Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM
அழகை ரசிக்கிற தன்மை பக்திக்கு ரொம்பத் தேவையானது. அம்பாள் இன்று எவ்வளவு அழகு, இந்தப் புடவையில் சொக்கும் அழகுடன் காணக் கிடைக்கிறாள் என்று அந்தக் தெய்வத் திருவுருவின் அழகினை நினைக்கும்பொழுது பக்தி நெஞ்சில் ஊற்றெடுக்கிறது. காமாட்சி அம்மன் ரொம்ப அழகா இருக்கிறாள் என்று நினைத்த மாத்திரத்திலேயே, தாயே காப்பாத்து என மனம் தொழுகிறது. பெருமாளோ தோமாலை சேவையில் தேவி பூதேவியுடன் கண்கொள்ளாக் காட்சி அளிக்கிறார். நம் உள்ளத்தில் இறைவன்பால் பாசம், அன்பு தோன்றுகிறது. இதுவே அத்தெய்வங்களுடன் மனம் ஒன்ற வழி வகை செய்கிறது.
விநாயகரைக் தொழுதே எந்தவொரு நல்ல நிகழ்ச்சியையும் தொடங்குவது வழக்கம். சிற்ப சாஸ்திரப்படி விநாயகரின் கண்களுக்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. அவருடைய கண்களைத்தான் நாம் பார்க்க வேண்டும். அவர் மூலாதார ஸ்வரூபமே. விநாயகரைப் பூஜிப்பதாலேயே ஒலி சக்தி கிடைக்கிறது. குளித்தல் போன்ற உடல் சுத்தம் பேணுதல் தெய்வங்களைத் தொழும்பொழுது மிக அவசியமானது என்றாலும், சாப்பிடும்போது கூட, ‘கணபதி பப்பா மோரியா’ (கணபதியே திரும்பிவா, சீக்கிரம் வா) என்று சொல்லலாம். ஏனெனில் விநாயகர் சாந்த சொரூபி.
ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு இடத்தில் பலன் தரும் சக்தி இருக்கும். திருமலையில் உள்ள வேங்கடாஜலபதிக்கு பாதங்களில் சக்தி. பாதுகா சகஸ்ரம் என்ற பூஜைகூட உண்டே. தனிமையில் அமர்ந்து படத்தில் உள்ள தெய்வ உருவுடன் பேசும்பொழுது, நம் கோரிக்கைகள் நிறைவேறத் தடை ஏதும் இருக்க முடியாது.
விநாயகரின் தம்பி ஞானகாரகன் முருகன். சிவனின் தீப்பொறியில் தோன்றியவன். இவரை மிகுந்த சுத்தத்துடன் வணங்க வேண்டும். இப்படிப்பட்ட முருகனின் வேலில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகியவை இருக்கின்றன. இம்மூன்று சக்தியே மனிதனை வாழ வைக்கும். முருகனைத் தொழுவதற்கு இச்சை வேண்டும். விநாயகரை மரத்தடியில் வைத்துக்கூட கும்பிட்டுவிடலாம். ஆனால் முருகனை அப்படி எளிதாகக் கும்பிட்டுவிட முடியாது. குராமலையில் அவரே லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வருகிறார் என்பது ஐதீகம். அவரது ஆறு முகத்தில் அகோரம், வாமம் என்று சொல்லக்கூடிய ஐந்து முகம் சதாசிவத்தின் மறுபதிப்புதான். நேராக இருக்கின்ற முன்முகம் சக்தி, பார்வதியின் மறுபதிப்பு.
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். இப்படிப்பட்ட முருகனின் அடையாளமே வேல்தான். மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள முருகன் சிலை ரூபத்திற்கு வேல் இல்லை. இச்சிலா ரூபம் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்த குஷால மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தது. இச்சிலா ரூபத்தில் ஒரு கையில் குத்தீட்டியும், மறு கையில் கனி ஒன்றும் இருக்க அதனை மயிலொன்று கொத்துவது போலக் காணக் கிடைக்கிறது.
வடநாட்டில் அந்நூற்றாண்டில் முருகன் என்ற பெயர் கிடையாது. அவர் போர் கடவுள் என்றே அழைக்கப்படுகிறார். ஆனால் அதே நூற்றாண்டில் தமிழர்கள் முருகனை அன்பு தெய்வம் என்று அழைத்தார்கள். இந்தியா என்ற ஒரே நாட்டில் வடக்கே போர் தெய்வமாக அழைக்கப்பட்ட முருகன், தெற்கில் அன்பு தெய்வமாக, அழகு தெய்வமாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறான் என்பது ஆச்சரியகரமான உண்மை. குறிஞ்சிப் பாடல்களில் முருகனை அணைத்துக் கொள்வதாகவும், முத்தமிடுவதாகவும் கூறிப் பாடுவது குறவர்கள் வழக்கம்.
வட நாட்டில் யுதிஷ்டிர வம்சத்தினரின் பெயர் யெளதேய வம்சம். இவர்கள் குஷால வம்சத்தினருக்கு சிற்றரசர்களாக இருந்தார்கள். யெளதேயர்கள் ஸ்கந்தனைத்தான் பூஜித்தார்கள். எவ்வாறு பூஜித்தார்கள் என்பதற்குக் குறிப்புகள் அறிந்தவரை ஏதுமில்லை. ஆனால் இப்போர் கடவுளை பூஜித்துப் போருக்குக் கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று இம்மன்னர்கள் நம்பினார்கள்.
வெளிநாட்டைச் சேர்ந்த குஷால வம்சத்தவரான கனிஷ்கர், ஸ்கந்தனை நாணயத்தில் அச்சிட்டு வெளியிட்டார். ஐந்தாம் நூற்றாண்டு வரை ஸ்கந்தன் என்னும் தெய்வம் குறித்த பழக்க வழக்கங்கள் இதே போல்தான் இருந்தன. குப்தர்கள் காலத்திற்குப் பிறகு பிராமணர்கள், போஜராஜன் ஆட்சியில் ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டார்.
- கேட்டு எழுதியவர் ராஜேஸ்வரி ஐயர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT