Published : 30 Oct 2014 11:31 AM
Last Updated : 30 Oct 2014 11:31 AM
இராக்கின் பாக்தாத்தைச் சேர்ந்த இறைஞானி ‘பெஹ்லூல் அல் மஜ்னூன்’ பாமரர்களின் கண்ணுக்குப் பைத்தியமாகவே தெரிந்தார். ஆனால், அவரது சமகாலவாசியான ‘ஜுனைத் பாக்தாதி’ போன்ற சூஃபி ஞானிகளுக்கு அவர் மிகச் சிறந்த அறிவாளி என்று தெரியும்! இருவரும் பாக்தாத்தைச் சேர்ந்தவர்களாதலால் அவர்களின் ஞானக் கருத்து பறிமாற்றங்களுக்கும் வரலாற்றில் குறைவில்லை.
ஒருநாள். பெஹ்லூலும் ஜுனைத்தும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.
ஜுனைத் பெஹ்லூலிடம் தமக்கு நல்தொரு அறிவுரை வழங்கும்படி வேண்டிக்கொண்டார்.
“ஜுனைத்! தாங்கள்தான் ஊரார் போற்றும் அறிஞராயிற்றே..! நான் போய் உங்களுக்கு அறிவுரை சொல்வதா? அது என்னால் முடியாது!”- என்று மறுத்துரைத்தார்.
ஆனால், ஜுனைத் விடுவதாயில்லை. அவருடைய வற்புறுத்தல் தாங்க முடியாமல், “சரி நான் தங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்பேன். இதற்குத் தாங்கள் சரியான விடை சொல்லிவிட்டால், அதையே என்னுடைய அறிவுரையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.” - என்ற பெஹ்லூல்,
மக்களோடு எப்படி உரையாடுவது என்று உமக்குத் தெரியுமா?
உணவை எப்படி உண்ணுவது என்று அறிந்திருக்கிறீர்களா?
கடைசியாக, இரவில் உறங்கும்போது, எப்படி உறங்குவது என்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
இவைதான் அந்த மூன்று கேள்விகள்.
ஜுனைத் பெஹ்லூலின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்:
“நான் பேசும்போது கேட்பவர்கள் எரிச்சலடையாதவாறு மென்மையுடனும், சொல்ல நினைத்த கருத்துக்கு உட்பட்டும் பேசுவேன்!
“அடுத்ததாக, உண்ணும்போது, கைகளை நன்றாகக் கழுவிக்கொண்டு இறைவனின் திருநாமத்தைப் போற்றி உணவை நன்றாக மென்று உண்ணுவேன். உண்டு முடித்த பின் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பேன்.”
“அதேபோல், படுக்கைக்குச் செல்லும்முன், கை,கால்,முகம் கழுவிக் கொண்டு (ஒளு), சுத்தமான படுக்கையில் என் இறைநம்பிக்கையைச் சாட்சியாக்கி உறங்கச் செல்வேன்”
ஜுனைத் சொல்லி முடித்ததும், “நான் என்னவோ நீங்கள் மெத்தப் படித்த மேதாவி என்றல்லவா இதுவரையிலும் நினைத்திருந்தேன். ஆனால், இஸ்லாத்தின் இந்தப் பால பாடங்கள்கூட உங்களுக்குத் தெரியவில்லையே!” என்று சொல்லிவிட்டு பெஹ்லூல் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
ஆனால், ஜுனைத் அவரைப் போகவிடவில்லை. “தாங்கள்தான் எனக்குச் சரியான விடைகளைச் சொல்லித் திருத்த வேண்டும்” என்று கெஞ்சலானார்.
“நீங்கள் பொய் சொல்பவராக இருந்து அதை மென்மையாகச் சொல்வதால் யாருக்கு என்ன பயன்?”
“சட்டவிரோதமாக ஈட்டிய பொருள் மூலமாகவோ, அனாதைகள், விதவைகள் அல்லது சக மனிதர்களின் உரிமைகளைப் பறித்துப் பெற்ற பொருள் மூலமாகவோ அடைந்த உணவால் இறைவனை நினைவுகூர்ந்து ஆகப் போவதுதான் என்ன?”
“பேராசை, சக மனிதர்களுடனான பகைமை போன்ற மன அழுக்குகளுடன் உடலைத் தூய்மையாக்கி இறைவனைத் துதித்து உறங்குவதால் கிடைக்கப் போகும் நன்மைகள்தான் என்ன?”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT