Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM
ஆடு மேய்ப்பவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. மாக்களின ஆடுகளுக்கும் மக்களினமாகிய நமக்கும் இடையிலான வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள அந்த அனுபவம் உதவும்.
தமிழில் ஆட்டை தகர் என்றனர். அதிலிருந்து பிறந்த சொல்தான் தகராறு. தகராறு என்றால் தகரின் ஆறு. ஆறு என்றால் வழி. ஆட்டின் வழி தகராறு. இச்சொல்லாக்கம் ஆடுகளை மேய்த்த அனுபவத்திலிருந்து கிடைத்தது. ஆடுகள் இரண்டு எதிரெதிரே வரும்போது விலகி வழிகொடுக்காது; இரண்டுமே தலைகளால் முட்டிக் கொள்ளும். இதையே தமிழர் தகராறு எனக் குறிப்பிட ஆரம்பித்தனர்.
இதுபோன்ற பல்வேறு அனுபவங்கள் ஆடுமேய்த்தலில் கிடைக்கும்.
செம்மறியாடுகள், வெள்ளையாடுகளை விட அறிவு குறைந்தவை. மேயும் செம்மறியாடுகள் எதிரில் சிறு கால்வாய் வருமாயின் அவை அதைத் தாண்டாது நிற்கும். இதற்காகவே இடையர்கள் செம்மறியாடுகளிடையே இரு வெள்ளாடுகளை மந்தையில் சேர்த்திருப்பார்கள். வெள்ளாடுகள் கால்வாயைத் தாண்டிவிடும். அதைப் பார்த்துச் செம்மறியாடுகளும் தாண்டும்.
ஆடுகளை மேய்ப்பவர்கள் இயற்கை அறிவை அதிகமாகப் பெற்றிருப்பார்கள். தோடந்துரவுகள் போன்றவற்றில் அறிவுகளைப் பெற்றிருப்பதைப் போல விண்வெளியைப் பற்றிய அறிவுகளையும் அதிகம் பெற்றிருப்பர்.
மாக்களை மேய்க்கும் திறமை பெற்றவர்கள் மக்களை மேய்க்கும் திறமையில் வலுவான வர்களாக இருப்பார்கள் என்பதாலோ, இறைத்தூதர்களில் பலர் நல்ல மேய்ப்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
இபுறாகீம் நபிகளாரிடமிருந்து ஈஸா நபி வரை பலரும் ஆடு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டவர்களே! அவர்களைப் போலவே சிறுவர் முஹம்மதும் ஆடுமேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டார்.
கற்பதற்குக் கல்விச் சாலைகள் இல்லாத குறையை காடும் காற்றுவெளியும் நிறைவு செய்தன. அவை திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள்.
குருவிகள், புறாக்கள், பருந்துகள், ராஜாளிகள், கழுகுகள், முயல்கள், மான்கள் எல்லாம் ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தன.
இவ்வாறு பாடங்களைக் கற்றபடியே சிறுவர் முஹம்மது ஆடுகளை மேய்த்தார். ஆட்டிடையரின் குரலும் கோலும் ஆடுகளை மேய்க்கும் அற்புதப் பொருள்கள்.
நூறு ஆடுகள் இருந்தாலும் அவற்றின் அடையாளத்தை இடையர் அறிவர். ஆடொன்று காணாமல் போய்விட்டால் அந்த ஆடு எதுவென்பதைக் கண்டு கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.
முஹம்மது எனும் சிறுவர் இளைஞராகிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மக்காவைச் சுற்றியுள்ள மலைகள், குன்றுகள், தோட்டந் துரவுகள், மேய்ச்சல் காடுகள் எல்லாமே தெரிந்திருந்தன.
இயற்கையின் தொடர்பும் ஆடு மேய்த்தலும் தொடக்கக் கல்வியென்றால் மேற்படிப்பு ஊர்களைக் கடந்த வணிகம்.
முஹம்மதெனும் சிறுவர் இளைஞராகியிருந்தார். பெரிய தந்தை அபூதாலிப் செய்துவந்த வணிகத்து க்குத் தானும் துணையாக இருப்பதென்று எண்ணம் கொண்டார்.
அவர் தம்முடைய எண்ணத்தைத் தந்தையிடம் சொல்ல மகனை தந்தை வணிகத்துக்காக சிரியாவுக்குச் சென்றபோது உடன் அழைத்துச் சென்றார். மேற்படிப்பு ஆரம்பமானது, புதிய புதிய அனுபவங்கள் கிடைத்தன.
மக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்ல இரு பாதைகள் இருந்தன. ஒரு பாதை மக்காவிலிருந்து நேர் வடக்காகச் செல்லும். அந்தப் பாதை யத்ரிப் சென்று வாதி அல்குராஅ, பனூ குதாஅ பிரதேசம் வழியாக சிரியா செல்லும். இன்னொரு பாதை செங்கடலை ஒட்டி அமைந்தது. அது யத்ரிபைத் தொடாமல் பனூ ஜூகைனா வழியாக பனூ பலி பிரதேசம் சென்று சிரியாவை அடையும். முதல் பாதையிலேயே பெரும்பாலான பயணங்கள் நடந்தன. இரண்டாவது பாதையில் பயணம் செய்ய 100 மைல்களை அதிகம் கடக்க வேண்டும். மகாவிலிருந்து செங்கடல் பாதையை அடைய 50 மைல்கள், பின் வடக்கே பயணித்து வடகிழக்கில் சிரியாவை அடைய 50 மைல்கள் என 100 மைல்கள்.
அபூதாலிபும் அருமைப் புதல்வரும் பயணித்த வணிகக்குழு முதல் பாதையிலேயே நேர் வடக்காகச் சென்றது. அக்குழு யத்ரிப் செல்லும் வரை பயணித்த பாதை ஏற்கனவே முஹம்மத் அறிந்திருந்த பாதைதான். வாதி குராஅவிலிருந்து தொடர்ந்த சிரியாவுக்கான பாதை புதிய பயணிக்குப் புதுமையாகத் தெரிந்தது.
பயணம் செய்தும் தங்கியும் உண்டும் உறங்கியும் நாற்பது நாட்களுக்கும் மேலாகச் சென்றவர்கள் சிரியாவை அடைந்தனர். கொண்டு சென்ற பொருள்களை விற்றவர்கள் கொள்முதல் செய்தனர்.
அங்கு பல்வேறு ஆசிய முகங்களோடு சில கறுப்பு வெள்ளை முகங்களும் தென்பட்டன. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வணிகம் செய்வதற்காக குழுமியிருந்தார்கள். ஒட்டகங்களே அதிகமாகத் தெரிந்தன. குதிரைகள் சிலவும் காணப்பட்டன.
புதிய பயணிக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. சிரித்த முகம், சிரிக்காத முகம், கருத்த முகம், கனத்த முகம், சிறுத்த முகம், சிந்தனையைத் தேக்கிய முகம், ஆசை முகம், அழகு முகம் என பல்வேறு முகங்களின் தரிசனம் அங்கே கிடைத்தன.
மனிதரில் இத்தனை முகங்களா? இத்தனை நிறங்களா?
சிரியாவில் வணிகத்தை முடித்து மக்கா திரும்பிக் கொண்டிருந்த போது அபூதாலிப் குழுவினர் புஸ்ரா எனும் ஊருக்கருகிலுள்ள கிறிஸ்துவ மடாலயத் தைக் கடந்தனர். அப்போது வணிகக் குழுவினரோடு திரும்பி வந்துகொண்டிருந்த புதிய பயணிக்கு மடாலயம் அருகிலுள்ள மரக்கூட்டத்தின் கீழ் தங்கி யிருந்தபோது நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
அப்பயணத்தில் எப்போதும் இல்லாத முறையில் மடாலயத் தலைவர் பஹீரா வணிகக் குழுவினருக்கு விருந்தளித்தார். அவ்விருந்தில் அனைவரும் கலந்துகொள்ள புதிய பயணி பொருள்களுக்குக் காவலாய் விடப்பட்டார்.
விருந்துண்ண அனைவரும் வருகை தந்திருக்க ஒருவர் மட்டும் மரத்தடியில் இருப்பதைக் கண்ட பஹீரா அவரையும் அழைத்துவரச் செய்தார்.
புதிய பயணி வந்தார், விருந்துண்டார்.அவரை உற்றுக் கவனிக்க பஹீரா புதிய பயணியான இளைஞரைப் பற்றி விசாரித்தார்.
விசாரித்தபின் சொன்னார்: இந்த இளைஞருக் குள் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. அறிவொளி வீசும் இவருடைய கண்கள் வருங் காலத்தில் அரபுலக இருளைப் போக்கும். இவரைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துக் காப்பாற்றுங்கள்.
பஹீரா, அப்போது சொன்னது புதிய பயணிக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
‘சிரியாவின் சந்தையில் பார்த்த நூற்றுக்கணக் கானவர்கள், மக்காவில் இருக்கின்ற ஆயிரக் கணக்காணவர்களிலிருந்து தான் மட்டும் வித்தியாச மானவனா!’ என்று எண்ணியபடி புதிய பயணி புஸ்ராவைக் கடந்தார்.
மனிதரில் புதிய பயணிக்கு என்ன முகம்? என்ன நிறம்?
( நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, ஆசிரியர்: தாழை மதியவன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14,
தொலைபேசி: 044- 42009601, விலை: ரூ.300/-)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT