Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகத் தேடலில் தன்னை இணைத்துக் கொண்டவர். இஸ்லாம் சமயத்துக்குப் பல பாடல்களை விட்டுச் சென்றவர் குணங்குடி மஸ்தான் சாகிப்.
ராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் காலம் கிபி 1788 – 1835க்கு இடைப்பட்டது. அவருடைய தாய்மாமன் புதல்வி மைமூனை மணமுடிக்கக் குடும்பத்தார் கோரிக்கை வைத்த போது, அதை நிராகரித்து விட்டு 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார்.
இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்கக் கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறைக்காதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகத்தில் நாட்டம் கொண்டவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கிப் பித்தநடை கொண்டார்.
குப்பை மேடுகள்கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்த நடையையும் அற்புதச் சித்துகளையும் கண்ட மக்கள் அவரை ‘மஸ்தான்' என அழைத்தனர். அப்பெயரே பின்னர் அவருக்கு நிலைத்தது. இவர் சென்னையில் வாழ்ந்த தொண்டியார் பேட்டை என்ற இடம்தான் பிற்காலத்தில் தண்டையார்பேட்டையானது. ராயபுரத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது.
குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை.
இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள் நிலை
தவ நிலை, துறவு நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முகமது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு பாடல் பகுதிகளும் இவரது பாடல்களில் அடக்கம்.
குறைந்த காலமே வாழ்ந்திருந்தாலும், குணங்குடி மஸ்தான சாகிப் இஸ்லாமியச் சமயத்துக்கும் உலகிற்கும் பாடல்கள் மூலம் அளித்துச் சென்ற கருத்துகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT