Last Updated : 27 Jul, 2017 11:00 AM

 

Published : 27 Jul 2017 11:00 AM
Last Updated : 27 Jul 2017 11:00 AM

எட்டு லட்சுமிகள் அருளும் ஓம்காரத்தலம்

செல்வச் செழிப்புமிக்க நகரமாக மும்பை காணப்படக் காரணம் அங்கு கோயில் கொண்டுள்ள மகாலட்சுமித் தாயார். மகாலட்சுமியே அஷ்டலட்சுமிகளாக வீற்றிருக்கும் மகாலட்சுமி திருக்கோயில் காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகளின் எண்ணத்தில் எழுந்து முக்கூர் சீனிவாச வரதாச்சாரியாரியால் நிறைவேற்றப்பட்ட ஆலயமாகும். இத்திருக்கோயில் ‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவில் அமைந்து இருப்பதால், இத்திருத்தலத்திற்கு ‘ஒம்காரத் தலம்’ என்று பெயர் வந்தது.

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையையடுத்த ஓடை மாநகர் என்ற பகுதியில் மூலவர் விமானத்திலேயே எட்டு அஷ்டலட்சுமிகளும் எட்டுச் சன்னிதிகளுடன் காட்சி அளிக்கின்றனர். மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு திருமணத் தம்பதியராக சிறப்புச் சன்னிதியில் கோலம் கொண்ட நிலையில் இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிப் பெரியவரால் அனுக்கிரகம் செய்யப்பட்ட மகாலட்சுமி, மகாவிஷ்ணு, அஷ்டலட்சுமிகள் ஆகிய சிலாரூபங்களை நாற்பத்து நான்காவது பட்டம் வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் பிரதிஷ்டை செய்தார்.

ஓம் வடிவப் பாதை

மகாலட்சுமி திருக்கோயில் கிழக்கு நோக்கி வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் சக்கரமாகவும், மொத்த அமைப்பும் மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கி வரும் பாதை ஓம் வடிவாகவும் அமைந்துள்ளது.

தரைத் தளத்தில் கிழக்கு நோக்கி மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு இருவரும் திருமணக் கோலத்தில் திருக்காட்சி தருகின்றனர். திருக்கோயிலின் கிழக்கே இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது.

முதல் தளத்தில் கிழக்கே கஜலட்சுமி, தெற்கே சந்தான லட்சுமி, மேற்கே விஜயலட்சுமி, வடக்கே வித்யாலட்சுமி ஆகிய நான்கு லட்சுமிகளின் தரிசனம் கிடைக்கும். அடுத்தடுத்துப் படிகள் மேலே ஏறிச் சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் தனலட்சுமியின் தரிசனம் கிடைக்கும். தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமி ஆகிய தெய்வச் சிலாரூபங்களின் தரிசனம் கிடைக்கும்.

ஓம்காரத் தலம்

இத்திருக்கோயிலின் பிரதானச் சந்நிதியில் உள்ள மகாலட்சுமி, மகாவிஷ்ணு சிலாரூபங்களை முதலில் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் பக்தர்கள், முதல் தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, கஜலட்சுமிகளை வலமாக வந்து தரிசிக்கலாம். இரண்டாம் தளத்தில் உள்ள தனலட்சுமியைத் தரிசனம் செய்து, பின் கீழே இறங்கி, ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமிகளைத் தரிசனம் செய்கின்ற அமைப்பு ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தின் வடிவத்தினை ஒத்திருக்கும்.

அஷ்டாங்க விமானம்

எப்போதும் வேத ஒலி முழங்குகிற இடத்திலோ, பல்லாயிரக்கணக்கான பசுக் கூட்டங்கள் விளங்கும் இடத்திலோ, வற்றாத நீர்நிலைகள் அமைந்த இடத்திலோ அஷ்டாங்க விமானம் அமைய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதன்படி வங்கக் கடற்கரையோரம் இத்திருக்கோயில் அஷ்டாங்க விமானத்துடன் அமைந்துள்ளது. சுதைச் சிற்பங்கள் வியக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமான மந்திரகிரியை மத்தாகவும், கூர்மத்தைப் பீடமாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அதிலிருந்து மகாலட்சுமி கையில் மாலையுடன் தோன்றும் அழகு வியக்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x