Published : 01 Sep 2016 10:24 AM
Last Updated : 01 Sep 2016 10:24 AM
நபிகளாரின் திருச்சபையில் பங்கெடுப்பவர் ஒவ்வொருவரும் மன அமைதியைப் பெறுபவராகவே இருந்தார். தமது தகுதி, திறமைகளுக்கு ஏற்ப அங்கு மதிப்பளிக்கப்படுவதாக அங்கிருப்பவர்கள் அனைவரும் உணர்வார்கள்.
நபிகளாரின் திருச்சபையில் சக மனிதர்கள் மீது பாசமும், இளகிய மனமும் கொண்ட அபூபக்கர் போன்ற மூத்த நபித் தோழர்களும் இருந்தனர். போர் பற்றிய பேச்சைக் கேட்டாலே ஒருவிதமான பதற்றமும், நடுக்கமும் கொண்ட ஹஸ்ஸான் பின் தாபித் போன்றவர்களும் இருந்தார்கள். வீரமும், தீரமும் நிறைந்த உமர், அலி போன்ற தோழர்களும் இருந்தார்கள். இம்மையை வெறுத்து சதா மறுமையை விரும்பிக்கொண்டிருந்த எளிய துறவியாய் வாழ்ந்த அபூதர் கிஃபாரி போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் நபிகளாரின் விசாலமான புரிந்துணர்வில் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் நபிகளார் தம்மீதுதான் அளவற்ற நேசம் கொண்டிருப்பதாக உணரும் வகையில் அவர்களிடம் நபிகளார் நடந்துகொண்டார்.
குழந்தையின் அழுகை
“நான் நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என்று என் மனம் நாடுகிறது. ஆனால், எனக்குப் பின்னால் தொழும் தாய்மார்களின் பச்சிளம் குழந்தையின் அழும் குரலைக் கேட்டதும் என் தொழுகையைச் சுருக்கிக்கொள்கிறேன். நான் தொழுகையை நீட்டித்து அந்தக் குழந்தையின் தாயை சிரமத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை” என்று தமது உணர்வை வெளிப்படுத்துகிறார் நபிகளார்.
மாலிக் பின் ஹுவைரிஸ் என்பது அந்த இளம் நபித்தோழரின் பெயர். நபிகளாரோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
“நானும் இன்னும் என் வயதையொத்த இளைஞர்களும் இறைத்தூதரின் திருச்சபைக்கு இறைநெறி போதனைகளைக் கற்றுக்கொள்ளச் சென்று அங்கு இருபது நாட்கள்வரை தங்கியிருந்தோம். அப்போது, நபிகளார் மிகவும் கருணையுள்ளவராகவும், எங்கள் ஒவ்வொருவரிடமும் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பதைக் கண்டோம். நாங்கள் தங்கியிருந்த இருபது நாட்களும் இப்படியே கழிந்தன. அதன் பின் நாங்கள் வீட்டுக்குச் செல்லவிருப்பதை எங்கள் முகக் குறிப்புகளிலிருந்தே கண்டறிந்த நபிகளார், எங்கள் குடும்பத்தார் குறித்து விரிவாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பச் சூழல்களை எடுத்துரைத்தோம்.”
அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட நபிகளார், “சகோதரர்களே! என்னிடம் ஒழுக்க போதனைகள் பெற்றது போதும்! இனி நீங்கள், உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பச் செல்லலாம். இதுவரை நீங்கள் கற்றுக்கொண்டதை அவர்களுக்கும் கற்றுத் தாருங்கள். அவர்கள் எப்போதும் நற்பணிகளில் ஈடுபட்டிருக்க அறிவுறுத்துங்கள். மேலும் தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் தொழுங்கள். அப்போது, தொழுகைக்கான அழைப்பை விடுங்கள். அறிவிலும் உயர் பண்புகளிலும் சிறந்தவராக இருப்பவர் தொழுகையை முன்னின்று நடத்துங்கள்!” என்று அறிவுறுத்தி அனுப்பியதாகச் சொல்கிறார் இளம் தோழர் மாலிக் பின் ஹுவைரிஸ்.
சகமனிதர்களின் நலன்நாடும் விதமாய் பிரார்த்தனை புரிவதும் முக்கியமானது. ஒருவர் மற்றொருவருக்காகப் பிரார்த்திப்பது அவசியமானது. அப்படிப் பிரார்த்திக்கும் போது அவர்களின் பெயர் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதும் சிறப்பானது.
“ஒருவர் தமது சகோதரர் நேரில் இல்லாதபோது, அவருக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் அதனை ஏற்றுக் கொள்கிறான். பிரார்த்தனைப் புரிபவரின் அருகில் ஒரு வானவரை அனுப்புகின்றான். உள்ளமுருகப் பிரார்த்திக்கும் அவரின் பிரார்த்தனைக்கு ஆமீன் அப்படியே ஆகுக..! என்று மொழியச் செய்கின்றான்” என்று அறிவுறுத்தும் நபிகளார், “நீங்கள் உங்கள் சகோதரர்களுக்காக எதனை வேண்டுகிறீர்களோ அந்த நற்பலன்கள் உங்களுக்கும் கிடைக்கும்! என்ற நற்செய்தியையும் கூறுகிறார்.
இறைவா! எங்கள் உள்ளங்களைவிட்டும், பகை, கபடு ஆகியவற்றை நீக்கிவிடுவாயாக! எங்கள் உள்ளங்களில் வாய்மையையும், அன்பையும் தோற்றுவித்து எங்கள் உள்ளங்களை அன்பால் பிணைத்துவிடுவாயாக! எங்கள் பரஸ்பர தொடர்புகளில் ஒற்றுமை, அன்பு இவற்றால் இனிதாக அமைத்துவிடுவாயாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT