Published : 02 Oct 2014 01:23 PM
Last Updated : 02 Oct 2014 01:23 PM
ஸ்ரீ வைகுண்டம் எனும் ஊரில் வாழ்ந்த சண்முகசிகாமணிக்கும். சிவகாமி அம்மாளுக்கும் ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலும் ஊமையாய் விளங்கியது. அதனால் பெற்றோர் பெருந் துன்பம் உற்றனர். முருக பக்தனான அவர்கள் செந்தூர் முருகனிடம் வேண்டினர். முருகன் அருளால் அக்குழந்தை பேசும் ஆற்றலைப் பெற்றது.
பேசும் ஆற்றல் மட்டுமின்றி முருகனைப் புகழ்ந்து ‘கந்தர் கலி வெண்பா’ என்ற நூலையும் பாடியது மழலை. இளம் அச்சிறு வயதிலேயே இறையருள் பெற்ற அக்குழந்தைதான் குமரகுருபரர். அது முதலாக இறை சிந்தனை யோடு பல தலங்கள் சென்று மனமுருகிப் பாடி வழிபடலானார்.
ஒரு சமயம் குமரகுருபரர் புனிதத்தலமான காசிக்குச் சென்றார். அப்போது காசியை ஆண்ட மன்னன் டில்லி பாதுஷா. அரை ஆடை பூண்ட துறவியாகிய இவரை மன்னன் மதியாது அவமதித்தான். மன்னனின் அன்பைப் பெற இந்துத்தானி மொழிப் புலமைத் தேவைப்பட்டது. அதற்காகக் குமரகுருபரர் காசி கங்கைக் கரைக்குச் சென்று சரஸ்வதி தேவியைத் துதித்தார். அவள் அருளால் ‘வெண்டாமரைக்கன்றி...’ எனத் தொடங்கும் பத்துப் பாடல் கொண்ட ‘சகலகலாவல்லி மாலை’ என்ற சிறு நூலை அருளினார். குமரகுருபரரின் அறிவுத் திறனை உணர்ந்த மன்னன் வியந்து, காசி நகர் முழுவதையும் அவருக்குக் கொடுத்துவிட்டுக் காசியை விட்டுச் சென்றார். குமரகுருபரர் தான், கல்வி அறிவில் மேம்பட வேண்டும் என்பதற்காகவே வளமார்ந்த கருத்துச் செறிவுடன் கலைமகளைப் போற்றிப் பாடியுள்ளார். கலைநயங்கள் அனைத்தும் வழங்கக்கூடியவள் கலைமகள் அல்லவோ? அதனால்தான் அவளிடம் குமரகுருபரர்,
‘பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்தல் நல்காய்...’
என்று கேட்கிறார். மேலும்,
‘கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்...’ என்றும் வேண்டுகிறார். சகலகலாவல்லி மாலையிலுள்ள பாடல்கள் பத்தும் மானிடர்களுக்குக் கல்வியை வழங்கும் அமுதசுரபியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT