Published : 19 Jan 2017 10:48 AM
Last Updated : 19 Jan 2017 10:48 AM
சீகோன், ஓக் ஆகிய மன்னர்களை வென்ற இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்தனர். அவர்களது அடுத்த இலக்கு மோவாப்பின் அரசனாகிய பாலாக்கைத் தோற்கடிப்பதாக இருந்தது. அதனால் யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். இஸ்ரவேலர்களின் பலத்தையும் போர் திறத்தையும் அறிந்த பாலாக் ஒரு தந்திரம் செய்தான். பெத்தூரில் செல்வாக்குடன் வசித்துவந்த பிலேயாம் என்பவனை அழைத்து, போரில் இஸ்ரவேலர்கள் தோற்கும்படியாக, அவர்களை சபிக்கும்படி கூற, தனது தலைவர்களை அனுப்பி அவனை அழைத்து வரும்படி கூறினான். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே பிலேயாமிடம் கடவுள் பேசினார். “என் மக்களுக்கு எதிராக நீ எதையும் கூறக் கூடாது” என்று கட்டளையிட்டார்.
கடவுளின் கட்டளையை மீற மாட்டேன்
கடவுளுக்குப் பணிந்த பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம் பேசும்போது, “என் தேவனாகிய கடவுளுக்கு நான் அடிபணிய வேண்டும். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று பதில் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினான். என்றாலும் பாலாக்கைப் பார்க்க கிளம்பிச் சென்றான். ஆனால் வழியில் பிலேயாமின் கழுதையைக் கடவுள் பேசும்படி செய்தார்.
அவனது கழுதையை ஒளிரும் வாளுடன் வழிமறித்து நின்ற தேவதூதன் பிலேயாமின் கண்களுக்குக் காட்சியளித்ததும் கடவுளின் வல்லமையைப் புரிந்துகொண்டான் அந்தக் சாப நாக்குக்காரன். தேவதூதனைப் பார்த்து, “ஐயோ, நான் பாவம் செய்துவிட்டேன். வழியிலே நீர் நின்றுகொண்டிருந்தது எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறான். அதன் பிறகு தேவதூதன் பிலேயாமுக்கு வழி விடுகிறார். பாலாக்கை சந்தித்தபின், பிலேயாம் இஸ்ரவேல் மக்களைச் சபிக்க முயலுகிறான். ஆனால் அதற்குப் பதிலாக அவன் வாயாலேயே இஸ்ரவேலை மூன்று முறை ஆசீர்வதிக்கும்படி கடவுள் செய்துவிடுகிறார்.
புதிய தலைமை
இப்போது இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்துக்குள் நுழையத் தயாராகி விட்டார்கள். இதுவரை அவர்களது வழிகாட்டியாகவும் கடவுளாகிய யகோவா தேர்ந்துகொண்டவராகவும் விளங்கிய மோசேவும் தனது ஜனங்களுடன் கானானுக்குள் செல்ல விரும்பினார். எனவே கடவுளிடம், ‘ கர்த்தரே..யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தைப் பார்ப்பதற்கேனும் என்னை அனுமதியும்” என்று கெஞ்சி மன்றாடினார். ஆனால் கடவுள் கோபத்துடன் மறுத்தார்.
மோசே கற்பாறையை அடித்து நீரை வரவழைத்தபோது மோசேயும் ஆரோனும் அது கடவுளின் கிருபை என்ற உண்மையை மக்களுக்கு அறிவிக்கவில்லை. அச்செயலைத் தங்ளுடைய கீர்த்திபோன்று காட்டிக்கொண்டார்கள். தன்னை மதிக்காமல் தான்தோன்றிகளாக நடந்துகொண்ட அச்செயலுக்கான தண்டனையாகவே மோசேவை கானானுக்குள் அனுமதிக்க கடவுள் உறுதியாக மறுத்தார்.
பின்னர் மோசேயை அழைத்த கடவுள், “யோசுவாவை அழைத்து வந்து, தலைமைக் குருவாகிய எலெயாசாருக்கும் மக்களுக்கும் முன்பாக அவனை நிறுத்தினார். இனி யோசுவாவே இஸ்ரவேலர்களின் புதிய தலைவர் என்று அவர்களுக்குச் சொல்” என கட்டளையிட்டார். கடவுள் கூறியபடியே மோசே யோசுவாவைப் புதிய தலைவாரக அறிவித்தார். பின்பு யோசுவாவுக்கு மனத்திடத்தையும் உறுதியையும் வழங்கும்விதமாக அவரோடு பேசிய கடவுள், “அஞ்சாதே, நான் உன்னோடு கூடவே இருப்பேன். தைரியமாக இரு. இஸ்ரவேலருக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிற கானான் தேசத்துக்குள் நீ அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்வாய்” என்றார்.
மோசேவின் இறுதி நாட்கள்
யோசுவா தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டபின் மோவாப் நாட்டிலிருந்த நேபோ மலையின் உச்சிக்கு ஏறி வருமாறு மோசேயிடம் கூறினார் கடவுள். மலை மீது ஏறி, பின்னர் அங்கிருந்து பார்த்தபோது யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த கானான் தேசத்தின் செழிப்பையும் அழகையும் மோசேயினால் பார்க்க முடிந்தது. அப்போது கடவுள் அவரிடம் “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் பிள்ளைகளுக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த தேசம் இதுவே. அதை இங்கிருந்து பார்க்க உன்னை அனுமதிக்கிறேன்” என்றார்.
கானானுக்குச் செல்ல முடியாவிட்டாலும் நதிக்கரையின் இக்கரையிலிருந்து அந்தத் தேசத்தைக் கண்ட மோசே, அந்த மலையின் மீதே தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு 120 வயது. மோசேவின் இறப்புக்காக 30 நாட்கள் தூக்கம் அனுசரித்த மக்கள், அந்த மாபெரும் இழப்பிலிருந்து மீண்டனர். மோசே இறந்துவிட்டாலும் தங்களுக்குப் புதிய தலைவர் கிடைத்துவிட்டதில் நிம்மதியடைந்தனர்.
எரிக்கோவை நோக்கி இருவர்
இப்போது இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் செல்ல தயாராக இருக்கிறார்கள். எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரை வீழ்த்தி, கானானுக்குள் நுழைய யோசுவா திட்டமிட்டார். அதற்காக இரண்டு வேவுக்காரர்களை எரிக்கோவுக்கு அனுப்புகிறார். அவர்களிடம், “ நீங்கள் போய் எரிக்கோ பட்டணத்தையும் அதன் நிலப்பகுதி யையும் பார்வையிட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். எரிக்கோ பட்டணத்துக்குச் சென்ற அவர்களுக்கு உதவ முன்வந்தாள் ஒரு பெண்.
இப்போது இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் செல்ல தயாராக இருக்கிறார்கள். எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரை வீழ்த்தி, கானானுக்குள் நுழைய யோசுவா திட்டமிட்டார். அதற்காக இரண்டு வேவுக்காரர்களை எரிக்கோவுக்கு அனுப்புகிறார். அவர்களிடம், “ நீங்கள் போய் எரிக்கோ பட்டணத்தையும் அதன் நிலப்பகுதி யையும் பார்வையிட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். எரிக்கோ பட்டணத்துக்குச் சென்ற அவர்களுக்கு உதவ முன்வந்தாள் ஒரு பெண்.
(பைபிள் கதைகள் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT