Last Updated : 09 Nov, 2016 05:06 PM

 

Published : 09 Nov 2016 05:06 PM
Last Updated : 09 Nov 2016 05:06 PM

பைபிள் கதைகள் 26: இரண்டாய்ப் பிளந்த செங்கடல்

பல தலைமுறைகளாக எகிப்தியர்களிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் இருந்தனர். அவர்களை மோசே தலைமையில் மீட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துச் சென்றார் கடவுள். அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ மக்களை வழிநடத்திச் செல்… இரவு நெருங்கியதும் மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்களைத் தங்க வை. அப்போது இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் வழிதெரியாமல் திண்டாடுகிறார்கள் என்றும் அவர்களுக்குப் போக்கிடம் இல்லை என்று பாரவோன் நினைப்பான். அவன் இவ்வாறு நினைக்கும்படி நான் செய்வேன். அவன் தனது தேர்ந்த படைகளின் ஒரு தொகுதியுடன் புறப்பட்டு வந்து உங்களைத் துரத்துவான். ஆனால் பாரவோனையும் அவனது சேனையையும் நான் தோற்கடிப்பேன். அதைக்கண்டு இஸ்ரவேல் மக்கள் எனக்கு முழுமையாகக் கீழ்ப்படிவார்கள்” என்றார்.

துரத்தி வந்த மன்னன்

கடவுள் கூறியபடியே பாரவோனும் அவனது தலைமை அதிகாரிகளும் மனம் குமைந்து போனார்கள். காலம் காலமாக நமக்கு அடிமைகளாக இருந்து பல நகரங்களை எழுப்பித் தந்தவர்கள், நமக்கு சேவகம் செய்து வரி செலுத்தியவர்கள், அப்படிப்பட்ட நம் அடிமைகளை தப்பவிட்டது எத்தனைபெரிய முட்டாள்தனம்

என்று கடவுள் அவர்களது எண்ணத்தைக் கிளறிவிட்டார். “ மதிப்புக்குரிய நமது அடிமைகளை இப்போது நாம் இழந்துபோனோம்!” என்று பாரவோன் மனம் கொதித்தான். இன்னும் நேரம் கடந்துவிடவில்லை என்று எண்ணிய அவன், தனது தலைசிறந்த 600 மாவீரர்களை உடனடியாகத் திரட்டினான். வலிமைமிக்க தனது ரதப்படையை அவர்களிடம் ஒப்படைத்தான். ஒவ்வொரு தேரிலும் ஒரு வீரனும் ஒரு அதிகாரியும் இருந்தனர். இந்தப் படையுடன் குதிரை வீரர்களின் அணியும் இணைந்துகொண்டது. தனது படையணியை அழைத்துக் கொண்டு இஸ்ரவேல் நடத்திச் சென்றான். கோபாவேசத்துடன் புறப்பட்ட

அவர்கள், செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத் என்ற இடத்தை நோக்கி இஸ்ரவேல் மக்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை இலக்காக வைத்து, புழுதி கிளப்பியபடி புயலென நெருங்கி வந்தனர்.

புலம்பிய மக்களும் கலங்கிய மோசேவும்

பாரவோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தனர். அவர்கள் மோசேயை நோக்கி, “எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தது இந்தப் பாலைவனத்தில் சாவதற்காகவா? எகிப்தில் நிறைய கல்லறைகள் இருக்கின்றன. இங்கு அதுவுமில்லை. நாங்கள் இங்கு நிராதரவாக மடிவதைக் காட்டிலும் அங்கே அடிமைகளாக வாழ்ந்து சாவதே நலமாக இருந்திருக்குமே”என்று கோழைகள்போல் கதறியழுதனர்.

அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, “பயப்படாதீர்கள்! நம் கடவுளாகிய யகோவா தேவன் எதிரிகளின் கைகளில் சிக்காதவண்ணம் இன்று உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனி உங்கள் வாழ்நாட்களில் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். அழுது புலம்பாமல் அமைதியாக இருந்தாலே போதும், நம் கடவுள் நமக்காகப் போரிடுவார்” என்றார்.

உடனே வானை நோக்கி இறைஞ்சினார் மோசே. அப்போது கடவுள் மோசேயை நோக்கி, “ இன்னும் நீ என்னிடம் ஏன் அழுகிறாய்? செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள். உங்களைத் துரத்திவரும்படியாக நானே எகிப்தியருக்குத் துணிவை அளித்தேன். ஆனால் நானே பாரவோனையும், அவனது குதிரைகள் ரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்பதை அவர்கள் உணரும்படி செய்வேன்” என்றார்.

இரண்டாகப் பிளந்த கடல்

கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு மனதிடம் கொண்ட மோசே, தனது கைத்தடியை கடலைநோக்கி உயர்த்தினார். அப்போது பலத்த காற்று வீசி, கடலை இரண்டாகப் பிரித்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. வாயடைத்துப்போன இஸ்ரவேல் மக்கள், கடலின் உலர்ந்த தரையின் மேல் நடந்து போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் கோட்டை மதிற்சுவர்போல் உயர்ந்து நின்றது. அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் அதே வழியில் இஸ்ரவேல் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தனர். இதைக் கண்டு மக்கள் மீண்டும் அஞ்சி நடுங்கினார்கள்.

அப்போது கடவுள் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் ரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்”என்றார். அவ்வாறே மோசே தன் கைகளை உயர்த்தினார். பிளந்து நின்ற கடல் தண்ணீர், முன்புபோல் தன் இயல்புக்குத் திரும்பி, சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பியோட முயன்றார்கள். ஆனால் கடவுள் ரதங்களையும், குதிரை வீரர்களையும் கடலின் அடியாழத்தில் மூழ்கடித்துவிட்டார். பாரவோனின் தனிப்படையில் இருந்த 600 பேரில் ஒருவரும் பிழைக்கவில்லை!

செங்கடலை நடந்து கடந்து இஸ்ரவேல் மக்களில் கடைசி மனிதனும் கரையேறும்வரை பொறுத்திருந்த கடல் பின் முழுமையாக மூடிக்கொண்டது. கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேலர்கள் கண்டனர். கடவுளின் வல்லமையைக் கண்டு பயந்த அவர்கள் கடற்கரை மணலில் மண்டியிட்டு அவரை மதித்தார்கள். அவரது தாசனாகிய மோசேயையும் அவரது வார்த்தைகளையும் அதன்பின் முழுமையாக நம்ப ஆரம்பித்தனர். அப்போது, மோசேயின் சகோதரியாகிய மிரியம் ஒரு தம்புராவை எடுத்து இசைத்தபடி கடவுளை வாழ்த்திப் பாடத் தொடங்கினாள்.

“ கர்த்தரைப் பாடுங்கள்! அவர் பெரிய செயல்களைச் செய்தார். அவர் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் ரதங்களையும் கடலுக்குள் அமிழ்த்தினார்”என்று பாடினாள்.

மிரியமுடன் இணைந்துகொண்ட இஸ்ரவேல் பெண்கள் பாடவும் நடனமாடவும் செய்தனர். விடுதலையடைந்த மக்கள் அந்தக் கடற்கரையில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x