Published : 06 Mar 2014 05:14 PM
Last Updated : 06 Mar 2014 05:14 PM

பெண்களின் உயர்ந்த ஸ்தானம்

ஸ்திரீகளுக்குத்தாமாக யக்ஞம் பண்ண அதிகாரமில்லை என்பதை மட்டும் பார்த்து ஆக்ஷே பணை பண்ணுகிறவர்கள், பத்தினி இல்லாத புருஷனுக்கு யக்ஞம் செய்கிற அதிகாரமில்லை என்கிற விஷயத்தையும் கவனித்தால், ஹிந்து சாஸ்திரம் பெண்களை மட்டம் தட்டுகிறது என்று சொல்ல மாட்டார்கள். பத்தினி உள்ளவன்தான் யக்ஞம் செய்ய வேண்டும்; அப்படிப்பட்ட யக்ஞ கர்மாநுஷ்டானத்தை இவன் லோக க்ஷேமத்துக்காகவும் தன் சித்த சுத்திக்காகவும் ஆரம்பிக்க வேண்டும் என்றேதான் பிரம்மசரிய ஆசிரமம் முடிந்து ஸமாவர்த்தனம் ஆனபின் விவாஹம் என்கிற ஸம்ஸ்காரத்தை வைத்திருக்கிறது.

விவாஹத்துக்கு "ஸஹ தர்ம சாரிணீ ஸம்ப்ரயோகம்" என்று பேர். அதாவது "தன்னோடுகூட தர்மத்தை நடத்திக் காட்டுகிறவளோடு பெறுகிற உத்தமமான சேர்க்கை" என்று அர்த்தம். அதாவது, இந்திரிய ஸுகம் இதில் முக்கிய லக்ஷ்யமல்ல. லோகத்தில் தர்மங்களை அநுஷ்டிப்பதுதான் லக்ஷ்யம். அதைத் தனியாக அநுஷ்டிக்கச் சொல்லவில்லை. அதற்குத் துணையாக ஒரு ஸ்திரீயைச் சேர்த்துக்கொள்ளும்படி சாஸ்திரம் சொல்கிறது. `தர்ம பத்தினி', `ஸஹ தர்ம சாரிணி' என்பதாகப் பொண்டாட்டியை தர்மத்தோடு ஸம்பந்தப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறதே தவிர, காமத்தோடு அல்ல. இதிலிருந்து சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுத்துள்ள உயர்ந்த மதிப்பைப் புரிந்துகொள்ளலாம்.

பிரம்மசாரி, தான் மட்டில் தன் ஆசிரம தர்மத்தைப் பண்ணுகிறான்; ஸந்நியாஸியும் அப்படியே. இல்லறம் நடத்துகிற கிருஹஸ்தாச்ரமி மட்டும் தனியாக இல்லாமல் பத்தினியுடன் சேர்ந்தே தன் தர்மத்தை, கர்மங்களைப் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. இருவருக்கும் இது பொதுச் சொத்து. பத்தினி இருக்கிற கிருஹஸ்தனுக்கு மட்டுமே யாக யக்ஞாதிகளை சாஸ்திரத்தில் வைத்திருக்கிறதே தவிர, பிரம்மசாரிக்கும் ஸந்நியாஸிக்கும் இவை இல்லை.

இந்திரிய ஸெளக்யத்துக்காக மட்டுமே பத்தினி என்றால், பத்தினி இல்லாவிட்டால் ஒருவன் யக்ஞம் பண்ணக் கூடாது என்று வைத்திருக்குமா? அவள் பக்கத்தில் நின்றால்தான் இவன் யக்ஞம் பண்ணலாம். கர்த்தாவாக அவளே நேரே யக்ஞம் பண்ண `ரைட்' இல்லை என்பதை மட்டும் கவனிக்கும் பெண் விடுதலைக்காரர்கள், அவள் இல்லாவிட்டால் இவனுக்கும் `ரைட்' போய்விடுகிறது என்பதை யும் கவனிக்க வேண்டும். வேதத்திலேயே இப்படி விதித்தி ருக்கிறது: “பத்நீவதஸ்ய அக்னி ஹோத்ரம் பவதி”. ஒரு பெரியவர் தன் பத்தினி செத்துப் போனபோது, “என் யக்ஞ கர்மாநுஷ்டானங்களையெல்லாம் கொண்டுபோய்விட்டாளே" என்று அழுதாராம்!

தர்மத்துக்கும், கர்மத்துக்கும் கைகொடுப்பவளாக ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x