Published : 16 Jun 2016 11:50 AM
Last Updated : 16 Jun 2016 11:50 AM
ஆபிரகாமின் பேரனும், ஈசாக்கின் மகன்களில் ஒருவருமான யாக்கோபு, தன் சகோதரன் ஏசாவுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தலைமகனுக்கான ஆசீர்வாதத்தைத் தந்திரமாகப் பெற்றுக்கொண்டார். இதனால் ஏசாவின் கோபத்துக்கு ஆளானார். பெற்றோரின் அறிவுறுத்தலை ஏற்று கானான் தேசத்திலிருந்து வெளியேறி ஆரானை அடைந்தார். அங்கே வசித்துவந்த தனது தாய் மாமன் லாபானின் இரு பெண்களையும் அவர்களது பணிப்பெண்கள் இருவரையும் மணந்துகொண்டார். 11 மகன்கள் பிறந்தனர். சில மகள்களும் யாக்கோபுவுக்கு இருந்தாலும் விவிலியம் தீனாள் என்ற அவரது மகளைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறது.
சொந்த மண்ணைப் பிரிந்து ஒரு நாடோடியாய் ஆரானில் 20 ஆண்டுகள் வாழ்ந்த யாக்கோபு தனது நாடோடி வாழ்வை முடித்துக்கொண்டு கானானுக்குத் திரும்ப முடிவு செய்தார். தன் சகோதரன் ஏசாவை சமாதானப்படுத்திவிடலாம் என்று நம்புகிறார். தன்னைப் பலவகையிலும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த லாபானிடமிருந்து சொல்லாமல் புறப்பட்ட யாக்கோபுவையும் அவரது குடும்பத்தாரையும் பாதி வழியில் தடுத்துநிறுத்தித் தாக்க நினைத்தார் லாபான். ஆனால் யாக்கோபுவுக்குப் பரலோகத் தந்தையாகிய கடவுளின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் இருப்பதைக்கண்டு, யாக்கோபுவைத் தடுக்காமல் அவரை வழியனுப்பிவிட்டு லாபான் ஊர் திரும்பினார்.
சகோதரனோடு சமாதானம்
லாபானின் மனமாற்றத்தைக் கண்டு நிம்மதியடைந்த யாக்கோபு கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஏசா, ஏதோம் நகரைச் சேர்ந்த சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்ததை யாக்கோபு அறிந்துகொண்டார். ஏசாவிடம் தன் தூதுவர்களை அனுப்பினார். யாக்கோபு தன் தூதர்களிடம், “ எனது எஜமானனான ஏசாவிடம் இதைச் சொல்லுங்கள். உங்கள் வேலைக்காரனான யாக்கோபு இந்த நாள்வரை லாபானோடு வாழ்ந்தேன். என்னிடம் நிறைய பசுக்களும், கழுதைகளும், ஆடுகளும், ஆண் வேலைக்காரர்களும், பெண் வேலைக்காரர்களும் உள்ளனர். ஐயா நீர் எங்களை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தூதுவரை அனுப்பினேன்” என்று சொல்லியனுப்பினார். தூதுவர்கள் அப்படியே செய்தனர். ஆனால் யாக்கோபுவைச் சந்திக்க 400 பேர்களைக் கொண்ட தனது படையணியுடன் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். இதனால் மிகவும் பயந்த யாக்கோபு, தன்னோடு இருந்தவர்களையும் மிருகங்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால், இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும் என்று நினைத்தார்.
பிரார்த்தனையும் பரிசுகளும்
பிறகும் ஏசாவின் கோபம் தீராமல் இருந்தால் தன்னால் தப்பிச் செல்ல இயலாதே என்று நினைத்த யாக்கோபு தன்னை வழிநடத்திய கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். “ என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினீர். என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனல்ல. நான் யோர்தான் நதியை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கும் அளவுக்கு என்னை நம்பி பல உயிர்கள் உள்ளன. பெருஞ்செல்வம் உள்ளது. என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவரைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவர் வந்து அனைவரையும் கொன்றுவிடுவார். கர்த்தாவே, ‘நான் உனக்கு நன்மை செய்வேன் என்றும் உனது குடும்பத்தையும் ஜனங்களையும் கடற்கரையிலுள்ள மணலைப் போன்று பெருகச் செய்வேன்’ என்று கூறினீர்” என்று மனமுருக மன்றாடினார். கடவுள் யாக்கோபுவின் பிரார்த்தனையைக் கேட்டார்.
பிறகு யாக்கோபு உற்சாகமடைந்தது தனது மந்தையிலிருந்து முதல்தரமான 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், 15 பால் கொடுக்கும் பசுக்களையும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். பிறகு தன் வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்படைத்து “என் சகோதரன் ஏசா வந்து, ‘ இவை யாருடைய மிருகங்கள், எங்கே போகின்றன, நீங்கள் யாருடைய வேலைக்காரர்கள்?’ என்று கேட்டால் ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் விலங்குகள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபுவும் அவரது குடும்பத்தினரும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
முதல்தரமான விலங்குகளைக் கண்ட ஏசா வியந்து வேலைக்காரர்கள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியப்பட்டான். ஆனால் அவற்றின் மீது ஏசாவுக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஏசா பெரும் செல்வந்தனாக இருந்தான்.
மனம் கனிந்த ஏசா
கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாக்கோபுவைக் கண்டு புன்முறுவல் பூத்தார் ஏசா. சகோதரனின் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு நிம்மதியடைந்த யாக்கோபு, ஏசாவை நெருங்கியபடியே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினார். முதிர்ந்த வயதில் சகோதரனின் பணிவைக் கண்டு வியந்த ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து யாக்கோபுவைக் கட்டித் தழுவிக்கொண்டு முத்தமிட்டார். இருவரும் தங்கள் பிரிவை எண்ணி அழுதனர். பின்னர் ஏசாவை யாக்கோபுவின் குடும்பத்தினர் அனைவரும் பணிந்து வணங்கினர்.
பிறகு யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இந்தப் பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். ஆனால் ஏசாவோ, “எனக்கு நீங்கள் பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான். அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றார். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா, பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டார். பிறகு ஏசா, யாக்கோபுவை சொந்த மண்ணில் அனுமதித்தான். யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்துக்கு அருகில் முடித்துக்கொண்டார். நகரத்துக்கு அருகிலுள்ள வயலொன்றை விலைக்கு வாங்கித் தனது கூடாரத்தைப் போட்டார். கடவுளைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினார். யாக்கோபு அந்த இடத்திற்கு ‘ஏல் எல்லோகே இஸ்ரவேல்’ என்று பெயரிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT