Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

திருமழிசையாழ்வார்: பெருமாளின் சக்கரம்

பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த திருமழிசை என்ற திருநாமம் கொண்ட ஆண் மகவு, பின்னாளில் பெருமாள் மேல் கொண்ட ஆறாத பக்தியால் பல பாசுரங்களை இயற்றித் திளைத்தது. சக்கரத்தாழ்வாரே இத்திருக்குழந்தையாகப் பிறந்து திருமழிசை ஆழ்வார் என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது வரலாற்றில் காணப்படும் அற்புதங்கள்:

பிரப்பங்காட்டில் இருந்த இக்குழந்தையை, பிரம்பு வெட்டிச் செல்ல வந்த திருவாளன் என்பவர் கண்டார். கண்ணுக்கு இனிய அக்குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். இக்குழந்தையோ பால் அருந்தவில்லை. பசியென்று அழவும் இல்லை.

ஆனாலும் பிறந்த பச்சிளங்குழந்தை உண்ணா நோன்பு இருந்ததால் பார்ப் போருக்கு மனம் பதைத்தது. அதில் ஒருவர் தன் மனைவி யிடம் பசும்பாலைக் காய்ச்சி இனிப்புச் சுவையேற்றிக் கொடுக்கச் சொல்ல, குழந்தையும் பால் அருந்தத் தொடங்கியது. காலம் பல சென்ற பின்னர் ஓர் நாள் சிறுவனான அக்குழந்தை சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அத்தம்பதி யினரைப் பருகக் கூற, அருந்தியவுடன் அவர்கள் முதுமை நீங்கியது. இளமை பெற்ற அவர்களுக்கு இப்பாலின் மகிமையால் குழந்தையொன்று பிறக்க அக்குழந்தைக்கு களிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சீரும், சிறப்புமாய் வளர்ந்த களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். ஆரம்ப காலங்களில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார் திருமழிசை. இவரை முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், வைணவ சமயத்தை ஏற்கச் செய்து, திருமந்திர உபதேசம் செய்தார்.

பின்னாளில் காஞ்சிபுரம் சென்ற திருமழிசை தன் ஆசிரமத்தை சுத்தம் செய்யும் வயோதிகப் பெண்ணை அவளது விருப்பப்படி இளமையாக்கினார். இப்பெண்ணின் இளமையைக் கண்ட பல்லவ மன்னன், அப்பெண்ணை மணந்தான். தானும் இளமையாக வேண்டும் என்று விரும்பினான் மன்னன். தன் விருப்பத்தை ஆழ்வாரின் சீடனான களிக்கண்ணனிடம் தெரிவித்தார். இப்படிப்பட்ட வரங்களை அனைவருக்கும் அளிக்க இயலாது என களிக்கண்ணன் எடுத்துக் கூற கோபம் கொண்டான் மன்னன்.

சீடரை உடனடியாக நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் தானும் காஞ்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தான் பூஜித்து வந்த காஞ்சி வரதராஜப் பெருமாளிடம், `நாங்கள் இல்லாத இக்காஞ்சியில் உனக்கும் வேலை இல்லை. பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு நீயும் எங்களுடன் வந்துவிடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையைச் சுருட்டிகொண்டு ஆழ்வா ருடன் சென்றார் என்கிறது இத்திருத்தல வரலாறு.

பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x