Last Updated : 02 Feb, 2017 10:17 AM

 

Published : 02 Feb 2017 10:17 AM
Last Updated : 02 Feb 2017 10:17 AM

பைபிள் கதைகள் 37: நகர மறுத்த நதி

யோசுவா அனுப்பிய இரு உளவாளிகள் எரிக்கோவை நோட்டமிட்டு, அதன் கோட்டை அரண்களைத் தெரிந்துகொண்டனர். இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியின் அக்கரையில் முகாமிட்டிருப்பது பற்றிய செய்தி எரிக்கோவின் உள்ளே வாழும் மக்களை எட்டிவிட்டதா என்பதையும் அறிந்துகொண்டார்கள். கோட்டை மதிலின் மீதிருந்த வீடொன்றில் வசித்துவந்த பாலியல் தொழிலாளி ராகாப், இவற்றை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவினாள்.

பின்னர் எரிக்கோவிலிருந்து தப்பித்து ஆகாசியாவில் இருந்த முகாமை அடைந்தார்கள். உடனடியாகத் தங்களின் தலைவர் யோசுவாவைச் சென்று பார்த்து எரிக்கோவில் கண்டதையும் கேட்டதையும் விசாரித்த யாவற்றையும் தங்களைப் பாதுகாத்து அனுப்பிவைத்த ராகாப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியாக அவர்கள் யோசுவாவிடம்; “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அந்த தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் மக்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றனர்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் மக்களும் எழுந்து, அகாசியாவை விட்டுப் புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அது அறுவடைக் காலம். அவர்கள் நதியைக் கடக்கும் முன்பு நதிக்கரையில் மூன்று நாள் முகாமிட்டார்கள். அறுவடைகாலத்தில் யோர்தான் எப்போதும் வெள்ளப் பெருக்குடன் காணப்படும். அதைக் கடக்க நினைக்கும் யாரும் அதன் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.

யோர்தான் நதியைக் கடக்க வேண்டிய தருணம் நெருங்கியபோது, இஸ்ரவேல் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசுவாவிடம் கடவுள் எடுத்துக் கூறினார். “உடன்படிக்கைப் பெட்டியை (பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட சலவைக் கற்கள், ஏதுமற்ற பாலைவனத்தில் கடவுள் வானிலிருந்து பொழிந்த மன்னா உணவு சேகரிக்கப்பட்ட ஜாடிகள் ஆகியன புனிதப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த பெட்டி) சுமந்து கொண்டு தலைமை குருமார்கள் உங்களுக்கு முன்பாகச் செல்லட்டும். அவர்கள் தங்கள் பாதங்களை யோர்தான் நதிக்குள் வைக்கும்போது அந்த நதி ஓடாமல் அப்படியே நின்றுவிடும்.” என்றார். கடவுள் கூறியதையே குருமார்களுக்கும் கூறினார் யோசுவா, “குருமார்களை இரண்டாயிரம் அடி இடைவெளிவிட்டுப் பின்தொடர வேண்டும்” என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வற்றிப்போன பெருநதி

தலைவர் யோசுவா கூறியதை சிரமேற்கொண்ட குருமார்கள், புனித உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு மக்களுக்கு முன்பாக நதியை நோக்கி நடந்தார்கள். நதியை நெருங்கித் தண்ணீருக்குள் அவர்கள் அடியெடுத்து வைத்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது. வெள்ளப் பெருக்குடன் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆழமான அந்த நதியானது, குருமார்களின் கால்கள் தண்ணீரில் பட்டதும் நகர மறுத்து அப்படியே நின்றது. கடவுள் யோர்தானின் நதிமூலத்தையே தடுத்து நிறுத்தினார். அதனால் சிறிது நேரத்தில் தண்ணீரின்றி வற்றிப்போன யோர்தான் சல சலத்துச் செல்லவும் வழியின்றி வற்றிப்போன தனது வயிற்றின் காய்ந்த தரையைக் காட்டியது.

உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்சென்ற குருமார்கள். வற்றிப்போன அந்த நதியின் நடுப்பகுதி வரை நடந்து சென்று மக்கள் வரும்வரை காத்து நின்றார்கள். இப்போது யோசுவா முன்செல்ல இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யோர்தான் நதியின் காய்ந்த தரை வழியாக நடந்து அதைக் கடந்து சென்றார்கள்!

பன்னிரண்டு நடுகற்கள்

மக்கள் அனைவரும் நதியைக் கடந்து போய்க்கொண்டிருந்தபோது, கடவுள் யோசுவாவை அழைத்தார். “இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்திலும் பலமுடைய 12 பேரை அழைத்து அவர்களுக்கு உத்தரவிடு. உடன்படிக்கைப் பெட்டியுடன் ஆற்றின் நடுவே குருமார்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து 12 கற்களைத் தேடியேடுத்து அவர்களைச் சுமந்து வரச்சொல். எடுத்து வரும் கற்களை இன்றிரவு நீங்கள் அனைவரும் தங்கும் இடத்தில் நட்டு வையுங்கள். இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன என்று பின்னாட்ளில் உங்கள் பிள்ளைகள் கேட்டால் ‘யகோவாவின் உடன்படிக்கைப் பெட்டி எடுத்து வரப்பட்டபோது யோர்தான் நதியின் தண்ணீர் ஓடாமல் அப்படியே நின்று விட்டது. அதன் நினைவை உங்களைப் போன்ற எதிர்காலத் தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறவே இப்படிச் செய்தோம்’ என்று கூறுங்கள்” என்றார்.

கடவுள் கூறியபடியே யோசுவா பன்னிரண்டு பேரை அனுப்பி உடன்படிக்கை பெட்டியை குருமார்கள் சுமந்து நின்ற இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களைச் சுமந்து வரச் செய்தார். இவை தவிர உடன்படிக்கைப் பெட்டி நின்றுகொண்டிருந்த இடத்திலும் மோசே பன்னிரண்டு கற்களைக் குவித்துவைத்தார்.

யோர்தானை மக்கள் முழுவதுமாகக் கடந்து செல்லும்வரை புனித உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு குருமார்கள் நதியின் நடுவிலேயே காத்திருந்தனர். இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யோர்தானின் வற்றிக் காய்ந்த தரை வழியே கடந்து சென்ற பின், உடன்படிக்கைப்பெட்டியுடன் நதியை விட்டுக் கரையேறுமாறு குருமார்களிடம் கூறினார் யோசுவா. அவர்களும் நதியிலிருந்து வெளியே வந்தனர். இப்போது நதி மீண்டும் வேகமாக ஓடத் தொடங்கியது.

எரிக்கோ சமவெளியில் முகாம்

யோர்தானைக் கடந்த முதலாம் மாதத்தின் பத்தாவது நாளில் எரிக்கோ நகரத்தின் கிழக்கிலுள்ள கில்கால் சமவெளியில், இஸ்ரவேல் மக்கள் முகாமிட்டனர். யோர்தான் நதியிலிருந்து சுமந்து வந்த கற்களை கில்காலில் யோசுவா நாட்டினார். பிறகு மக்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள்.

நீங்கள் அவர்களுக்குச் சாட்சிகளாக இருந்து ‘வற்றித் தரை காய்ந்த யோர்தான் நதியை நாம் கடந்து வந்ததை நினைவூட்ட இக்கற்கள் உதவுகின்றன; நம் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தியரிடமிருந்து நம்மைக் காக்க செங்கடலைப் பிளந்து வழிவிடச் செய்தார். மக்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரை மதில்போல் தடுத்து நிறுத்தினார். அதைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரையும் ஓடாதவாறு நிறுத்தினார் என்பதை நினைவுகூருங்கள்.” என்றார்.

யோர்தான் நதிக்குக் கிழக்கே வாழ்ந்துவந்த எமோரியரின் அரசர்களும், மத்தியதரைக் கடலின் கரையில் வாழ்ந்த கானானிய மக்களின் அரசர்களும் கடக்க முடியாத யோர்தானைக் கடவுளின் வல்லமையுடன் இஸ்ரவேலர்கள் கடந்து வந்ததைக் கேள்விப்பட்டு மிகவும் பயந்துபோனார்கள். எரிக்கோ நகரமோ இன்னும் நடுங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x