Published : 04 Aug 2016 10:15 AM
Last Updated : 04 Aug 2016 10:15 AM

வீடும் திவ்ய தேசமே!

ஞான சக்தியில்லாதவர்களும் தன்னை வணங்கிப் பலனடைய வேண்டும் என்பதற்காகவே சர்வேஸ்வரன் சாளக்கிராம உருவத்தில் பூஜிப்பவர்களின் வீட்டில் சிறு இடத்தையும் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறான்.

சாளக்கிராமங்களில் பல வகைகள் இருந்தாலும் மூர்த்திகளின் அமைப்பு, அதில் எந்த எம்பெருமான் அமைந்துள்ளான் என்பதை விஷயமறிந்த பெரியோர்கள் குறிப்பறிந்து சொல்வார்கள்.

திருமால் அடியார்கள் சாளக்கிராம பூஜைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் சிவனடியார்கள் ருத்ராக்ஷத்தை வணங்குகிறார்கள். சிவ பாஞ்சாயன பூஜையில் ஐந்து கடவுளை வணங்குபவர்கள் பலர். அதில் திருமால் ஸ்தானத்துக்குச் சாளக்கிராமத்தையே பிரதானமாகக் கொள்வர்.

சாளக்கிராமம் என்பது உருண்டையாகவும், சில சமயங்களில் நீண்ட வடிவமாகவும் இருக்கும். நாவல் பழம் போன்று கறுத்தும், ஒளிவீசும் தன்மையுடனும், வழவழப்பாகவும், ஒரு விதக் கூழாங்கல் போன்றும் இருக்கும். அளவினைப் பொறுத்தவரை சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம்வரை இருக்கும். இவற்றின் மதிப்பை யாரும் நிர்ணயிக்க முடியாது.

சாளக்கிராமம் என்பது பெயரா?

சாளக்கிராமம் என்பது ஒரு பெயரா என்பதைப் பற்றி பல கருத்துகள் நிலவுகின்றன. சாளக்கிராம தீர்த்தத்தில் ஆச்சாமரங்கள் நிறைந்திருப்பதால் சாளக்கிராமம் என்ற பெயர்தான் பொருத்தமாயிருக்கும் என்கிறார்கள் சிலர். வேறு சிலர், சாளக்கிராமம் என்பது உயர்ந்த ஒரு கல் என்றும் அபிப்ராயம் கொண்டுள்ளார்கள். உச்சரிப்பு எதுவாக இருந்தாலும் சக்கரம், சுருள் போன்ற பெயர்களே பொருத்தமானது என்று சொல்கிறவர்களும் உண்டு. இந்தச் சக்கரங்கள் வஜ்ரகீடம் என்ற வண்டால் உண்டாக்கப்படுவதால் சாளக்கிராமம் என்று அழைக்கப்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.

இப்படிப் பலவிதமான கருத்துகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் சாளக்கிராம மூர்த்திகளின் லட்சணங்கள், ரூபங்கள், பூஜா விதி, பூஜா பலன் பற்றிய புத்தகம் 1986-ல் .உ.வே.ம.ச. கிருஷ்ணமாச்சார் எழுதி  விசிஷ்டாத்வைத பிரசாரிணி ஸபாவால் வெளியிடப்பட்டுள்ளது.

சாளக்கிராமம் நேபாளத்தில் அமைந்துள்ள முக்திநாத் தலத்தில் கண்டகி நதி தீர்த்தத்திலிருந்து கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆழ்வார்களில் பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இந்தத் தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளதால் திவ்யதேசமாக கருதப்படுக்கிறது. பன்னிரெண்டு சாளக்கிராமங்கள் இருந்தால் அந்த வீடு திருமாலின் திவ்ய தேசமாகத் திகழும். திவ்ய தேசத்தில் குடியிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் வைணவர்கள்.

சாளக்கிராம ஆராதனை

கோயிலாழ்வாரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை ஆசார்யர்களை முன்னிட்டுத் துயிலெழுப்பி, குலதெய்வம் இஷ்டதெய்வங்களையே மானசீகமாகக் கருதி ஆராதனை செய்ய வேண்டும். திருமஞ்சனம், துளசி, தூய்மையான தண்ணீர், பால் இவற்றால் திருமஞ்சனம் செய்து அமுது படைக்க வேண்டும். பால், பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும். பெருமாளை மீண்டும் துயில்புரிய வேண்டி கோயிலாழ்வாரின் திருக்கதவுகளைச் சாற்றி தெண்டனிட்டுத் தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் சகல நோய் நொடிகளையும் போக்கும், நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.

இதுவே பஞ்சலோக விக்ரக வடிவில் மூர்த்திகள் அமைந்திருந்தால் அவசியம் குறைந்தபட்சம் சுத்தான்னம், தயிர் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாகப் பெண்கள் ஆராதனை செய்யக் கூடாது, தொடவும் கூடாது. ஆண்கள் யாரும் இல்லாதபட்சத்தில் கோயிலாழ்வாரைத் திறந்து எதிரே சுத்தான்னம் இத்யாதிகளைச் சமர்ப்பித்துத் தெண்டனிட்டு மானசீகமாக அவன் அருள் பெறலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெளியிடங்களுக்கு, வெளியூர்களுக்குச் செல்ல நேர்ந்தால் முறைப்படி பூஜைகள் நடத்தும் உறவினர்கள் வீட்டில் வைத்துவிட்டுச் செல்லலாம். சாளக்கிராமங்கள் மட்டும் இருந்தால் அரிசிப் பானையில் எழுந்தருளச் செய்துவிட்டுப் போகலாம். திருவாராதனத்தின் நோக்கம், உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்வது. பொதுவாக கடவுளுக்குப் படைக்கப்பட்டவைகளையே சாப்பிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x