Published : 14 Jul 2016 12:41 PM
Last Updated : 14 Jul 2016 12:41 PM
நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளைப் போதித்தவர், பகவான் விருஷப தேவர் ஆவார். அப்பெருமான் வகுத்த நெறியே சமணம். அவரைத் தொடர்ந்து இருபத்து மூன்று தீர்த்தங்கரர்கள் நன்நெறிகளைப் பரப்பினர். தீர்த்தங்கரர்களுக்கு யட்சன், யட்சி எனப்படும் இயக்கன், இயக்கி உள்ளார்கள். இவர்கள்தான், தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்கள்.
நற்காட்சியாளர்களான இவர்கள், இல்லறத்தை அனுசரிப்பவர்களுக்கும் துறவிகளுக்கும் இன்னலைத் தடுத்து அமைதியை அருளுவதாக நம்பப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் வீதியிலோ அல்லது கோயில் வளாகத்திலோ எழுந்தருளும்போது இயக்கன்தான் முதலில் செல்வார். ஆடி மாதத்தில் இயக்கிகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அணங்கு வழிபாடு
சமண இலக்கியங்களில் இயக்கிகள் போற்றப்படுகின்றனர். அணங்கு வழிபாடு நடைபெறும் கோவில்களில் சமண முனிவர்கள் தங்கித் தவம் செய்துள்ளனர். இதற்குச் சான்றாக அணங்குகள் உறையும் கோவில்களில் சமணப் படுக்கைகள் கிடைத்துள்ளன.
மலையாண்டிப்பட்டணத்தில் பள்ளியம்மன் சமணப்பள்ளி ஓவியங்கள் இயக்கிகளை முன்னிறுத்துகின்றன.சுடுமண் பொம்மைகளை, கற்சிற்பங்களை இயக்கி வழிபாடாக வணங்குகின்றனர். பெண்கள் அனுசரிக்கும் அவ்வை நோன்பும் சமணப் பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே. அவ்வையார் அம்மன்கள் உயிர்ப்பலி தெய்வங்கள் அல்ல. சமணர்கள், கண்ணகியைத் தமது சிறு தெய்வங்களில் ஒன்றாக்கி வழிபட்டனர்.
இயக்கிகளில் சுவாலாமாலினி, பத்மாவதி, சக்ரேஸ்வரி, கூஷ்மாண்டி, வராகி, ஜினவாணி ஆகிய தெய்வங்கள் ஜிநாலயங்களில் காணப்படுவர்.
சுவாலாமாலினி
தீர்த்தங்கரர் சந்திரபிரபு சுவாமியின் இயக்கி. எட்டுக் கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஆயுதம் தாங்கியிருப்பார். இவரது சிரசில் அனல் மகுட வடிவம் இருக்கும்.இவரது வாகனம் எருமை. பக்தர்களுக்கு இன்னல்களைத் தவிர்ப்பவர்.
பத்மாவதி அம்மன்
பகவான் பார்சுவநாதரின் இயக்கி இவர். பகவான் சிரசின் மீது நாக வடிவத்தில் இருப்பார். தாமரை மலர் மேல் காட்சி தருவார். பாம்புத் தலையும் கோழி உடலுமான குக்குட சர்ப்பம் இவரது வாகனம். மன உறுதியைத் தருபவர்.
சக்ரேஸ்வரி
இத்தேவதை முதலாம் தீர்த்தங்கரரான விருஷப தேவரின் இயக்கி. பொன்னிற மானவர். எட்டுக் கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். இத்தேவதையின் வாகனம் கழுகு.
கூஷ்மாண்டி
நேமிநாத தீர்த்தங்கரரின் இயக்கி. அம்பிகா, தருமதேவி என்ற பெயர்களுண்டு.இரண்டு குழந்தைகளுடன் காணப்படுவார். காலடியில் சிங்க வாகனம் மேல் ஒரு பாதத்தை வைத்திருப்பார்.
வராகி
பதிமூன்றாம் தீர்த்தங்கரர் விமலநாதரின் இயக்கி. பல யாகங்களில் போற்றப்படுகிறார். தீவினை வேர்களை அறுப்பவர். இவரது வாகனம் சிம்மம்.
ஜினவாணி
சுருதா தேவி, வித்யாதேவி என்றும் அழைக்கப்படுபவர். ஆகமங்களின் கலைஞானத்தின் தலைவி. அமர்ந்த நிலையில் வீணையை ஒரு கையிலும் மற்றொரு கையில் ஓலைச் சுவடியும் ஏந்தி அருளுவார்.
இவ்வியக்கிகள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள திருமலையில் பஞ்சகுலக் கோயிலில் காட்சி தருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT