Published : 12 Sep 2013 07:28 PM
Last Updated : 12 Sep 2013 07:28 PM
இந்திய நவீன ஆன்மிக வரலாற்றில் 19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை, இந்திய ஆன்மிகத்தின் மறுமலர்ச்சி காலகட்டம் என்றே சொல்லலாம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீர்டி சாய்பாபா முதல் தெற்கே ரமண மகரிஷி வரை நூற்றுக்கணக்கான ஞானிகள் இந்தியாவில் தோன்றி பல்வேறு கிளை வழிகளில் மெய்ஞானத்தை உபதேசித்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் தோன்றிய ஞானிகள் அனைவரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீர்டி சாய்பாபா போன்ற சிலரின் வாழ்க்கை மட்டுமே நமக்கு புத்தகங்களாக தற்போது கிடைக்கிறது.
இந்நிலையில், 1893-ல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் மற்றும் அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக முக்கியத்துவம் பெறுகிறது.
பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று 22 வயதில் துறவியாக மலர்ந்தவர். உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த அறிவுப் பொக்கிஷமான கிரியா யோகத்தை நிறைய பேருக்கு பயிற்றுவித்தவர். மகாத்மா காந்தி இவரிடம் கிரியா யோகத்தைப் பயின்றிருக்கிறார்.
ஒரு யோகியின் சுயசரிதையை தனது குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறுவயதில் தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காக பெற்ற விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் ஒப்புக்கொள்கிறார்.
இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்த முக்கியமான துறவிகள் குறித்த ஆவணம் என்ற வகையிலும் இது முக்கியமான நூலாகும். மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், ஆனந்த மயி அன்னை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் என பல துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை இந்நூலில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு நெருக்கமானது.
புத்தகத்தின் இறுதிப் பகுதி வரை ஒரு குழந்தையின் விந்தை மாறாமல் அவர் வாழ்க்கையையும், துறவையும் கடந்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு அமைப்பாக யோக பாடசாலையை நிறுவும்போதும் கூட அவரது புன்னகை அவரது மொழியில் மாறாமலேயே உள்ளது. உபநிசதம், பகவத் கீதா, இந்தியப் புராணங்கள், பைபிள் மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து அவர் காட்டும் மேற்கோள்கள் சுவாரசியமானவை. ஓர் ஆன்மிக நூலைப் படிப்பதில் எந்த விருப்பமும் இல்லாதவர்கள்கூட ஒரு யோகியின் சுயசரிதையை ஒரு நாவலாக, செழுமையான அனுபவம் கொண்ட ஓர் ஆளுமையின் வாழ்க்கைக் கதையாக, ஒரு புதிரான அனுபவமாக இப்புத்தகத்தை வாசிக்க முடியும்.
வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும் இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது. இவர் இந்து மதத்தைக் கடந்து கிழக்கு-மேற்கு என்ற பிரிவினைகளைக் கடந்து மனித மனம் மேற்கொள்ளும் சுயதேடலை காரண காரிய அறிவுடன் பரிசீலித்தவர். கிறிஸ்துவின் போதனைகளுக்கு தனது யோக அறிவின் மூலம் விளக்கம் கொடுக்க அவரால் முடியும். இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆன்மிக காவிய நூல்களில் இதுவும் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT