Published : 08 Jun 2017 09:52 AM
Last Updated : 08 Jun 2017 09:52 AM

வார ராசிபலன் 08-06-2017 முதல் 14-06-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பம் முதல் இரண்டு நாட்கள் அந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை. அதன்பிறகு சந்திரன் 9, 10-ம் இடங்களில் உலவுவார். நற்காரியங்களில் பங்கு கொள்ள வாய்ப்பு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தாய் நலம் சிறக்கும். தாய் வழி உறவினர்களால் நலம் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குருவும் சனியும் அனுகூலமாக உலவாததால் உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. நல்லவர்களின் நட்பை நாடிப் பெற்று, அவர்களது ஆலோசனைகளின்படி நடப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். 13-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 13, 14. .

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்க

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பெரியவர்களும் தனவந்தர்களும் பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புக்கள் குறையும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். அலைச்சல் அதிகமானாலும் அதற்கான பயன் கிடைத்துவரும்.

மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் தரும். ஜன்ம ராசியில் சூரியனும், 2-ல் செவ்வாயும் உலவுவதால் உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீட்டிலும் வெளியிலும் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நிலபுலங்களால் வருவாய் கிடைத்துவரும். 13-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். பயணத்தால் நலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் லாபம் தரும். கறுப்பு நிறப்பொருட்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். சுகமும் சந்தோஷமும் பெருகும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடவும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சூரிய பலம் குறைந்திருப்பதால் பார்வைக் கோளாறு உண்டாகும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். 13-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறினாலும் ராசிநாதன் என்ற வகையில் நலம் புரிவார். நண்பர்கள், உறவினர்கள் தொடர்பு பயன்படும். பொருள் திரட்டுவதில் அதிக நாட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 11.. . .

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், கறுப்பு.

எண்கள்: 4, 6, 8.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் நுட்பத் திறமை கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். தந்தையால் நலமுண்டாகும். அரசுப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். முக்கியமான எண்ணங்களும் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள்.

3-ல் குருவும் 5-ல் சனியும் இருப்பதால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. காது, வயிறு, தோள்பட்டை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. 2-ல் ராகுவும் 12-ல் செவ்வாயும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு அவசியமாகும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்சினைகள் சூழும். 13-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 8, 14. .

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு. .

எண்கள்: 1, 5.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். முக்கியமானவர்களின் சந்திப்பு பயன்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்புக் கூடிவரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். ஊகவணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

அரசுப்பணியாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பமோ, வெற்றியோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். வாரப் பின்பகுதியில் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அதில் வெற்றியும் கிடைக்கும். 13-ம் தேதி முதல் புதன் 11-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். செல்வ நிலையில் அதிக வளர்ச்சி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 9

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவும். நாகரை வழிபடுவதும் நல்லது. .



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. பொது நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும். ஜன்ம குரு அலைச்சலை அதிகப்படுத்துவார். இடமாற்றம் உண்டாகும்.

பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. என்றாலும் குருவின் பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதிவதால் மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் ஓரளவு நலம் உண்டாகும். 13-ம் தேதி முதல் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். செல்வாக்கு உயரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். சுய தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14. .

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், கருஞ்சிவப்பு,.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: 12-ல் உலவும் ராகுவுக்குப் பிரீதியாக துர்கையை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x