Published : 13 Nov 2014 11:34 AM
Last Updated : 13 Nov 2014 11:34 AM
விவேகானந்தர் அமெரிக்காவில் உலக மதங்களின் மாநாட்டில் உரையாற்றியதற்குப் பிறகு அவரது புகழ் அங்கே வேகமாகப் பரவியது. அமெரிக்காவின் பல நகரங்களில் நடந்த கூட்டங்களில் பேச அவருக்கு அழைப்புகள் வந்தன.
அவர் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பல கூட்டங்களில் பேசினார். மனிதனை மையமாகக் கொண்ட ஆன்மிகத்தைப் பரப்ப இந்தக் கூட்டங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். தனது சிந்தனையைப் புரிந்துகொள்கிற, அதனை ஏற்றுக்கொள்கிற சீடர்களை உருவாக்கிக் கொள்வதற்காக இந்தக் கூட்டங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார்.
கருப்பழகர்
கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பல அமெரிக்க நகரங்களுக்கு அவர் சென்றபோதும், அந்நகரங்களில் தங்கிய போது வித்தியாசமான பிரச்சினையைச் சந்தித்தார். அவரது நிறம் சிவப்பு அல்ல. கறுப்பு நிறம், கருப்பின மக்களில் ஒருவராக அவரை நினைக்க வைத்தது.
கருப்பின மக்கள் நுழையக் கூடாது எனத் தடுக்கப்பட்ட ஹோட்டல்களுக்குள் நுழையும்போது விவேகானந்தரும் தடுக்கப்பட்டார். முடிதிருத்தகங்களுக்குச் சென்றபோது “இங்கே கருப்பர்களுக்கு முடிதிருத்த மாட்டோம்” என்று அவர் திருப்பி அனுப்பப்பட்டார். அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அவருக்கு அதிகமாக நடந்தன.
கருப்பின சகோதரன்
இதற்கெல்லாம் மேலாக, ஒரு அமெரிக்க நகரின் ரயில் நிலையத்தில் ஒரு விநோதச் சம்பவம் நடந்தது. அவர் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அந்த நகருக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்பதற்காக அந்த நகரின் முக்கியமான மனிதர்கள் எல்லாம் வந்து அங்கே காத்திருந்தார்கள். அதேநேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணி செய்துகொண்டிருந்த ஒரு கருப்பின மனிதனுக்கும், இவர் வருகிறார் என்ற விஷயம் தெரிந்திருந்தது. விவேகானந்தர் ரயிலைவிட்டு இறங்கும்போது அவரிடம் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசையோடு அவர் நேரம் பார்த்துக் காத்திருந்தார்.
விவேகானந்தர் ரயிலை விட்டு இறங்கி நடந்து வந்தபோது அவரை நோக்கிச் சென்ற அந்தச் சுமைதூக்கும் தொழிலாளி “நமது இனத்தில் பிறந்த உன்னைப் போன்ற ஒருவர் இவ்வளவு பெரிய ஆளாக மாறியிருப்பது பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கு உன்னைப் பற்றி மிகவும் பெருமையாக இருக்கிறது. உன்னோடு கைகுலுக்க விரும்புகிறேன்” என்று அவரிடம் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அதைக் கேட்டதும் விவேகானந்தர் அந்தக் கருப்பு இன மனிதனைத் கட்டித் தழுவிக் “நன்றி! நன்றி! சகோதரரே!” என்றார்.
ஏன் மறுக்க வேண்டும்?
தன்னைக் கருப்பராகக் கருதி மற்றவர்கள் மட்டமாகக் கருதினாலும் சரி கருப்பின மக்கள் அவரைத் தங்களில் ஒருவராகக் கருதி வரவேற்றாலும் சரி, விவேகானந்தர் அதற்கு எதிர்ப்போ,மறுப்போ தெரிவித்தது இல்லை.
அவரது அமெரிக்க நண்பர்களும் மாணவர்களும் அவரிடம் “நீங்கள் உண்மையில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் இல்லை. அதனால் நான் இந்தியாவில் இருந்து வந்த துறவி என்று உண்மையை விளக்கிச் சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்பார்கள். அப்போது விவேகானந்தர் சற்றுக் கோபத்துடன் அவர்களைப் பார்த்து “என்ன? ஒரு மனிதனைத் தாழ்த்தி அதன்மூலம் நான் என் மதிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டுமா? ” எனத் திருப்பி கேட்பாராம். ஒருபோதும் அவ்வாறு சொல்லமாட்டேன் என மறுத்துவிடுவாராம்.
சமத்துவ ஆன்மிகம்
நான் கருப்பின மக்களில் ஒருவன் அல்ல என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டாலே, ஒரு சகமனிதனை தான் தாழ்வாக நடத்திவிட்டதாகி விடும் என்ற கூர்மையான சமத்துவ ஆன்மிக உணர்வு விவேகானந்தருக்கு இருந்துள்ளது.
மனிதர்களுக்கு இடையே ஏதோ ஒருவகையான ஏற்றதாழ்வை உருவாக்குகிற அல்லது மனிதர்களுக்கு இடையே இருக்கிற ஏற்றதாழ்வுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்துகிற எந்தவொரு ஆன்மிகக் கருத்தும் விவேகானந்தருக்கு உடன்பாடானதல்ல. அத்தகைய உயரத்தில் அவரது மனிதநேய ஆன்மிகம், சமத்துவ உணர்வோடு இருந்ததால்தான் அவர் இன்னமும் சமூகத்தின் பல்வேறு பகுதியினரையும் கவரக்கூடிய காந்தமாக இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT