Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM
யோர்தான் நதியை இஸ்ரவேலர்கள் கடக்கும்வரை அதன் தண்ணீரைக் கடவுள் வற்றச் செய்ததை எரிக்கோவின் உள்ளே வாழ்ந்து வந்த கானானியர் கேள்விப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் வம்படியாக கோட்டை நகரிலிருந்து வெளியேறவில்லை. தங்களின் தானியப் பத்தாயங்கள் தொடர்பாகவும் தங்கமும் வெள்ளியும் பீதாம்பர ஆடைகளும் நிறைத்து வைத்திருந்த கஜானாக்கள் மீதும், மது நிரம்பிய மரப் பீப்பாய்கள் மீதும் அவர்கள் மயக்கத்துடன் இருந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளையே அவர்கள் எதிர்த்தார்கள். இஸ்ரவேல் மக்களின் பக்கம் கடவுள் துணை நிற்கிறார் என்பதை அறிந்திருந்தும் அவர்களை எதிர்த்துப் போர்புரிந்தே தீருவது என்று இறுமாப்புடன் இருந்தார்கள்.
கடவுள் ஏன் வெறுத்தார்?
கானானியர்களைக் கடவுள் வெறுக்க இது மட்டும்தான் காரணமா? கானானியர்கள் கொடூர குணத்துக்குப் பேர்போனவர்களாய் இருந்தார்கள். பொய்க் கடவுளர்க்கு பலி என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை உயிரோடு நெருப்பில் போட்டார்கள். (இராஜாக்கள் 16:3). அவர்கள் வாழ்முறையே தீமைகளின் மொத்த உருவமாக இருந்தது. இந்த இடத்தில் ஆபிரஹாமின் காலத்தில் கடவுளால் அழிக்கப்பட்ட இரண்டு நகரங்களைப் பற்றி இந்தத் தொடரின் தொடக்கத்தில் நீங்கள் படித்ததை கொஞ்சமாய் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
சோதோம், கோமரா ஆகிய நகரங்களை அழிக்கப்போவதாக ஆபிரஹாமிடம் கடவுள் கூறுகிறார். ஆனால் ‘அந்த நகரில் தனது சகோதரன் நீதிமானாக வாழ்கிறானே.. அவனும் அல்லவா அழிந்துபோவான்’ என்று அஞ்சிய ஆபிரஹாம், கடவுளிடம் அந்த நகரங்களை அழிக்க வேண்டாம் என இறைஞ்சுகிறார். அப்போது கடவுள், “பத்து நீதிமான்கள் அந்த நகரத்தில் வசித்தால் அவர்களின் பொருட்டு அதை நான் அழிப்பதில்லை” என்று ஆபிரகாமுக்கு உறுதியளித்தார் (ஆதியாகமம் 18:20-33).
ஆனால் கடவுள் அந்த நகரங்களை அழிக்கவேண்டிய நிலை உருவானபோது அங்கு வாழ்ந்த நீதிமான்களை மட்டும் காப்பாற்றினார், கெட்டவர்களை முற்றிலுமாக அழித்தார். சோதோம், கோமரா போலவே விண்ணை முட்டும் மதில்களோடு எரிக்கோ கர்வத்துடன் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் மதில்களுக்கு உள்ளே கெட்ட வாழ்க்கை முறையின் மீது மோகங்கொண்டு வாழ்ந்து வந்தவர்களே அதிகமிருந்தனர்.
மறைந்த மன்னாவும் முன்வந்த தளபதியும்
யோர்தான் நதியைக் கடந்து எரிக்கோவின் சமவெளியில் ஒரு பகுதியாக இருந்த கில்காலில் முகாமிட்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். பாஸ்காவுக்கு மறுநாள், மக்கள் கானான் நாட்டின் நிலத்தில் விளைந்த தானிய உணவை உண்டனர். புளிப்பின்றிச் செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் சாப்பிட்டனர். மறுநாள், காலையிலிருந்து கடவுளால் வானத்திலிருந்து பொழியப்பட்டுவந்த மன்னா உணவு காணப்படவில்லை.
பாஸ்கா முடிந்து கில்காலிருந்து யோசுவா புறப்பட்டு எரிகோவை நெருங்கியபோது அவருக்கு முன்பாக வாளுடன் ஒருவர் வந்து நின்றார். யோசுவா அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்களின் நண்பரா, அல்லது எங்கள் பகைவரில் ஒருவரா?” என்று கேட்டார். அவர் அதற்கு பதிலாக, “நான் உன் பகைவன் அல்ல. கடவுளுடைய படையணியின் தளபதி நான். உமது ஊழியனாக உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் கட்டளைக் காக காத்திருக்கிறேன்” என்றார்.
ஏழு நாட்கள் மட்டுமே முற்றுகை
மக்கள் படையும் அதன் தளபதியும் தயாராக இருந்த வேளையில் அவர்களின் தலைவராகிய யோசுவாவைக் கடவுள் அழைத்தார். “ நீயும் உனது போர் வீரர்களும் அணிவகுத்துச் சென்று எரிக்கோ நகரத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றி வாருங்கள். இப்படி ஆறு நாட்கள் அணிவகுத்து வாருங்கள். அணிவகுப்பின் முன்னால் உடன்படிக்கைப் பெட்டியை உங்களுடன் சுமந்து செல்லுங்கள். அந்தப் பெட்டிக்கு முன்னால் ஏழு ஆசாரியர்கள் (தலைமை மதகுருக்கள்) எக்காளங்களை ஊதியவாறு நடந்து செல்ல வேண்டும்.
ஏழாவது நாளிலோ நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றி ஏழு முறை அணிவகுத்துச் செல்ல வேண்டும். பின்பு எக்காளங்களை நீண்ட முழக்கத்தோடு இடைவிடாமல் ஊதுங்கள். அந்தச் சமயத்தில் வீரர்கள், மக்கள் என அனைவரும் போர் முழுக்கமிட்டு உரக்கக் கத்துங்கள். அப்போது எரிக்கோவின் மதில்களெல்லாம் இடிந்து விழும்!” என்றார்.
கடவுள் குறிப்பிட்டபடியே இஸ்ரவேல் மக்களும் வீரர்களும் எரிக்கோவைச் சுற்றி அணிவகுத்து வந்தனர். கோட்டைச் சுவர்களில் தாக்கத் தயாராக காத்திருந்த கானானிய வீரர்களும் அவர்களுக்குப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கானானிய மக்களும் இஸ்ரவேலர்களின் செய்கையை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களால் இத்தனை பெரிய மதில்களைக் கடந்து உள்ளே வர முடியாது என்று இறுமாந்து இருந்தனர்.
அன்றைய நாட்களில் ஒரு கோட்டையை மாதக்கணக்கில் எதிரிகள் முற்றுகையிட வேண்டியிருக்கும். கோட்டை நகரின் உள்ளே இருக்கும் தானியங்கள் முற்றிலுமாகத் தீர்ந்துபோய் உணவுச் சிக்கல் உருவாகும்போதுதான் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் தொடங்கும். அதுவே போர் மரபாகவும் இருந்தது. அது போன்றதொரு நீண்ட முற்றுகையில் சமாதானம் ஏற்பட்டால் போர் தவிர்க்கப்படும். ஆனால் எரிக்கோவுக்கு ஏழு நாட்கள் முற்றுகையே போதும் எனக் கடவுள் முடிவுசெய்துவிட்டார்.
எரிக்கப்பட்ட நகரம்
கடைசியாக, ஏழாவது நாளில் கடவுளுடைய மக்கள் என்று அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் அந்த எரிக்கோ நகரத்தைச் சுற்றி ஏழு முறை அணிவகுத்து வந்த பின், இடைவிடாமல் எக்காளங்களை ஊதிப் பெருங்கூச்சலுடன் போர் முழக்கம் செய்தபோது அந்தக் கோட்டையின் மதில்கள் பொலபொலவென்று நொறுங்கிச் சரிந்தன. கோட்டை நகரம் தனது அரணாகிய மதில்களை இழந்து நிர்வாணமாய் நின்றபோது கானானியரின் கர்வம் தவிடுபொடியானது.
மதில்கள் சரிந்ததும் யோசுவா தனது போர் வீரர்களையும், மக்கள் படையணியைப் பார்த்து, “நமது உளவாளிகளுக்கு அடைக்கலம் தந்த ராகாப் குடும்பத்தினரைத் தவிர இந்த நகரத்திலுள்ள அனைவரையும் கொன்று, தானியம் உள்ளிட்ட அனைத்தையும் எரித்துவிடுங்கள். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களை மட்டும் பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எடுத்துச்சென்று அங்கிருக்கும் பொக்கிஷத்தில் சேருங்கள்” என்று கட்டளையிட்டார்.
அவ்வாறே எரிகோவில் வாழ்ந்த கெட்ட மக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. ராகாப் குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டனர். அதுமட்டுமல்ல; ‘எரிக்கோவிலிருந்து என் மக்கள் எதுவொன்றையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளக் கூடாது’ என்று கடவுள் கட்டளையிட்டிருந்தையும் யோசுவா அவர்களுக்கு நினைவூட்டியதால் எரிந்துகொண்டிருந்த நகரத்திலிருந்து எந்த உணவையும் இஸ்ரவேல் மக்கள் எடுத்துக்கொண்டு வரவில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒருவர் மட்டும் கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை.
எரிக்கோ இன்று
எரிக்கோ என்றால் ‘பேரீச்சம் மரங்கள் நிறைந்த இடம்’ என்று அர்த்தம். எரிக்கோவை உலகின் மிகப் பழமையான நகரமாக வரலாற்றாசிரியர்களும் தொல்லியல் ஆகழ்வாய்வாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். தொல்லியல் கார்பன் சோதனைகளின் வழி எரிகோ கி.மு 9000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதாக நிறுவி வருகிறார்கள். அதைவிட ஆச்சரிகரமாக பல நாகரிகங்கள் இங்கே வாழ்ந்து மறைந்திருப்பதற்கான சான்றுகளை படிம ஆய்வின் வழி கண்டறிந்திருக்கிறார்கள். கடல் மட்டத்துக்கு 260 மீட்டர் தாழ்வான இடத்திலே எரிக்கோ இருப்பதால், இதமான வெப்பநிலை இந்த நகரத்தை பூமியின் வாழ்விடக் கொடையாகக் கருதி மக்கள் குடியேறினர். யோர்தான் நதி நீரால் எரிக்கோவைச் சுற்றி இன்றும் விவசாயம் செழிக்கிறது.
யோர்தானின் தூய குளிர் நீர் ஒருபுறம் இருக்க எரிக்கோவைச் சுற்றி ஆங்காங்கு காணப்படும் வெந்நீர் ஊற்றுகள் கடவுளின் பரிசுபோல் இருக்கின்றன. அதனால் அன்று மன்னர்களோ இதை ஓர் உல்லாச புரியாக கருதி அரண்மனைகளைக் கட்டி கோட்டை எழுப்பினர். யாராலும் உள்நுழைய முடியாத வானை முட்டும் கோட்டைச்சுவர்கள் இதன் அரணாக விளங்கின. ஆனால் இன்று எரிக்கோ கோட்டை மண்மேடாகக் காட்சியளிக்கிறது. புதிய ஏற்பாடு காலத்துக்கு சற்றுமுன், எகிப்திய ராணியான கிளியோபாட்ராவுக்கு காதல் பரிசாக இந்நகரம் அளிக்கப்பட்ட கதையும் வாய்மொழி வழக்காறாக இருக்கிறது.
இன்று முப்பதாயிரம் மக்கள் வசித்துவரும் சிறிய நகராக இருக்கும் எரிக்கோ 1948 முதல் 1967 வரை ஜோர்டான் அரசின் வசமிருந்தது. 1967 -ல் இருந்து இஸ்ரேல் அரசின் வசம் இருந்து வந்தது. பின்னர் 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
(பைபிள் கதைகள் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT