Last Updated : 25 Apr, 2014 02:23 PM

 

Published : 25 Apr 2014 02:23 PM
Last Updated : 25 Apr 2014 02:23 PM

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா

மல்லர்களை வென்ற திரண்ட தோள்களைக் கொண்ட நீல வண்ணக் கண்ணனே என்று பொருளில் அழைக்கப்பட்ட பெருமாள் அன்பும் பாசமும் கொண்ட தாயைப் போல, தன் தொண்டனுக்குச் செய்யப் படுகின்ற சிறப்புக்களைக் காண கருடாரூடனாக வானில் தோன்றினார்.

அந்தத் தொண்டனோ தாய்ப் பாசம் மீதூற அந்த அழகிய நம்பிக்குக் கண்பட்டுவிடப் போகிறதே எனப் பல்லாண்டு பாடினார். அந்த சுவாரசியமான புராணக் கதை இதோ: பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் முகுந்தர் மற்றும் புதுமை என்பவருக்குப் பிறந்தது அந்த அழகிய ஆண் குழந்தை. எப்போதும் விஷ்ணுவின் நினைவாகவே இருந்ததால் பின்னாளில் அக்குழந்தை விஷ்ணு சித்தர் என்று பெயர் பெற்றது.

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் விரும்பிய மாலைகளைக் குறித்து அறிந்திருந்த விஷ்ணு சித்தர், அதே போன்ற மாலைகளை தன் கையாலேயே கட்டி, வடபத்திரசாயி கோயில் பெருமாளுக்கு அன்றாடம் சாற்றிவந்தார்.

இந்த நிலையில் மதுரையை ஆண்ட வல்லப தேவன் என்ற மன்னன் மதுரையில் இரவு நகர்வலம் வந்தான். அப்போது வீட்டின் திண்ணை ஒன்றில் அமர்ந்திருந்த பிராமணரிடம் நல்ல வார்த்தை சொல்லுமாறு கேட்டான் மன்னன். அந்த பிராமணனும் ` மழை காலத்துக்கு வேண்டியவற்றுக்கு மற்றைய எட்டு மாதங்களிலும், இரவுக்கு வேண்டியவற்றுக்குப் பகலிலும், முதுமைக்கு வேண்டியவற்றுக்கு இளமையிலும், மறுமைக்கு வேண்டியவற்றுக்கு இம்மையிலும் பெற ஒருவன் முயல வேண்டும் என்ற தத்துவம் மிகுந்த பாடலைக் கூறினான்.

மன்னனுக்கோ முதல் மூன்றுக்கும் குறையொன்றுமில்லை. நான்காவதான மறுமை குறித்தே கவலை. மோட்சத்தை நிச்சயமாக அளிக்கக்கூடிய தெய்வம் எது என அறிவதற்காக போட்டியொன்றை ஏற்பாடு செய்தான். போட்டியில் வென்றவர்களுக்கு பொற்கிழி பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்தான்.

மதுரை மன்னனின் இந்த அறிவிப்பை விஷ்ணு சித்தர் கனவில் கூறிய பெருமாள், அப்பொற்கிழியைப் பரிசாகப் பெற்று வருமாறு உத்தரவிட்டார். வேதம் தெரியாத தான் இதனை எப்படி நிறைவேற்ற முடியும் என்று விஷ்ணு சித்தர் பெருமாளிடம் கேட்டார். அதற்குத் தானே பொறுப்பு என்று கூறிவிட்டு, பெருமாள் கனவில் இருந்து மறைந்தார்.

விஷ்ணு சித்தர் பாண்டியன் அவைக்குச் சென்றார். மோட்சத்தை அளிக்கக்கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே என்பதை நிரூபித்தார். அவர் வென்றதைக் குறிப்பிடும் முகமாகப் பொற் கிழியும் தாழ்ந்து விஷ்ணு சித்தர் கையில் வந்தது. மன்னன் மகிழ்ந்தான். பல பண்டிதர்களும் அடி பணிந்தனர். பட்டத்து யானை மீது விஷ்ணு சித்தரை ஏற்றிக் குடை, கொடி, சாமரம், ஆல வட்டம் ஆகியவற்றின் மூலம் மரியாதைகள் செய்யப்பட்டு, பட்டர்பிரான் என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. பட்டத்து யானை மீதேறிய விஷ்ணுசித்தர் மதுரை நகரை வலம் வந்தார். இக்கோலத்தை நேரடியாக அனுபவிக்க விரும்பிய பெருமாள், கருடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் வானில் தோன்றினார்.

மண்ணுலகோரின் கொடிய திருஷ்டி பெருமாளுக்குத் தீம்பு செய்துவிடக் கூடாது என்பதற்காக,

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்;

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு;

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி

ஆயிரம் பல்லாண்டு;

வடிவாய் நின் வல மார்பினில் வாழகின்ற

மங்கையும் பல்லாண்டு;

வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்

ஆழியும் பல்லாண்டு;

படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச

சன்னியமும் பல்லாண்டே.

என்று பெருமாள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்திப் பாடினார். இன்றும் இப்பாசுரம் பெருமாள் திருக்கோயில்களில் தினசரி பக்தர்களால் பாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x