Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

ஜென்மராக்கினி அன்னை பேராலயம்- உயிர்த்தெழுந்த அற்புதம்

பாரிசில் உள்ள வால் தே கிராஸ் கோவிலைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அது ராணுவ மருத்துவமனைக் கோயிலாக உள்ளது. அக்கோயிலை மாதிரியாக கொண்டு வங்கக் கடலை நோக்கி அமைந்துள்ளது புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயம்.

பேராலயத்தின் வரலாற்றை அறிய 300 ஆண்டு பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1689ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு சேசு சபை குருக்கள் வந்தனர். பிரெஞ்சு கோட்டைக்கு மேற்கில் பெரிய தோட்டத்தை வாங்கினார்கள். கிபி 1692இல் பிரான்ஸ் மன்னர் 14 ஆம் லூயி நிதியுதவியுடன் மாதா கோயில் அமைக்கப்பட்டது. பிரெஞ்சு ஆட்சியில் புதுச்சேரி மீது படையெடுத்து வந்த டச்சுக்காரர்கள் மாதா கோயிலை இடித்தனர்.

மீண்டும் அந்த இடத்தில் கி.பி. 1699இல் இரண்டாவது முறையாகக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், போரினால், 2ஆவது முறையும் தேவாலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

தற்போது தேவாலயம் உள்ள இடத்தில் 1728 முதல் 1736 வரை அழகிய தேவாலயம் எழுப்பினர். மூன்றாவது முறை கட்டப்பட்ட தேவாலயம் அக்காலத்தில் மிகப்புகழ் பெற்றிருந்தது. ஆனால், 1761இல் ஆங்கிலேயப்படையால் தேவாலயம் மீண்டும் இடிக்கப்பட்டது.

1765இல் ஏற்பட்ட உடன்படிக்கையால், ஒரு கொட்டகையில் மிஷன் வீதியில் உள்ள இடத்தில் அக்கோயில் இயங்கியது . இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட கோயிலின் அஸ்திவாரத்தின் மேல் 1777இல் பெருங்கோயிலைக் கட்டும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியது. 1791ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கோயில் திருப்பணி நிறைவடைந்தது.

நான்காவது முறை எழுந்த ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் கட்டடக்கலை ஆச்சரியம் அளிப்பது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வால் தே கிராஸ் தேவாலயத்தின் மாதிரியிலுள்ளது இத்தேவாலயம். 18ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டு தேவாலய கட்டடக்கலைப் பாணியில் இருந்தாலும் முகப்புத் தோற்றம் போர்ச்சுக்கீசிய அழகியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.

தேவாலயத்தின் உள்ளே நுழைந்தால் வேறு காலகட்டத்துக்குள் நம் பயணப்பட்டுவிடுவோம். வழிபாட்டுப் பிரிவு, கூண்டு கோபுரம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் பழமை பரவிக் கிடக்கிறது. தேவாலயத்தை வழிபட வருவோர் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் தரிசிக்க வருகின்றனர்.

புதுச்சேரியைப் போன்று வியட்னாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், புதுவையிலிருந்து வியட்னாமுக்கு மக்கள் குடியேறுவது அக்கால வழக்கம். அவ்வாறு செல்லும்போது ஜென்மராக்கினி தேவாலயத்துக்கு அன்பளிப்பாய்க் கிடைத்த இயேசு, அன்னை மேரி உள்ளிட்ட திருவுருவச் சிலைகளையும் தற்போதும் தரிசிக்கலாம்.

ஜென்மராக்கினி அன்னை பேராலயத்துக்கு சம்பா கோயில் என்ற பெயரும் உண்டு. அதே நேரத்தில் பலரும் ஜென்மராக்கினி மாதா கோவில் என்றும் அழைக்கின்றனர்.

மனதுக்கு அமைதியையும், பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய கட்டடப் பாணி என பல விஷயங்களையும் ஒரே இடத்தில் அனுபவிப்பதற்கு உகந்தது ஜென்மராக்கினி தேவாலயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x