Published : 06 Mar 2014 05:35 PM
Last Updated : 06 Mar 2014 05:35 PM
திருநறையூர் நம்பி திருக்கோவில் கும்பகோணம் அருகே உள்ள நறையூர் என்ற நாச்சியார் கோவிலில் அமைந்துள்ளது. மஹாவிஷ்ணு கோவில் கொண்டுள்ள இத்திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளதால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்:
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது.
மஹரிஷி மேதவிக்கு காட்சி அளித்த ஸ்ரீநிவாசபெருமாள் அவரது வளர்ப்பு மகளான தாயாரைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கேட்கிறார். மஹாலஷ்மி தாயார் மேதாவி மகரிஷிக்கு மகளாக இங்கு வந்த புராணக்கதையும் சுவாரஸ்யமானது.
மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.
இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி திருவுளம் கொண்டார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டிப் பேணிக் காப்பாற்றி வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார். அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.
கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்பொழுது அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தக் கல் கருட உற்சவர் சந்நிதியில் இருந்து தூக்கும்பொழுது உள்ள கனமானது, பாதம் தாங்கிகளில் நான்கு நபர்களாலேயே தூக்கிவிட கூடிய அளவிலேயே இருக்கும். இம்மூர்த்தி பிரகார திருவீதிகளை ஒவ்வொன்றாகக் தாண்டும்பொழுது கல் கருடனின் கனம் அதிகரித்துக் கொண்டே வருவதால் நான்கு பேர் என்பது 8, 16, 32, 64, மற்றும் 128 என்பதாகப் பாதந்தாங்கிகளின் எண்ணிக்கை உயரும். சந்நிதியை அடையத் திரும்பி வரும்பொழுது இதே கல் கருடனின் கனம் குறைந்துகொண்டே வருவதால் 128 பாதந்தாங்கிகள் என்பது 64,32,16,8. என்று குறைந்து வந்து சந்நிதியை அடையும்பொழுது 4 பாதந்தாங்கிகள் என்ற கணக்கில் முடிவுறும்.
மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோயிலாக இவ்வூரின் பெயரே மாறிவிட்டது என்பர்.
பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT