Published : 27 Mar 2014 09:36 AM
Last Updated : 27 Mar 2014 09:36 AM
திருடவரதன் என்ற சேர மன்னனுக்குப் பிறந்தவர்தான் குலசேகரன். இவர் பெருமாளின் அபூர்வமான கெளஸ்துப மணியின் அம்சமாகப் பிறந்தார் என்று வைணவப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.
அரசராகப் பிறந்தாலும் பெருமாள் பக்தி மிகுந்தவர். அரச சுக போகங்களை விடுத்து, ஆன்மிக நாட்டம் கொண்டவராக வாழ்ந்தார். எனவே ஸ்ரீவைஷ்ணவர்களை நன்கு உபசரித்துவந்தார். காலட்சேபங்களைக் கருத்தூன்றிக் கேட்பார்.
ஒரு நாள் அவர் ஸ்ரீராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது கரன், தூடணன், திரிசரன் உள்ளிட்ட அரக்கர்கள் தலைமையில் பதினான்காயிரம் அரக்கர்கள் ஸ்ரீராமனை எதிர்க்கப் படை திரட்டிப் போரிட வந்துள்ளனர் என்றும், ஸ்ரீராமரோ படைத் துணை ஏதுமின்றி போருக்குத் தயாரானார் என்றும் சொற்பொழிவாளர் சொன்னார்.
குலசேகரன் மன்னன் அல்லவா? உடனடியாகப் படை திரட்டிக்கொண்டு, ஸ்ரீராமருக்குத் துணை சேர்க்க ஆணையிட்டார். சொற்பொழிவாளர், மறுநாள் காலட்சேபத்தில் போரில் ஸ்ரீராமன் வென்றார் என்று கூற, படையைத் திரும்புமாறு ஆணையிட்டார் அரசர்.
மற்றொரு நாள், சீதையை ராவணன் கொண்டு சென்றான் என்று வேறொரு சொற்பொழிவாளர் கூற, இதனைக் கேட்ட மன்னன் குலசேகரன் படை திரட்டிக்கொண்டு சென்று கடலில் இறங்கிவிட்டார். அங்கே ஸ்ரீராமன், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சகிதமாக, மன்னனுக்குக் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரைக் குறித்து அறிந்த அவர், அங்கு சென்று பெருமாளைத் தரிசிக்க விரும்பினார். இவரது பக்தியை அறிந்திருந்த அமைச்சர்கள், அவர் அங்கேயே தங்கிவிடுவாரோ என்று அஞ்சி இவரை அங்கு செல்ல விடாமல் தடுக்க முனைந்தார்கள். மன்னர் கிளம்பும்போதெல்லாம், பாகவதர்களை அழைத்துவிடுவார்கள். மன்னனும் உபசரிக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் பாகவதர்களின் வருகையால் பலமுறை அவரது பயணம் தடைபட்டது.
மன்னனின் உபசரிப்பில் திளைத்த பாகவதர்களோ, அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய உரிமையுடன் இருந்தனர். இதனைப் பொறுக்காத அமைச்சர்கள் சிலர், ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம திருமூர்த்தத்திற்கு வழக்கமாக அணிவிக்கும் முத்து மாலையை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, பாகவதர்களே திருடினர் என்று குற்றம்சாட்டிவிட்டனர்.
மனவேதனை அடைந்த மன்னர் திருட்டைக் கண்டுபிடிக்க ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு வெள்ளிக் குடத்தில் விஷப் பாம்பை விடும்படி சொன்னார். பாகவதர்கள் முத்து மாலையை எடுத்திருந்தால் பாம்பு என்னைக் கொத்தட்டும் என்று சொன்னபடி குடத்தினுள் கையைவிட்டார். பாம்பு அவரைக் கொத்தாமல், குடத்தில் இருந்து நழுவிச் சென்றுவிட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியும் குற்ற உணர்வும் அடைந்த அமைச்சர்கள் உண்மையைக் கூறி மன்னிப்பு கேட்டதுடன் முத்துமாலையை எடுத்துக் கொடுத்துவிட்டனர். இந்நிகழ்ச்சியால் மன்னர் மனம் கசந்தது. அரசியல் நாடகம் வெறுத்தது. மகன் திருடவிரதனுக்கு முடிசூட்டிவிட்டு ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே தங்கிவிட்டார். இன்றும் பள்ளி கொண்ட அரங்கனின் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் குலசேகர வீதி என்று அழைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT