Published : 21 Jul 2016 11:58 AM
Last Updated : 21 Jul 2016 11:58 AM
கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தரித்து, சமஸ்த லோகத்துக்கும் அநுக்கிரகம் செய்கிற திவ்ய மாதாதான் காமாக்ஷி. சகல ஜீவராசிகளையும் இந்திரிய சேஷ்டையிலிருந்து விடுவிப்பதற்காக மலர் அம்பும், மனசின் ஆட்டங்களிலிருந்து விடுவிப்பதற்காகக் கரும்பாலான தனுசையும் தாங்கியிருக்கிறாள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மன்மதனும் இதேபோல் கரும்பு வில்லையும், புஷ்பத்தாலான ஐந்து பாணங்களையும்தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியமோ அம்பாளுடைய காரியத்துக்கு நேர் விரோதமானது. அவன் இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டுதான் சமஸ்தப் பிராணிகளுக்கும் இந்திரிய விகாரத்தை - அடங்காத காம வேகத்தை - உண்டாக்கிவருகிறான்.
அதுவும் பராசக்தியான அம்பாளுடைய லீலைதான். அவள்தான் மன்மதனுக்கு இப்படிப்பட்ட சக்தியை அநுக்கிரகம் செய்திருக்கிறாள். பிஞ்சு கசப்பாக இருந்து, பிறகு துவர்ப்பாகி, அப்புறம் புளிப்பாகி, கடைசியில் பரம மதுரமாகப் பழுக்கிற மாதிரி, ஜீவர்களும் படிப்படியாகப் பலவித அநுபவங்களில் முன்னேறி முன்னேறி கடைசியில் பழமாகப் பக்குவம் பெற வேண்டும் என்றே அம்பாள் பிரகிருதி நியதிகளை - இயற்கை வேகங்களை உண்டாக்கியிருக்கிறாள்.
ஒரேடியாக இவை நம்மை அடித்துச் செல்வதற்கு நாம் இடம் தந்துவிடக் கூடாது. ஒரேடியாக எடுத்த எடுப்பில் இந்த வேகங்களிலிருந்து தப்ப முடியாவிட்டால், அதற்காக வருத்தப்பட்டு மனமுடைந்துவிடவும் கூடாது. அம்பாளைத் தஞ்சம் புகுந்தால், படிப்படியாக அவள் வழிகாட்டி விடுதலை தருவாள் என்ற நம்பிக்கையோடு, வேகங்களைக் குறைத்துக்கொள்ள அவளைப் பிரார்த்திக்க வேண்டும்.
சம்சாரம் என்பதில் ஈடுபட்டிருக்கும்போதே இதில் ஏதாவது சாரம் இருக்கிறதா என்றும் அடிக்கடி சிந்தித்துவர வேண்டும். இப்படிச் சிந்திப்பதே ஒரு சாரம்தான். அதனால்தான் சம்சாரத்திலிருந்து விடுபடுகிற விரக்தி உண்டாகிறது.
அந்தந்தக் காலத்தில் அந்தந்தப் பிரகிருதி வேகங்கள் - இயற்கை உந்தல்கள் - ஏற்பட்டாலும், அதனால் மனம் கலங்காமல் பராசக்தியைப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால் பிஞ்சு காயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து இற்று விழுந்துவிடுவதுபோல், கடைசியில் சம்சார விருக்ஷத்திலிருந்து விடுபட்டு அம்பாளின் சரணாரவிந்தத்தில் விழுந்து அதோடேயே சேர்ந்துவிடுவோம்.
நம்மைப் போல் எத்தனையோ பிராணிகள் ஏகப்பட்ட பூர்வ கர்மாவைச் செய்து குவித்திருக்கின்றன. இந்த கர்மாவைக் கழித்துக்கொள்ள அவையெல்லாம் ஜன்மா எடுத்துத்தானாக வேண்டும். எடுக்கிற ஜன்மாவில் கர்ம மூட்டையை ஜாஸ்தியாக்கிக்கொள்ளலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். அது எப்படியானாலும் கர்மாவைக் கழித்துக்கொள்ள வேண்டுமானால் ஜன்மா எடுத்து அதைத் தர்ம வழியில் பிரயோஜனப்படுத்திக்கொள்வது தவிர, வேறு வழியில்லை.
கடைசியில் கர்மம் முழுவதும் அழிந்தால் பிறப்பே இல்லாத நிலை அடைவோம். ஜீவர்களுக்கு ஜனன நிவிருத்தி உண்டாவதற்கே ஒரு பயிற்சிக் கூடமாக அவர்கள் ஜன்மம் எடுத்தாக வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஜீவர்களுக்கு ஜன்மம் ஏற்படுவதற்காகத்தான் அம்பாள் காமத்தை வைத்திருக்கிறாள். அதற்கு அதிகாரியாக மன்மதனை நியமித்திருக்கிறாள்.
ஆனால், எதுவும் தன் எல்லையறிந்து அடங்கி நிற்க வேண்டும். மன்மதன் பக்தர்களிடமும் ஞானிகளிடமும் தன் கைவரிசையைக் காட்ட அம்பாள் விடமாட்டாள். இவள்தான் மகா ஞானியான பரமேசுவரனை மட்டும் தன்னிடம் பிரேமை கொள்ளுமாறும் செய்தவள்.
மன்மதன் அவரிடம் தன் கை வரிசையைக் காட்டப் பார்த்தான். அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை பஸ்மீகரமாக்கிவிட்டார். அப்புறம் ஆடாமல், அசங்காமல் பிரம்மமாக அமர்ந்துவிட்டார். அவர் அப்படியிருந்தால் அம்பாளுடைய பிரபஞ்ச லீலை எப்படி நடக்கும்?
எனவே, அவள் மன்மதனுடைய கரும்பு வில்லையும், புஷ்ப தனுசையும் தானே தன் கைகளில் எடுத்துக் கொண்டு பரமேசுவரன் முன் வந்தாள். மன்மதனைப் போல், 'அவரை ஜயிப்பேன்' என்று அகங்காரத்தோடு வரவில்லை. அன்போடு அடக்கத்தோடு வந்தாள். உடனே, பரம ஞானியான பரமேசுவரனும் காமேசுவரனாக மாறிவிட்டான்.
இவள் அன்பு பொங்குகிற கண்களால் காமாக்ஷியாகி, காமேசுவரியாகி, அவரைப் பார்க்க அவரும் அன்பு மயமாகிக் காமேசுவரனாகிவிட்டார். பிரம்மமாகச் செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகாநுக்கிரகம் என்ற பரம கருணை உதிப்பதைத்தான் காமாக்ஷி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக சங்காசமாக நிறமில்லாதிருந்த பிரம்மம், அப்போது சிவப்பு நிறத்தை அடைகிறது.
அன்பு, கருணை இவற்றைச் சிறப்பாகவே சொல்வது வழக்கம். ராகம் (அன்பு), அநுராகம் என்பதிலிருந்தே ரக்தம் (ரத்தம்) என்ற பதம் வந்தது. தமிழிலும் மனச்செம்மை, செவ்விய உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாக்ஷியின் சிவப்பு, கருணையின் வர்ணம்.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT