Last Updated : 27 Nov, 2014 01:29 PM

 

Published : 27 Nov 2014 01:29 PM
Last Updated : 27 Nov 2014 01:29 PM

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள்

108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில்தான்.இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியும் பூதேவியும்

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கிறார். மாமல்லையில் பெருமாளின் கெளமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன.

பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து - அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார். அண்மையில் இவரது திருநட்சத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருக்கோயிலுக்குப் பிள்ளைலோகம் ஜீயரின் அருளாசி பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலைச் சேர்ந்தது புண்டரீக புஷ்கரணி.

புண்டரீக புஷ்கரணி

அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர்.

இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.

சாபம் நீங்கிய மல்லேஸ்வரன்

மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி. பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக்களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார். அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத்தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.

மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார். பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான்.

இந்நிகழ்வு பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x