந்து இப்படி சபித்துவிட்டார். உடனே ரொம்பவும் வருத்தப்பட்டார், “நாம் ஏன் இப்படி சாபம் கொடுத்திருக்க வேண்டும்?” என்று. இதை யோசித்துப் பார்க்கும்போது அவருக்கு ஆச்சரியமாக ஒன்று ஸ்புரித்தது. ஞான திருஷ்டி வாய்த்த ரிஷி அல்லவா? அதனால் ஸ்புரித்தது. தாம் கொடுத்த சாபமே எட்டெட்டு அக்ஷரங்கள் கொண்ட நாலு பாதமாக அநுஷ்டுப் வருத்தத்தில் அமைந்திருக்கிறது, என்று தெரிந்தது. தன்னை மீறி இப்படிப்பட்ட விருத்த ரீதியான வார்த்தை ரூபமும் வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.

வால்மீகி ராமாயணத்தின் கதை

அவர் கொடுத்த சாபத்துக்கே இன்னொரு அர்த்தமும் இருப்பதையும் உணர்ந்தார். வேடனைப் பார்த்து இவர் சொன்னதே மஹா விஷ்ணுவைப் பார்த்து, “ஹே, லக்ஷ்மிபதியே! தம்பதியாக இருந்த இருவரில் ஒருவன் காம மோகத்தால் செய்த காரியத்துக்காக, நீ அவனைக் கொன்றது உனக்கு எந்நாளும் கீர்த்தி தரும்” என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளும்படியாகத் தம்முடைய சாபவாக்கு அமைந்திருக்கிறது என்று கண்டுகொண்டார்.

ராவணன் - மண்டோதரி என்ற தம்பதியின் காமதுரனான ராவணனைக் கொன்றதால் உலகம் உள்ளளவும் கீர்த்தி பெறப்போகிற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பற்றியே இப்படி அவர் வாயில் அவர் அறியாமல் சந்தத்தோடு வார்த்தை வந்துவிட்டது. அதிலிருந்து ஈச்வர சங்கல்பத்தைப் புரிந்துகொண்டு, அதே மீட்டரில் வால்மீகி ராமாயணத்தைப் பண்ண ஆரம்பித்து விட்டார்.

வேத சுவரமில்லாத சுலோக ரூபம் என்பது அப்போதுதான் ஏற்பட்டது. வேதம் மாதிரியே, இனிமேலும் உயர்ந்த விஷயங்களை எல்லோரும் நினைவு வைத்துக்கொள்ளும் படியாக சொல்வதற்கு வசதியாக இப்படி ஒரு ஸாதனம் - ச்லோகம் என்ற சாதனம் - கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு, முதல் காவியமாக ஸ்ரீராம சரித்திரத்தைப் பாடினார்.

ப்ரோஸ் மறந்து போய்விடும். மீட்டர் அளவைகளுக்கு உட்படுத்திய பொயட்ரிதான் நினைவிலிருக்கும். இதனால்தான் ஆதியில் எல்லாம் பொயட்ரியாகவே எழுதினார்கள். ப்ரிண்டிங் ப்ரெஸ் வந்த பின், ‘நினைவு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; புஸ்தகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஏற்பட்ட பிறகுதான் ப்ரோஸ் வளர்ந்தது.

ஆனாலும், விஷயங்களைச் சொல்வதில் பொயட்ரிக்குத்தான் அழகும் சக்தியும் அதிகம். முதலில் உண்டான பொயட்ரி வால்மீகி ராமாயணம். அதனால்தான் வால்மீகி ராமாயணத்துக்கு ‘ஆதி காவியம்’என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

பகவத் பிரசாதமாக ‘சந்தஸ்’ கிடைத்ததால்தான் ராமாயணமே பிறந்தது. மற்ற ஸ்தோத்திரங்கள், புராணங்கள், காவியங்கள் எல்லாவற்றுக்கும் வேண்டிய ச்லோகம் என்ற ரூபம் பிறக்கச் சந்தம்தான் உதவியது.

வடமொழி வியாகரணமும் தமிழிலக்கணமும்

‘இலக்கணம்’ என்ற தமிழ் வார்த்தை ‘லக்ஷணம்’ என்பதிலிருந்து வந்த மாதிரியே, இலக்கண சம்பந்தமான வேறு பல வார்த்தைகளும் சம்ஸ்கிருத வியாகரணத்தில் உள்ளதை அநுசரித்தே தமிழில் உண்டாயிருக்கிறது. உதாரணமாக, தமிழிலக்கணத்தில் ‘பகுதி’, ‘விகுதி’ என்று இரண்டைச் சொல்கிறோம். ‘ராமனுக்கு’ என்கிற வார்த்தையில் ‘ராமன்’ என்பது பகுதி, கு என்பது விகுதி என்கிறோம்.

‘பகுதி’, ‘விகுதி’ என்பன ‘ப்ரக்ருதி’, ‘விக்ருதி’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைகளின் மரூஉதான். சம்ஸ்கிருத வியாகரணப்படி ராமன்-பரக்ருதி;கு-விக்ருதி. இந்த ‘விக்ருதி’யே ‘விகுதி’ என்றாயிற்று. ‘பகுதி’ விஷயமாகத் தமிழ் தாதுவிலிருந்தே வந்ததோ என்று சந்தேகம் ஏற்படுவதுபோல் விகுதியின் விஷயத்தில் சந்தேகமே இல்லை. ‘பகு (த்தல்)’ என்பது போல ‘விகு (த்தல்)’ என்று தமிழ் வேர்ச்சொல் இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள். விக்ருதிதான் விகுதி என்பதாலேயே, ப்ரகிருதிதான் பகுதி என்று நிச்சயமாகத் தெரிகிறது.

இரண்டும் ஒன்றுதான்; ஒரே இனத்திலேயே, ஒரே கலாச்சாரத்திலேயே வெவ்வேறு பாஷைகள் மட்டும் ஏற்பட்டன என்னும்போது உயர்த்துவது, தாழ்த்துவது என்பதற்கு இடம் ஏது? ஆகையால் யதார்த்தத்தை யதார்த்தமாக சொல்கிறேனேயொழிய, ஒன்றுக்கு உசத்தி சொல்லி இன்னொன்றுக்கு மட்டம் தட்டுவதற்குச் சொல்லவில்லை.

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x