Last Updated : 08 Sep, 2016 11:03 AM

 

Published : 08 Sep 2016 11:03 AM
Last Updated : 08 Sep 2016 11:03 AM

புனித நிலைக்கான யாத்திரை

அன்னை தெரசா, மரணமடைந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 4-ம் தேதி செய்ன்ட்ஹூட் என்னும் புனிதர் பட்டத்தைப் பெற்றுள்ளார். வாடிகன் திருச்சபை ஒப்புக்கொண்ட அவர் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் அற்புதங்களை விட அவரது சேவைகள் இன்று அதிகமாக நினைவுகூரப்படுகின்றன. ஒரு எளிய கன்னிகாஸ்திரீயாக இருந்து புறக்கணிக்கப்பட்ட, வீடற்ற, இறக்கும் தறுவாயிலுள்ள எண்ணற்ற ஏழைகளின் தனிமையையும் வறுமையையும் போக்குவதற்காக வாழ்க்கை முழுவதும் பாடுபட்டவர் அவர்.

சேவைக்காகக் கடல்களைக் கடந்தவர்

யுகோஸ்லாவியாவில் உள்ள ஸ்கோப்ஜ் நகரத்தில் மதப்பற்று கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் தந்தையைப் பறிகொடுத்தார். அவரது தாய் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட்டத்தைப் பார்த்து இளம் வயதிலேயே, வாழ்க்கையின் நிலையற்ற தன்மைகளையும் போராட்டங்களையும் இளம் ஆக்னஸ் (அப்படித்தான் சிறு வயதில் அவர் அழைக்கப்பட்டார்) பார்த்தார். ஒழுக்கம், விடாமுயற்சி, சிக்கனம் மற்றும் கருணையின் மகத்துவத்தை அவர் இளம் வயதிலேயே அடைந்த அனுபவங்கள் உணர்த்தின.

ஆக்னஸ் தனது 14-வது வயதில் திருச்சபைப் பணியாளராக, வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடிந்த தூரதேசமான இந்தியாவில் சேவை செய்வதற்குத் தீர்மானித்தார். அவர் மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பவேயில்லை.

கொல்கத்தாவில் புதிய வாழ்வு

1948-ல் கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரீயாகக் குறைந்தபட்ச பாதுகாப்பையும் உதறி, கொல்கத்தாவின் தெருக்களில் தனிமனுஷியாக இறங்கினார். அங்குதான் தனது உண்மையான பணி இருக்கிறது என்பதை நம்பினார்.

“வறுமையின் சிலுவையைச் சுமக்கும் சுதந்திரக் கன்னியாஸ்திரீயா வதற்கு தேவன் என்னை விரும்பினார். இன்று, நான் நல்ல பாடமொன்றைப் படித்தேன். ஏழையின் வறுமை என்பது மிகவும் கடினமானது. ஒரு அடைக்கல இடத்தைக் கண்டறிவதற்காக நான் எனது கால்களும் தோள்களும் வலியெடுக்கும் வரை நடக்கிறேன். ஒரு தங்குமிடத்திற்காக, உணவுக்காக, ஆரோக்கியத்திற்காக அந்த ஏழைகள் உடலும் ஆன்மாவும் வலிக்க வலிக்க எத்தனை தூரம் நடந்திருப்பார்கள். அப்போதுதான், எனது முந்தைய கன்னியாஸ்திரி வாழ்க்கையின் சுகங்கள் நினைவுக்கு வந்தன. தேவனே, உன் மேல் உள்ள அன்பின் காரணமாக, உங்களது புனித விருப்பம் எதுவோ அதுவாக மாறி உங்களது விருப்பத்தை நிறைவேற்றும் முடிவை எடுத்துள்ளேன். இதற்காக ஒரு துளி கண்ணீரைக்கூட நான் விடவில்லை” என்று உறுதிமொழி எடுத்துத் தனது பணிகளைத் தொடங்கினார் தெரேசா.

1965-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தனது ‘மிஷனரிஷ் ஆப் சேரிட்டி’ மூலம் பல அமைப்புகளை உருவாக்கியவர், உலகம் முழுக்க ஏழைகளுக்கும் நோயாளர்களுக்கும் தனது சேவை தேவையாக இருப்பதை உணர்ந்தார். ஆப்ரிக்காவில் தொழு நோயாளிகளுக்கு உணவு வழங்கும் மையங்கள், அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் என நிறுவி வறியவர்கள், அநாதைகள், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான சேவையைப் பல கண்டங்களுக்கும் கிளை பரப்பினார். லண்டன் வாட்டர்லூ பாலத்திற்கு கீழே, குளிர் நடுக்கமெடுக்கும் இரவுகளில் சூடான உணவை அன்னை தெரேசா உருவாக்கிய ஸ்மைலிங் சிஸ்டர்ஸ் வழங்கும் போது புன்னகைக்கும் முகங்களைப் பார்த்தால் கடவுள் சிரிப்பதைப் போலிருக்கும்.

அவர் பிறப்பால் அல்பேனியர். வாழ்க்கையால் இந்தியர். தனது பரந்த சேவை மூலம் உலகத்தையே தனது வீடாக வரித்துக்கொண்டவர்.

“ஒருவர் இறந்துகொண்டிருக்கும் போது, அவரை எழுப்புகிறேன். பசியோடு இருப்பவர் ஒருவரைப் பார்க்கும்போது உணவு தருகிறேன். அவர் நேசிக்கவும் நேசிக்கப்படவும் வேண்டியவர். நான் அவரது நிறத்தைப் பார்ப்பதில்லை. நான் அவரது சமயத்தைப் பார்ப்பதில்லை. அவர் இந்து, முஸ்லிம், பவுத்தர் யாராகவும் இருக்கலாம். அவர் எனது சகோதரர், சகோதரி” என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

துயரத்திலிருக்கும் மனிதனை சிலுவைப்பாட்டை அனுபவிக்கும் கிறிஸ்துவாகப் பார்த்தவர் அவர். அவனுக்கு இளைப்பாறுதல் தந்து, அவனிடம் வரும் புன்னகையை இறைவனின் புன்னகையாகத் தரிசித்தவர் அவர். அவர் செய்த ரசவாதமும் அற்புதமும் அவைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x