Last Updated : 17 Nov, 2016 10:43 AM

 

Published : 17 Nov 2016 10:43 AM
Last Updated : 17 Nov 2016 10:43 AM

பைபிள் கதைகள் 27: வானிலிருந்து ஒரு உணவு!

எகிப்தியரிடமிருந்து தங்களைக் காக்க கடலையே இரண்டாய் பிளந்து வழிவிடச்செய்த கடவுளைப் போற்றிப் பாடி இஸ்ரவேலர்கள் மகிழ்ந்தனர். அதன்பிறகு செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் சென்றார் மோசே. அந்தப் பாலைவனத்தில் இருபத்தி மூன்று நாட்கள் பயணம் செய்த மக்கள் தாகத்தால் நா வறண்டு தவித்தனர். மாரா என்ற இடத்துக்கு வந்தபோது அங்கே மாராவில் தண்ணீர் இருப்பதைக் கண்டு தாவிச்சென்று தண்ணீர் அள்ளிப் பருகினர். ஆனால் அந்தத் தண்ணீர் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. இதனால் கோபப்பட்ட மக்கள் மோசேயை முற்றுகையிட்டு “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.

மோசே வானை நோக்கித் தன் கைகளை நீட்டி இறைஞ்சினார். கடவுள் அங்கிருந்த பாலைவனச் சோலையில் ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை வெட்டி தண்ணீர் சுனைக்குள் போட்டார். அவ்வாறு செய்ததும் அந்த நீர் பனிநீரைப்போல் திடுமெனத் தெளிந்து அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று. உடனே மனம் தெளிந்த மக்கள் கடவுளைப் போற்ற ஆரம்பித்தனர். கடவுள் பெரும் அற்புதங்களைச் செய்தும் இந்த மக்கள் அவ்வப்போது விசுவாசத்தை இழந்துவிடுகிறார்களே என்று கவலைப்பட்டார் மோசே.

நம்பிக்கையற்ற மக்கள்

பின்பு மக்களை அழைத்துக்கொண்டு ஏலிம் என்ற இடத்துக்குப் பயணமாயினர். அதை அடைந்தபோது பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே ஆறு லட்சம் இஸ்ரவேலர்களுக்கும் போதுமான தண்ணீர் அங்கே இருந்ததால் அங்கேயே கூடாரமிட்டுத் தங்கினார்கள். பிறகு ஏலிமுக்கும், சீனாய் மலைக்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின், இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாளில் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். இம்முறை உணவுப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்துபோனதால் பயம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலைவனத்தின் நுண்ணிய மணல் மட்டுமே தெரிந்தது. வெயில் சுட்டெரித்தது.

இரவிலோ குளிர் வாட்டியது. இஸ்ரவேல் மக்கள் மீண்டும் மோசேயிடம் முறையிட ஆரம்பித்தனர். அவரோடு கூட இருந்த அவரது சகோதரர் ஆரோனையும் பிடித்து கடும் வார்த்தைகளால் துளைக்க ஆரம்பித்தனர். “ இந்தக் கிழவர்களின் பேச்சைக் கேட்டு வந்த நாம் இந்தப் பாலைவனத்தில் கூட்டம் கூட்டமாக பட்டினி கிடந்து மடியப்போகிறோம்.” என்று புலம்பியவாறு மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கடவுள் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காகவாவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீங்கள் இருவரும் இந்தக் கொடும் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள். உணவுக்கு நாங்கள் எங்கேபோவது” என்று கதறினார்கள்.

வானிலிருந்து பொழிந்த உணவு

அப்போது மக்களோடு எதிர்வாதம் புரியாமல் அமைதி காத்த மோசே வானத்தை இரக்கத்தோடு நோக்கினார். அவரது பார்வையைப் புரிந்துகொண்ட கடவுள், “ நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்குரியப் புனித உணவாக அது இருக்கும். ஒவ்வொரு நாளும் மக்கள் கூடாரத்தைவிட்டு வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, அடுத்துவரும் இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு கூடுதலாகச் சேகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

மோசே பசியால் வாடியிருந்த மக்களைப் நோக்கி, “இன்றிரவு நீங்கள் கடவுளின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளை காலை, கடவுளின் மகிமையை பாலைவனத்தின் மணல்மேல் உங்களுக்கான அப்பத்தைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள். இனி எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள். விடிந்ததும் எல்லா மக்களும் கூடாரத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகே பனிபடர்ந்திருந்தது. கதிரவன் தோன்றி பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். “இதுதான் கடவுள் வானிலிருந்து பொழியச் செய்த உணவா?” என்று கேட்க, மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. ஒவ்வொருவனும் அவரவருக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் சொல்லுகிறார்” என்றார். இஸ்ரவேல் மக்கள் அவ்வாறே செய்தார்கள்.

சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஆனால் அதிகப்படியாக உணவை எடுத்தவர்களை நோக்கி எச்சரித்த மோசே “ மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்று எச்சரித்தார். ஆனால் அதிகமாகச் சேகரித்தவர்களின் உணவு கெட்டுப்போனது.

உருகி மறைந்த உணவு

அடுத்த தினமே அதிகமாய் சேகரிக்கமுடியாதபடி இளவெயில் முடிந்து சூடு அதிகரித்ததும் கடவுள் தந்த உணவு உருகி மறைந்துபோனது. வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். சனிக்கிழமையன்று மோசே மக்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவரும் கூடாரத்தை விட்டு வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும்; ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். இந்த உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாளை ஓய்வு நாளாய் ஆக்கினார். அது புனிதமான நாள். எனவே பூமியில் கடவுள் பொழியச் செய்யும் புனித உணவு எதுவுமிராது.

அன்று நாம் அவரை மறக்கவே கூடாது” என்றார். மோசேக்கு தலையசைத்த மக்கள் அமைதியுடன் கலைந்து கூடாரங்களுக்குத் திரும்பினார்கள். அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். வானிலிருந்து கடவுள் மண்ணில் பொழியச் செய்ததால் அதை அவ்வாறு அழைத்தனர். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்த மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வெண்ணிற முதல்தரமான கோதுமை ரொட்டிக்கான அப்ப மாவு போன்று இருந்தது.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x