Published : 27 Apr 2017 10:15 AM
Last Updated : 27 Apr 2017 10:15 AM
இஸ்ரவேல் மக்களினத்தில் எத்தனையோ மாவீரர்கள் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் சிம்சோன். இஸ்ரவேலர்களுக்கு 20 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தார். அவரது கதை பலகீனத்தால் வீழ்ந்த வீரனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிம்சோன் இளைஞராக இருந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் மீண்டும் தீயசெயல்களில் ஈடுபடுவதைக் கடவுள் கண்டார். எனவே பெலிஸ்தியர் என்ற அந்நிய நாட்டினர் கானான் நாட்டைக் கைப்பற்றி அவர்கள் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்தார். இதனால் மீண்டும் நிம்மதியற்ற வாழ்க்கையை இஸ்ரவேலர்கள் எதிர்கொண்டனர்.
ஆயுதமின்றி சிங்கத்தை அடக்கியவன்
இஸ்ரவேல் ஆகிய கானான் நாட்டில் சோரா என்னும் ஊரில் மனோவா என்ற மனிதர் வசித்துவந்தார். அவர், தாண் கோத்திரத்தைச் சார்ந்த இஸ்ரவேலர். மனோவாவின் மனைவி, குழந்தைகளின்றி பெரிதும் துயருற்றாள். அப்போது கடவுளின் தூதன் அவளுக்குத் தோன்றி, “உனக்கொரு மகன் பிறப்பான். அவனைக் கடவுள் தனக்கானவனாகத் தேர்ந்துகொள்வார்; அதுமட்டுமின்றி அவன் பெலிஸ்தியரை வீழ்த்தி இஸ்ரவேல் மக்களைத் தலைநிமிரச் செய்வான். அவனது தலைமுடியை மட்டும் வெட்டவேண்டாம்” என்று வாக்குறைத்தார். அவ்வாறு மனோவானின் மனைவி சிம்சோனைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து இளைஞனாக மாறியதும் மிகப் பலம்பொருந்திய வீரனாக இருந்தான்.
சிம்சோன், திம்னாத் என்னும் நகரத்துக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். அவளது அழகில் மயங்கிய அவன், அவளை மணந்துகொள்ள விரும்பினார். பெற்றோரோ எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வற்புறுத்திய சிம்சோன், திம்னாத் நகரத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றான். அவனது பெற்றோர் மகன் விரும்பிய பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள். சிம்சோன் சற்றுபின்னால் வந்துகொண்டிருந்தான். அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்கியபோது ஒரு இளம் சிங்கம் திடீரென கர்ஜித்தபடி சிம்சோனை நோக்கிப் பாய்ந்தது.
அப்போது கடவுள், சிம்சோனுக்கு பெரும் ஆற்றலை வழங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு வீரனாக இருந்தவனின் திருமணவாழ்வு தோல்வியில் முடிந்தது. இருப்பினும் பெலிஸ்தியருக்கு பெரும் சவாலாகவும் வெல்லமுடியாதவனாகவும் சிம்சோன் இருந்தான். அவனை எப்படியாவது கொல்லவும் அவனது உடல்பலத்தின் ரகசியத்தை அறிந்து அவனை வீழ்த்தவும் பெலிஸ்தியர்கள் வழிதேடிக்கொண்டிருந்தார்கள்.
காதலால் வீழ்ந்த வீரன்
இந்தச் சமயத்தில் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பேரழகான பெண்ணை காதலித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள். தெலீலாளின் அழகின் வல்லமை ஒரு மாவீரனையே மண்டியிடவைக்கிறதே என்று பெலிஸ்தியர்களின் தலைவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தெலீலாளை வைத்து அவனது வீரத்தின் பின்னணியை அறிந்துகொள்ள முடிவு செய்தார்கள். உடன் அவர்கள் தெலீலாளின் பலகீனங்கள் பற்றி விசாரித்தார்கள். அவள் மிகுந்த பொருளாசை மிக்கவள் என்பதைத் தெரிந்துகொண்டவர்கள் அவளைச் சந்தித்தனர். “ தெலீலாளே… சிம்சோனைப் பலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம்.
அவனது அந்த ரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்து நாங்கள் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். அவனும் உன்னைவிட்டு அகலாமல் இருப்பான். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளிக்காசுகளை(1,100 வெள்ளிகள்) கொடுப்போம்” என்று விலைபேசினார்கள். ஒரு சிறு காரியத்துக்காக இவ்வளவு பணமா என்று தெலீலாள் பேராசை கொண்டாள். அப்போதுதான் சிம்சோன் மீது தனக்கு இருப்பது காதல் அல்ல என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். அவள் இஸ்ரவேல் மக்களையும் விரும்பாதவள். எனவே பணத்துக்காக பெலிஸ்தியர்களுக்கு உதவும்பொருட்டு சிம்சோனை, “உங்களுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது” எனக்கேட்டு அவனைச் சதா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அவளது நச்சரிப்பு தாங்கமுடியாமல் ஒருநாள் உண்மையை உரைத்தான் சிம்சோன்.
சிறையில் வாடிய சிங்கம்
“இதுவரை எனது தலைமுடியானது வெட்டப்பட்டதே இல்லை. என் கடவுளாகிய யகோவா என்னை மக்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனது பலம் முழுவதும் எனக்கு அவர் தந்ததே. என் தலைமுடியை வெட்டினால், என் பலமெல்லாம் போய்விடும். இதை ரகசியமாக வைத்துக்கொள்” என்று கூறினான். ரகசியம் தெரிந்ததும் அவனைத் தனது மடியில் தலைசாய்க்க வைத்து அவனைச் சுகமாய் தூங்க வைத்தாள். பின்பு பெலிஸ்தியர்களுக்கு தகவல் அனுப்பினாள். அவர்கள் ஒரு ஆளை அனுப்ப அவனை உள்ளே கூப்பிட்டு சிம்சோன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனது முடியை வெட்டிவிடுகிறாள்.
சிம்சோன் தூங்கியெழுந்தபோது தன் பலம் முழுவதும் போயிருப்பதை உணர்ந்தான். அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து அவனைக் கைது செய்து காசா நகரத்தின் சிறையில் அடைக்கிறார்கள். அத்தோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. இரக்கமற்று அந்த மாவீரனின் இரண்டு கண்களையும் பிடுங்கி, அவனது கண்களின் ஒளியைப் பறித்துக்கொண்டு அடிமையாக ஆக்குகிறார்கள். அவன் சிறையிலிருந்து தப்பித்துவிடாதபடி அவனுக்கு விலங்கிட்டு சிறையில் அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். ஆனால் சிம்சோனின் தலைமுடி மீண்டும் வளர ஆரம்பித்தது.
சரிந்து விழுந்த அரண்மனை ஆலயம்
ஒருநாள் பெலிஸ்தர்கள் தங்கள் கடவுளான தாகோனுக்கு ஒரு பெரிய விருந்து கொண்டாடுகிறார்கள். அது சிம்சோனை வென்றுவிட்டதைக் கொண்டாடும் விருந்து. அந்த விருந்துக்கு பெலிஸ்தியர்களின் அனைத்துத் தலைவர்கள், தளபதிகள், முக்கியஸ்தர்கள் உட்பட மூவாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். அந்த விருந்தில் அவர்கள் சிம்சோனை கேலி செய்து சந்தோஷப்பட அவனைச் சிறையிலிருந்து கொண்டு வருகிறார்கள். இப்போது சிம்சோனின் முடி மறுபடியும் வளர்ந்துவிட்டது மட்டுமல்ல; தன் பலகீனத்தால் இஸ்ரவேலர் மக்களுக்கு அவநம்பிக்கையாக மாறிவிட்டதை எண்ணி வருந்தினான். இதனால் பெரிய மனமாற்றம் அடைந்திருந்த அவன், பரலோகத் தந்தையாகிய கடவுளை நோக்கி மனதுக்குள் மன்றாடினான்.
அந்த விருந்து நடத்த அரண்மனையின் ஆலய மண்டபத்துக்கு இழுத்துவந்த சிறைக் காவலாளியிடம், “ இந்தப் பெரிய கட்டிடத்தை என்னால் பார்க்கமுடியாது. ஆனால் தூண்களையாவது நான் தொட்டுப் பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார். பின்பு கடவுளிடம் தனக்குப் பலம் தரும்படி ஜெபித்துவிட்டு அந்தத் தூண்களை தனது கரங்களால் தள்ள ஆரம்பித்தபடியே “ பரலோகத் தந்தையே… இந்தப் பெலிஸ்தியரோடு சேர்ந்து நானும் செத்துப்போகிறேன்” என்று சத்தமாய்க் கத்திச் சொல்லிவிட்டு தன் முழு பலத்தையும் ஒருங்கே திரட்டி அந்தத் தூண்களைச் சாய்த்தான், அப்போது அந்த பிரம்மாண்டக் கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கே விருந்து கொண்டாடிக்கொண்டிருந்த அத்தனை தீயவர்களும் கட்டிடத்தில் நசுங்கி மாண்டுபோனார்கள். தன் சாவின் வழியே இஸ்ரவேலர்களைக் காத்த சிம்சோனின் உடலை எடுத்துவந்து சோரா என்ற நகரத்துக்கு அருகில் இருந்த அவனது தந்தையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தனர்.
(பைபிள் கதைகள் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT