Published : 14 Jul 2016 12:31 PM
Last Updated : 14 Jul 2016 12:31 PM
பொய்மை, ஏமாற்று தில்லுமுல்லுகள் கலக்காமல் செய்யும் வணிகத்தால் ஈட்டப்படும் வருவாயே மற்ற எல்லா வருவாயை விடவும் சிறந்ததாகும்.
பொய்ப் பித்தலாட்டங்கள் செய்து பொருளீட்டும் வணிகர்களிடம் மறுமை நாளில் இறைவன் பேச மாட்டான். அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து சுவனத்தில் நுழையவும் விட மாட்டான். பொய் சத்தியம் செய்து ஈட்டப்படும் வருமானம் ஆரம்பத்தில் வளர்ச்சியைப் போலத் தெரிந்தாலும், உண்மையில் அது வணிகத்தின் வளர்ச்சியைக் குன்றச் செய்துவிடும்.
நாணயமான வணிகன் மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள் இவர்களுடன் எழுப்பப்படுவான். நுகர்பொருளின் தரத்தை உறுதிப்படுத்துவது நுகர்வோரை அதிகரித்துத் தரும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும்.
“எவர் வணிகத்தில் மென்மையையும் நல்லொழுக்கத்தையும் பின்பற்றிவருகிறாரோ அத்தகையவர்களிடம் இறைவன் கருணை காட்டுவான்!” என்ற நற்செய்தியைத் தெரிவிக்கிறார் நபிகளார்.
ஒருமுறை மதீனாவின் கடைவீதியில் நபிகளார் நடந்து சென்றார்.
வழியில் தானியக் குவியல் ஒன்றைக் கண்டார். சட்டென்று நின்றவர் தானியக் குவியலுக்குள் கையை விட்டுத் தானியங்களை அள்ளினார். அத்தனையும் ஈரமாக இருப்பதைக் கண்டு முகம் சுளித்தார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த வணிகர், “இறைவனின் திருத்தூதரே! எதிர்பாராத விதமாகப் பெய்த மழையில் இந்தத் தானியக் குவியல் நனைந்துவிட்டது!” என்று விளக்கமளித்தார்.
“அப்படியானல், இவற்றை வாங்க வருபவரிடம் இதன் உண்மையான தரத்தைத் தெரிவித்து விற்பனை செய்யுங்கள்” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
விலையேற்றத்துக்காக உணவுப் பொருட்களைப் பதுக்கிவைத்து மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் வணிகரை நபிகளார் பாவிகள் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.
அதேபோல, அளவைகளில் மோசடி செய்பவருக்குக் கேடுதான் என்று திருக்குர்ஆனும் சாடுகிறது.
வணிகத்தில் அறியாமல் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக அதிகமாக தான, தர்மங்கள் செய்யும்படியும் நபிகளார் அறிவுறுத்துகிறார்.
சிறந்த வணிகர் யார்?
l நுகர்வோர் நலன் நாடுபவர்
l வணிகத்தில் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பவர்
l பணியாளர்களுடன் இணைந்து கடுமையாக உழைப்பவர்.
l பணியாளரிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்பவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT