Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
பிரபஞ்ச சக்தி பலவிதமாகச் செயல்படுகிறது. எதை நாம் உயிரென்று சொல்கிறோமோ, அது ஒரு சக்தி. அந்த சக்தி ஒரு பெரியமரமாகநிற்கிறது, அதே சக்தி ஒரு பறவையாக பறக்கிறது, அதே சக்தி ஒரு எறும்பாக இங்கே ஊர்கிறது, அதே சக்தி மனிதனாகவும் இங்கே இருக்கிறது. அந்த சக்தி மிக உயர்ந்த நிலையிலிருந்தால், அதனைக் கடவுள் என்கிறோம்.
கல்லாகயிருப்பதும் அதே சக்திதான், கடவுளாக இருப்பதும் அதே சக்திதான். படைத்தலுக்கு அடிப்படையான இந்த சக்தி பல விதங்களில் செயல்பட்டிருக்கிறது. இந்த சக்தியை நாம் பல விதங்களில் பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக மின்சாரம். மின்சார சக்தியை பல விதங்களில் பயன்படுத்தியிருக்கிறோம். நம் வாழ்வில் எல்லாத் தேவைகளுக்கும் மின்சாரம் உபயோகமாய் இருக்கிறது. அது நம் நண்பன்தான் என்று மின்சாரக் கம்பியைக் கட்டியணைத்துக்கொள்ள முடியுமா? அது ஒரு சக்தி. அந்தச் சக்தியை நாம் நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம், அழிவிற்கும் உபயோகப்படுத்தலாம்.
அதே விதமாக, உடல், மனம் இவற்றைக் கொண்டு உலகுக்கே நன்மை உருவாக்குகிற சூழ்நிலையை, உயிர் சக்தியைப் பயன்படுத்தி உருவாக்க முடியும். அல்லது உடல், மனம் இவற்றைக் கொண்டு உலகுக்கே கெடுதல் உருவாக்குகிற சூழலையும் உருவாக்க முடியும்.
இந்த அடிப்படையான உயிர் சக்தியை உபயோகப்படுத்தி மனிதனின் நன்மைக்காகவும், உலகின் நன்மைக்காகவும் ஒரு சக்தி வடிவத்தை நாம் உருவாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் கோயில்களை உருவாக்குகிற விஞ்ஞானம் உருவானது. இந்தியக் கலாச்சாரத்தில் உள்ள கோயில்கள் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை சக்தி வடிவங்கள்.
கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டுமென யாரும் சொல்லவில்லை. அங்கே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டுமெனச் சொன்னார்கள். ஏனென்றால், அந்த வடிவத்திலிருந்து வெளிப்படுகின்ற சக்தியை நமக்குள் கிரகித்து நன்மையை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று புரிந்ததால் அப்படிச் சொன்னார்கள்.
அதேபோல, இந்த சக்தியைப் பயன்படுத்தித் தீங்கினை உருவாக்குகிற வடிவைக்கூட உருவாக்க முடியும். இதைப் பில்லிசூனியம், ஏவல் என்பார்கள். அதர்வண வேதம் முழுவதும், இதைக் குறித்துதான் சொல்கிறது. சக்தியை நல்ல விதமாகவும், தீங்கினை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படச் செய்வது எப்படி என்ற விஞ்ஞானம் இதில் உள்ளது. ஆனால் உண்மையில் 90% தீங்குகள் பயத்தினாலேயே நேர்கிறது.
உங்களுக்குள் பயம் வந்துவிட்டால் இன்னோர் எதிரி உங்களுக்குத் தேவையே இல்லை. சமூகத்தில் நிறைய மனிதர்கள் பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.
எப்படிப்பட்ட அணுகுமுறை
கௌதம புத்தரிடம் பூர்ணான் என்றொரு சீடர் இருந்தார். அவர் ஒரு நாள் புத்தரிடம், “ஸ்ரோணப் பிராந்தியத்திற்குச் சென்று தியானம் சொல்லிக்கொடுக்கப் போகிறேன்” என்றார். ஸ்ரோணப் பிராந்தியம், ஆன்மீக வழிமுறைகள் எதையும் போதிக்க முடியாத இடம். ஆன்மிகத்தை, அங்குள்ள மக்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். போதிப்பவர்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். எனவே,
பூர்ணான், ஸ்ரோணப் பிராந்தியம் செல்வதாகச் சொன்னவுடன் புத்தர், “அங்குள்ள மக்கள் மிகக் கடுமையானவர்கள், உன்னை ஹிம்சிப்பார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டார். பூர்ணான் “எனக்குத் தெரியும். அதனால்தான் அங்கே செல்கிறேன், அவர்களுடைய தன்மையை மாற்றப் போகிறேன்” என்று கூறினார். கௌதம புத்தர், “அங்கே சென்றால் அவர்கள் மிக மோசமாகத் திட்டுவார்களே, நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார். பூர்ணான், “நான் அவர்களுக்கு நன்றி சொல்வேன். ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்காமல், திட்டத்தானே செய்தார்கள்!” என்றார்.
புத்தர், “அவர்கள் அடித்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். பூர்ணான், “நான் நன்றி சொல்வேன். ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கத்தானே செய்தார்கள், கொல்லவில்லையே!” என்றார். புத்தர், “உன் உயிரை எடுத்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு பூர்ணான், “நான் நன்றிதான் சொல்வேன், ஏனென்றால் இந்த உடல் கட்டுப்பாட்டிலிருந்து என்னை விடுவித்துவிட்டார்களே!” என்றார்.
அப்போது கௌதமர் சொன்னார், “சரி. நீ எந்தப் பிராந்தியத்தில் வேண்டுமானாலும் போய் தியானம் சொல்லிக்கொடு, அதற்கான திறமை உன்னிடம் இருக்கிறது” என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
எந்த விதமான சூழ்நிலைக்குள் நீங்கள் ஆட்பட்டாலும், அங்கே எத்தகைய சக்தி சூழல் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களின் நோக்கம் எப்படியிருந்தாலும், தியானத்தன்மை நமக்குள் உருவாகிவிட்டால், வெளியில் உள்ள சூழ்நிலை நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது. தியானத்தன்மை நமக்குள் வந்துவிட்டால் நம் நோக்கம் என்னவோ அதன்படி செயல்பட முடியும். இன்னொருவரின் பின்னால் செல்லும் சூழல் இருக்காது.
சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்துகொள்வதுதான் மிக அதிகம்.
மனமே மந்திரம்
எனவே உங்கள் மனதை நேர்மறையான மந்திர வித்தையாக மாற்றிவிட்டால், மற்றவர்களுடைய பில்லி சூனியங்களை நீங்கள் புறக்கணித்துவிடலாம். ஆனால் உங்கள் மனமே பில்லிசூனியமாக இருந்தால், உங்களை அழிப்பதற்கு யாரோ ஒருவர் கொஞ்சம் கொளுத்திவிட்டால் போதும். அது சுலபமாகிவிடும்.
நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் நோக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை 100% நாம் விரும்பிய வழியில் உருவாக்க இயலும். மற்றவர்கள் உங்கள் மீது எந்த நோக்கத்தோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றாலும், அவர்களுடைய நோக்கங்களை உங்களால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். கோடிக்கணக்கான மக்கள் உங்களை விரும்பும்படியான சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும்.
உங்களுடைய சொந்தக் குடும்பமே கூட திடீரென்று உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இதை நாம் தினசரி வாழ்க்கைச் சூழ்நிலையில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? எனவே மற்றவர்கள் உங்கள் மீது என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, முதலில் உங்கள் மனம் உங்களுக்குச் செய்யக்கூடிய கொடூரமான செயல்களைப் பற்றிப் பார்க்க வேண்டியது அவசியம்.
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதங்கள், ஆனால் துரதிருஷ்டவசமாக அவற்றை நமக்கு எதிராகத் திசை மாற்றிவிட்டோம்.
இந்தக் காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் இந்தத் தொழில்நுட்ப விந்தைகளை நீங்கள் நேர்மறை மந்திர வித்தைகள் என்பீர்களா அல்லது எதிர்மறையான பில்லி சூனியங்கள் என்பீர்களா?
பில்லி சூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றைப் பல விதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லி சூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
மனிதனுக்குள் தியானத்தன்மை வந்துவிட்டால் யாருடைய நோக்கம் எப்படியிருந்தாலும், சக்தி சூழல் எப்படியிருந்தாலும் அவற்றால் அந்த மனிதனுக்குள் எந்த பாதிப்பும் வராது. தியானத் தன்மையில் இருக்கும்போது பில்லி சூனியம் ஏவல் போன்றவை உங்களைத் தொட வாய்ப்பில்லை.
சத்குருவின் வலைப்பக்கம் - www.AnandaAlai.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT