Published : 13 Nov 2014 11:58 AM
Last Updated : 13 Nov 2014 11:58 AM
ஆன்மிகப் பயணத் தொடர் - பஞ்ச நரசிம்ம ஷேத்திர தரிசனம் 4
மட்டபல்லி, வாடபல்லி என ஊர்ப் பெயர்களில் எங்கே பார்த்தாலும் பல்லிதான். சூரியன் மேற்கே மறைய, கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் சங்கமிக்கும் இடமான இந்த நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளான் எம்பெருமான் வாடபல்லி நாதன். அதே நதிக்கரையில் அபூர்வமான சிவனும் கோயில் கொண்டுள்ளான். இத்தல வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. இதனைக் குறித்த முக்கூர் சுவாமிகளின் விளக்கம் இன்னும் ஆனந்தம்.
“வாடபல்லி ஷேத்திரத்திற்குத் `தீபாலயம்’ என்று பெயர். மூசி நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும்படியான ஷேத்திரம். அப்படிப்பட்ட ஷேத்திரத்திலே அகஸ்தியருக்குச் சேவை கொடுத்தான் எம்பெருமான்.
வாடபல்லியிலே, பூமாதாவோடு சேர்ந்த மூர்த்தியாக அவன் காட்சியளிக்கிறான். அங்கே கிருஷ்ணா நதிக்கரையிலே ஈஸ்வரன் ஆலயம் இருக்கிறது. அந்த ஈஸ்வர மூர்த்தி சிரஸிலிருந்து கங்கையானது சலசலவென்று பெருகிவருகிறது — இன்றைக்கும் பார்க்கலாம் — கங்கையானது கொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஈசுவராலயத்தைத் தாண்டி உள்ளே கோட்டைக்குள்ளே நரசிம்ஹன் ஆலயம். தீபாலயம் என்று அதற்குப் பெயர். கார்த்திகை மாதத்திலே அங்கே யக்ஞம் பண்ணுவதுண்டு. `தீபாலயத்தில் யக்ஞம் பண்ணு’ என்று லஷ்மி நரசிம்ஹன் ஆக்ஞாபித்தான். அது எங்கு இருக்கிறது என்று முதலில் தெரியவில்லை. அப்புறம் விசாரித்தால் இந்த இடம் என்று சொன்னார்கள். ஆச்சர்யமான ஷேத்திரம் அது. பகவானுடைய மூக்குக்கு நேரே ஒரு தீபம் இன்றைக்கும் எரிந்துகொண்டு இருக்கிறது. அவன் திருவடிக்கு நேரே ஒரு தீபம் எரிந்துகொண்டிருக்கிறது — ஜூவாலை.
கர்ப்பகிருஹத்தினுள்ளே காற்று புகக்கூட இடமில்லை. அவ்வளவு நெருக்கமான இடம். அந்த இடத்திலே மூக்குக்கு நேரே இருக்கிற ஜூவாலை மாத்திரம் ஆடிக்கொண்டே இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். கீழே இருக்கிற தீபம் அப்படியே ஆடாமல் இருக்கும். மூக்குக்கு நேரே இருப்பது மட்டும் ஆடும்! இதிலிருந்து என்ன தெரிகிறது? எம்பெருமானுடைய மூச்சுக் காற்றானது அப்படியே அந்த தீபத்தின் மேல் காற்றுப்பட்டு அலைகிறது. அவ்வளவு ஜீவ களையோடு பரமாத்மா அங்கே எழுந்தருளியிருக்கிறான்” என்று முக்கூர் சுவாமிகள் தனது ‘குறையொன்றுமில்லை' புத்தகத்தில் வாடபல்லியை வர்ணித்துள்ளார்.
வாடபல்லியில் அர்ச்சக சுவாமியின் குரலில் சுந்தரத் தெலுங்கினில் தல புராணம் கேட்க முடிந்தது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இந்தத் தீபாலயத்திற்குத் தீபங்கள் ஏற்ற நெய் கிடைக்கிறது. இது மேலும் அதிகரித்தால், தொடர்ந்து இந்தத் தீபங்களை ஏற்றலாம் என்றார் அவர்.
பறவைகள் கூடடையும் வேளையில் கிளம்பி, மீண்டும் மட்டபல்லி நோக்கிப் பயணம். வழியில் ஹுசூரில் யக்ஞ வாடிகையில் நடைபெற உள்ள சுவாதித் திருமஞ்சனத்திற்காகப் பக்தர்கள் பூ, பழங்கள் வாங்கிக்கொள்கிறார்கள். இரவு என்றாலும் டீ குடிக்கிறார்கள். மட்டபல்லியில் நடு இரவில்தான் தொடங்க இருக்கிறது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். விடிய விடிய களைகட்டும் இந்நிகழ்ச்சியை அனுபவிக்க விழித்திருக்க வேண்டுமே.
சுவாமி திருமஞ்சனம்
யக்ஞ வாடிகையில் இரவு உணவு தயார். தைத்த பலாச இலையில் வைணவ முறைப்படி முதலில் வந்து விழுந்தது சாதம். பைங்கன் (கத்தரிக்காய்) காரக் கறி, குடை மிளகாய் சாம்பார், புடலைக் கூட்டு, தக்காளி ரசம், மோர் மற்றும் யக்ஞ வாடிகையில் உள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதம். தைத்த பலாச இலையில் இருந்து, சிறு குச்சிகள் உருவிக்கொள்ளாமல் உண்ணும் சாமர்த்தியம் இன்னும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சரியம். இந்து சனாதன தர்மம் உள்ளத்து தூய்மையைப் போற்றுகிறது. மேலும் சாஸ்திர சம்பிரதாயமோ, உடல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுகிறது. அதில் முக்கியமானது இலையில் அன்னமிட்டுச் சாப்பிடும் பழக்கம்.
மட்டபல்லி நாதனைக் காண மனம் விழைந்தது. ஏதோ பல காலம் பிரிந்துவிட்டாற்போல் மனம் ஏக்கங் கொண்டது. பத்து இருபது படி இறங்கிக் கீழே சென்றால் நதிக்கரை நாதனாய் மட்டபல்லி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் குகை சன்னதி. குகைச் சுவர்களில் நீர்க் கசிவு. இந்த இடத்தை விட்டுப் பிரியப் போகிறோம் என்பதால் மனம் கசிந்தது. அந்த லக்ஷ்மி நரசிம்மரின் சுயம்பு திருமேனித் திருமுகத்தில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் ஒளிரும் ஈரக் கசிவைத் தீப ஒளியில் காண முடிந்தது. பார்த்த விழி பார்த்தபடி இருக்க, நரசிம்மரது வெள்ளி மீசை பிரகாசமாகத் தோற்றமளித்தது. ஐயனே, ஆனந்த சொரூபனே, அகிலாண்ட நாயகனே என்று கூவி அழைத்தது மனம்.
இந்தக் குகை சன்னதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். இவர்கள் சுற்றுப்புறக் கிராமவாசிகள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இரவு கூடுவார்கள். சன்னதி சாத்திய பிறகு இரவு நேரம் ஏறஏற, சுமார் ஐநூறு பேர் சுருள் வடிவில் வரிசையில் சேர்கிறார்கள். வேகமாக நகர்ந்துகொண்டே ஏகதாள கைத்தட்டலும், தரையில் அதிரும் கால் தட்டலும் கொண்டு ஆடுகிறார்கள். இந்த அதிர்வில் கிருஷ்ணா நதியில் ஆயிரக்கணக்கான அலைகள் ஆடுகின்றன.
இதில் ஒருவர் தெலுங்கில் சத்தமாகப் பாட்டுப் பாட, கூட்டத்தில் அனைவரும் எதிர்ப்பாட்டு பாடுகிறார்கள். யாருக்கு உரிமையானவள் இந்த செஞ்சுலஷ்மி என்ற பொருள்பட `எவுருதி, எவுருதி, செஞ்சுலம்மா எவுருதி’ இது பாட்டு. நரசிம்மருக்குச் சொந்தமானவள் செஞ்சுலஷ்மி என்று பொருள்பட `இவுருதி, இவுருதி செஞ்சுலம்மா இவுருதி` என்று எதிர்ப்பாட்டு கூட்டுக் குரலில் அதிரும் ஆட்டத்துடன் ஒலிக்கிறது.
இந்த மலைவாசி கிராம மக்களின் குலத்தைச் சேர்ந்த பெண்ணான செஞ்சுலஷ்மியை நரசிம்மர் மணந்துகொண்டதை நினைவுகூரும் வகையில் விடிய விடிய ஓயாமல் ஆடிப் பாடும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று இரவு தொடங்கி விடிய விடிய நடைபெறுகிறது. அந்த பக்தியின் ஆத்மார்த்தம் பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் கரைய வைக்கிறது.
ஸ்ரீ புத்ரப்ராப்த்யஷ்டகம்
முக்கூர் சுவாமிகள் இயற்றிய இந்த அஷ்டகத்தை உச்சரித்துவந்தால் பிள்ளைப் பேறும், மனம் விரும்பியதையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
யோகாநந்தம் நித்யாநந்தம் நிகமாகம ஸேவிதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம் மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT