Last Updated : 16 Jun, 2016 11:56 AM

 

Published : 16 Jun 2016 11:56 AM
Last Updated : 16 Jun 2016 11:56 AM

சந்தத் தமிழ் பொழியும் திருப்புகழ்

ஜூன் 20: அருணகிரிநாதர் திருநட்சத்திரம்

இறைவனின் அருட்செயல்களால் உருவாகும் பாடல்கள் பல காலங்கள் வாழ்வதுண்டு என்பதற்குச் சான்று அருணகிரிநாதரின் திருப்புகழ். அவர் மேலும் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவற்றையும் இயற்றினார். முருக பக்தரான இவரது வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது.

பிறந்ததும் வளர்ந்ததும்

அருணகிரியின் தந்தை திருவெங்கட்டார், தாயார் முத்தம்மை. இவருக்குத் தமக்கை ஒருவர் உண்டு. இவர் பிறந்தது திருவண்ணாமலை என்று ஒரு சாராரும், காவிரிப்பூம்பட்டினம் என்று வேரொரு சாராரும் தெரிவிக்கின்றனர்.

தனது தமக்கையால் அருமை பெருமையாக வளர்க்கப்பட்ட அருணகிரிநாதர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட பின், குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கால் போன போக்கில் சென்றாராம். சாலையில் எதிரே வந்த பெரியவர், முருகனின் நாமமே திருமந்திரமெனக் கொள்ளுமாறு கூறி, சரவணபவ என்ற மந்திரத்தை ஜபித்துவந்தால் நோய் தீர்ந்து வாழலாம் என்று அறிவுறுத்தினார்.

மனதை ஒருமுகப்படுத்தி, மந்திரத்தை ஜெபிக்க இயலாமல் தவித்தார் அருணகிரி. தனக்கு இம்மந்திர ஜபம் வயப்படாதோ என்று மனம் வருந்திய அவர், விபரீத முடிவை எடுத்தார்.

வீழ்ந்தவர் எழுந்தார்

மனம் ஒருமைப்படாத நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தின் அடியில் அமர்ந்து பூஜித்துவந்த அவருக்கு மந்திரம் கைகூடவில்லை. அதே கோபுரத்தின் மீதேறித் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அங்கிருந்து தலை குப்புற விழத் தொடங்கினார். ஆனால் தரையை அவர் உடல் தொடும் முன் பன்னிரு கைகள் தாங்கின. `அருணகிரி, நில்’ என்ற அசீரீரி கேட்டுத் திகைத்த அருணகிரிக்குக் காட்சி அளித்தார் ஆறுமுகன்.

தனது வேலால் அருணகிரி நாவில் அவருக்கு வயப்படாத ‘சரவணபவ’ என்னும் மந்திரத்தை எழுதினார். பின்னர், அருணகிரிநாதா என்று அழைத்து பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். சித்தம் மயங்கிய அருணகிரி, சித்தம் தெளிந்து அருணகிரிநாதரானார் என்கிறது தல புராணம்.

சோதனையே சாதனை

கம்பத்தில் (தூணில்) காட்சி தந்த முருகன் வடிவம்

அருணகிரிநாதர் தன்னை முருக பக்தன் என்றும், முருகன் அருள் பெற்றவர் என்றும் கூறிக்கொள்வதாக அவர் மீது காழ்ப்புக் கொண்ட அமைச்சர், மன்னரிடம் புகார் கூறினார். மன்னனுடன் அருணகிரிக்கு இருந்த நட்பைக் குலைப்பதே அமைச்சரது எண்ணம். அப்போது விஜய நகர வம்சத்தைச் சேர்ந்த தேவராயன் மன்னனாக இருந்தான். அருணகிரியாரைக் குறித்து மன்னனுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இக்குற்றச்சாட்டை மக்கள் முன் தீர்த்துவைக்க நினைத்தான்.

முருகனடிமை எனக் கூறிக்கொள்ளும் அருணகிரி, மன்னன் முன் முருகனை வரவழைத்துக் காட்ட வேண்டும். பராசக்தியின் பக்தனான நான் பராசக்தியை வரவழைத்துக் காட்டுவேன். இதில் யார் ஒருவர் அவரது தெய்வத்தை வரவழைக்க முடியவில்லையோ அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றார் அமைச்சர்.

மன்னனுக்கு இந்தப் போட்டி மிகவும் பிடித்திருந்தது. முருகனையும், பராசக்தியையும் நேரில் காணலாம் என்று ஆனந்தம் கொண்டிருந்தான். ஒரு சுபயோக சுப தினத்தில் போட்டி துவங்கியது.

தேவி உபாசகர் அமைச்சர் சம்பந்தாண்டார் முதலில் தானே தேவியை வரவழைப்பதாகக் கூறினார். தேவியை அங்கே தோன்ற அதிகாரமாக உத்திரவிட்டார். அவரது அடக்கமின்மை காரணமாகவோ என்னவோ தேவி தோன்றவில்லை. கூட்டத்தினரிடையே அவமானம் ஏற்படுவதைக் கண்ட சம்பந்தாண்டார் பல முறை தேவிக்கு உத்திரவிட்டார். தோல்வியே மிஞ்சியது.

அருணகிரிநாதரோ அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பம் ஒன்றில் முருகன் எழுந்தருள வேண்டும் எனக் கோரி, அவ்விடம் நோக்கிச் செல்லத் தொடங்கினார். மன்னனும், மக்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். அவ்விடத்தை அடைந்த அருணகிரியார் முருகனின் பெருமை குறித்துத் திருப்புகழை பக்தி, சிரத்தையுடன் பாடத் தொடங்கினார்.

திருப்புகழ் நிறைவுற்றவுடன், கம்பத்திலே மயில் வாகனத்தில் முருகன் தோன்றினார். சோதனையைச் சாதனையாக்கினார் அருணகிரி நாதர். இந்தக் கதையின் அடையாளமாக இன்றும் கம்பத்து இளையனார் என்ற தூண் அண்ணா மலையார் கோயிலில் காட்சி அளிக்கிறது.

திருப்புகழ் ஆயிரத்து முன்னூற்றி ஏழு இசைப் பாடல்களைக் கொண்டது. இதில் ஆயிரத்து எண்பத்தெட்டு வகையான சந்த வேறுபாடுகள் உள்ளன என்பது இந்நூலின் பெருஞ்சிறப்பு.

கம்பத்து இளையனார் கோயில்.

இந்தியத் தபால்துறை 1974 ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி அருணகிரிநாதர் உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலையை வெளியிட்டு அவரை கெளரவித்தது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x