Published : 13 Feb 2014 01:43 PM
Last Updated : 13 Feb 2014 01:43 PM
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. ஆண்டு தோறும் வருவது மாசிமகம்.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.
கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கவும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் திருக்குளத்திற்கு மாசிமகத்தன்று வருவதாக ஐதீகம்.
கும்பம் நின்ற இடம்
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் காலமும் வந்தது. இந்த நேரத்தில் உயிர்களைக் காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணியத் தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரிக்கச் செய்தார் சிவபெருமான். அக்கும்பத்தில் அதாவது மண் குடத்தில் நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து உயரமான மேருமலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார்.
பிரளயம் சூழ்ந்தது. அனைத்து உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டன. அமுதம் மற்றும் ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தட்டுப்பட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்கச் செய்தார்.
பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. உயிர்களைக் காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசிமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.

அம்பிகை தாட்சாயிணியாக அவதரித்த தினம் மாசிமகம் என்று கந்தபுராணம் கூறுகின்றது. கயிலையில் பார்வதியும் சிவனும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, பரமசிவன் பேரும், குணமும், உருவமும், இல்லாத தேவாதி தேவர்கள் எல்லாம் சக்தியால் அருவுருவமாகவே தெய்வ ஆட்சி செய்கிறோம் என்று கூறினார். அப்போது பார்வதிக்குத் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் மேலோங்கியது. சிவபெருமானோ தான் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது என்று கூறித் தனித்திருக்க, உலகம் இயங்காது ஜடமாகியது. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற ஈசனின் இத்திருவிளையாடலைக் கண்ட பார்வதிதேவி சிவனின் சக்தியை அறிகிறார்,
இந்த நேரத்தில் சிவனுக்கு, தான் தட்ச பிரஜாபதிக்கு கொடுத்த வரம் நிறைவேறும் தருணம் இது என்பதை உமைக்குச் சொல்லி, யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவம் இருக்க வேண்டுகிறார். அவ்வாறே தேவியும் செய்கிறார்.
இந்நிலையில் மாசி மகத்தன்று தட்ச பிரஜாபதி தன் மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினான். அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைத் தொட்ட உடனேயே அது பெண்ணுருவாக மாறியது. இது சிவனின் வரம் என்பதை அறிந்து, தட்சன் அத்தெய்வப் பெண்ணுக்கு தாட்சாயிணி என்று பெயர் சூட்டினான். தாட்சாணியாக, பார்வதி அவதரித்த தினம் மாசிமகம்.
பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். அதனால் வைணவத் தலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்கு வருவார்கள். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT