Published : 25 Apr 2014 02:37 PM
Last Updated : 25 Apr 2014 02:37 PM
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அதைத்தவிர உள்ள பாவத்தை, தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ, அவர் மகத்தான பாவத்தை திட்டமாகக் கற்பனை செய்துவிட்டார்” அல் குர் ஆன்(4:48)
மனிதன் செய்கின்ற பாவங்களில் எல்லாம் பெரும்பாவம், தன்னைப் படைத்தவனுடன் படைக்கப்பட்ட பொருளையோ, மனிதனையோ கூட்டாக்குவதாகும். வல்ல அல்லாஹ் மிக்க சக்தி வாய்ந்தவன். மனிதனுக்கு ஏற்படும் இன்பம்-துன்பம், ஏற்றம்-இறக்கம், லாபம்-நஷ்டம், உயர்வு-தாழ்வு, கண்ணியம்-கேவலம் சகலத்துக்கும் இறைவனே காரணம். அவனது ஆணையின்றி அணுவும் அசையாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் பதிந்திருக்க வேண்டும்.
மனிதன் செய்யும் எந்தப் பாவங்களையும் அல்லாவை நாடினால் மன்னித்துவிடுவான். ஆனால் இணை வைப்பவனை மன்னிக்கவே மாட்டான். அது மிகப் பெரிய அநீதமாகும்.
“நானும் நாடினேன். அல்லாஹ்வும் நாடினான். காரியம் நடந்துவிட்டது எனக் கூறாதீர்கள். அல்லாஹ் நாடினான், நானும் நாடினேன் என்று அல்லாஹ்வின் நாட்டத்தை முற்படுத்துங்கள்” என்கிறார் நபிகள் நாயகம்.
“ஒருவன் தான் சொல்வதெல்லாம் உண்மை, தவறு நிகழ வாய்ப்பில்லை எனக் கூறினால் அவனையும் அறியாமல் தன்னை நபியென வாதிடுகிறான். தான் நினைத்தது போல் நடக்க வேண்டும் என்று யாரேனும் விரும்பினால் அவன் தன்னையும் அறியாமல் அல்லாஹ் என்று வாதிடுகிறான்” என்றார்கள் ஹஸ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட அதே தினத்தில் நபியவர்களின் மகனார் இப்ராஹீம் இறந்துவிட்டார். அவர் இறந்ததினால்தான் சூரியன் துக்கப்பட்டு மறைகிறது என்று சிலர் அறியாமையால் கூறினார்கள். உடனே நபியவர்கள் எனது மகனின் இறப்பிற்கும் சூரிய கிரகணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. அல்லாவின் ஏற்பாட்டின்படியே மரணமும் நிகழ்ந்தது, சூரிய கிரகணமும் ஏற்படுகிறது என்றார்கள்.
அவன் கொடுக்க நினைத்ததைத் தடுப்பவர் யார்? அவன் தடுக்க நினைத்ததைக் கொடுப்பவர் யார்?
கொடுப்பவனும் தடுப்பவனும் எடுப்பவனும் அந்த வல்ல ரஹ்மான்தான் என்ற நம்பிக்கை வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT