Published : 14 Mar 2014 12:26 PM
Last Updated : 14 Mar 2014 12:26 PM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா: இன்று அறுபத்து மூவர் திரு உலா

சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடந்தது. இந்த தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட சிவனடியார்கள் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தின் பங்குனி திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 10 நாட்களாக நடக்கும் இந்த திருவிழாவில் அதிகார நந்தி, வெள்ளிவிடை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார்.

பங்குனிப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடந்தது. கபாலீஸ்வரர் கோயிலில் காலை 8.30 மணியளவில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைக்கு பிறகு திருத்தேர் வடம்பிடித்தல் தொடங்கியது. முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வந்ததார். வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலர், சண்டிகேஸ்வரர் தேர்கள் கபாலீஸ்வரரை பின் தொடர்ந்தன.

மயிலை மாட வீதியில் வலம் வந்த திருத்தேரினை காண சாலையோரங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதை யடுத்து இன்று மதியம் 2.55 மணியளவில் அறுபத்துமூவர் உலா நடக்கவிருக்கிறது.

மருந்தீஸ்வரர் தேரோட்டம்

இதேபோல் திருவான்மியூரில் உள்ள பிரசித்திபெற்ற மருந்தீஸ்வரர் ஆலயத்திலும் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாதர் கோவில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடந்தது. கோதண்டராமர் கோவில் தெரு வழியாக இழுத்து வரப்பட்ட தேரிலிருந்த காசி விஸ்வநாதரை நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x