Published : 05 Jan 2017 10:31 AM
Last Updated : 05 Jan 2017 10:31 AM
மதத்தில் புரட்சி செய்த மகான் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி, சிறப்பு வெளியீடாக `ஸ்ரீராமாநுஜ தரிசனம்` என்ற தலைப்பில் பதிமூன்று தாள்கள் கொண்ட 2017 ம் ஆண்டு நாட்காட்டியை பற்பல வண்ணத்தில், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
பாரத நாடு முழுவதும் அவரது பாதம் பட்ட தலங்களைக் குறிப்பிடும் வகையில், இந்திய வரைபடத்தில் புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ள விதம் தெளிவு. ராமாநுஜரின் ஓவியம் தங்கத் தாம்பாளத்தில் வைத்தாற்போல் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருப்பது அவருக்குத் தனிச் சிறப்பு செய்வதாக அமைந்துள்ளது.
`பூமன்னு மாது பொருந்திய மார்பன்` என்று தொடங்கும் ஸ்ரீராமாநுஜர் நூற்றந்தாதி பாசுரம் முதல் பக்கத்திலேயே எடுத்தாளப்பட்டிருக்கும் விதம் அழகு. முதல் பக்கத்தைத் தொடர்ந்து வரும் பக்கங்களில் ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் பாஷ்யக்காரர் திருக்கோயில், திருப்புட்குழி அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், மதுராந்தகம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் அருள்மிகு செளமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பி திருக்கோயில் உள்ளிட்ட பன்னிரு ஸ்ரீவைணவத் தலங்கள் ஒவ்வொரு தாள் வீதம் இடம் பெற்று உள்ளன. அந்தந்தத் திருத்தலத்தில் ராமாநுஜருடனான சிறப்பை எடுத்துக்காட்டும் குறிப்புகள், ராமாநுஜரின் அர்ச்சா விக்கிரகம், திருத்தல திவ்ய தம்பதிகள் ஆகியோரின் உற்சவ விக்கிரங்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ள விதம் அருமை.
இந்த நாட்காட்டி இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களான ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் உட்பட பல திருக்கோயில்களில் அடக்க விலையான 60 ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT